தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுமை சிறப்புமிக்க கொம்புத்துறை

Go down

புதுமை சிறப்புமிக்க கொம்புத்துறை Empty புதுமை சிறப்புமிக்க கொம்புத்துறை

Post  meenu Sat Mar 09, 2013 1:00 pm

மன்னார் கடலோரத்தில் காயல்பட்டணத்திற்கு அருகில், ‘சந்த எஸ்தேவோன்’ குருசடி என்னும் கொம்புத்துறை, புனித சவேரியாரின் காலத்தில் வளமும் வனப்புமிக்க ஒரு சிறு கிராமமாகத் திகழ்ந்தது.

புனித சவேரியாரின் இதயத்தில் அது தனி இடம் பெற்றிருந்தது. அவரின் அன்புப் பார்வையால் கனிந்து, விசுவாச மணம் வீசும் இனிய சோலையாக விளங்கிற்று. இவ்வூரில் முன்னொரு காலத்தில்

வாழ்ந்த ‘கரையர்’ என்ற மக்களுக்கு புனித சவேரியார் தனது கரங்களால் 1542ம் ஆண்டில் திருநீராட்டு வழங்கினார். அதுமுதல் இவ்வூர் மக்களை புனித சவேரியார் அடிக்கடி சந்தித்து வந்தார். இங்கு

திருப்பலியும் வழிபாடும் நிகழ்த்தினார். அவரது முயற்சியினாலேயே இவ்வூரில் முதன்முதலாக கூரைவேய்ந்த குடிசைக் கோயிலொன்று உருவானது. கொம்புத்துறை மக்களுக்குப் பெரியதோர் ஆலயம்

வேண்டும் என்பதை உணர்ந்த புனித சவேரியார் அதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டார். புதிய ஆலயத்திற்கான பணி செய்துகொண்டிருந்த இயேசு சபைச் சகோதரர் மான்சிலாஸ்

என்பவருக்குப் பல மடல்கள் எழுதி, கொம்புத்துறைக்குச் சென்று மக்களுக்கு மறைபோதகம் செய்யும்படியும் அங்கு அழகிய ஆலயம் ஒன்று எழுப்ப ஆவன செய்யும்படியும் வலியுறுத்தினார்.

அவ்வேளையில் வியாபார நோக்குடன் கொம்புத் துறையில் வந்து தங்கி இருந்தார், மனுவேல் டிகுருஸ் என்ற போர்த்துக்கீசிய தனவந்தர். கொம்புத்துறையின் புதிய ஆலய கட்டிட மேற்பார்வையை புனித

சவேரியார் அவரிடம் ஒப்படைத்தார். மேலும், அவருக்குத் துணையாக தனது உடன் ஊழியர் ஒருவரையும் மணப்பாட்டிலிருந்து அனுப்பி வைத்திருந்தார். அது மட்டுமல்ல, ஆலய கட்டிட நிதிக்காக

கொம்புத்துறை ஊரைச் சார்ந்த, மனுவேல் டிலீமா என்ற பெரிய தனவந்தரிடமிருந்து 100 பணம் என்ற பெருந்தொகையையும் வாங்கிக் கொடுத்தார்.

கொம்புத்துறை ஆலயத்தின் மீது புனித சவேரியார் மிகுந்த அக்கறையும் பற்றும் கொண்டிருந்ததை, மணப்பாடு ஊரிலிருந்து மான்சிலாஸ் சகோதரருக்கு 1544ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் எழுதிய

மூன்று மடல்களிலும் விளிப்பட்டது. கொம்புத்துறை ஆலயக் கட்டிடத்தைப் பற்றி வெகு அக்கறையோடு விசாரித்திருக்கிறார்; அதனை விரைவில் முடிக்கும்படி வருந்திக் கேட்டிருக்கிறார். புனித

சவேரியாரின் தனிப்பட்ட முயற்சியினால் உருவான கொம்புத்துறை புதிய ஆலயமானது திருச்சபையின் முதல் வேதசாட்சியான ‘புனித முடியப்பருக்கு’ (சந்த எஸ்தேவோன்) அர்ப்பணிக்கப்பட்டது. புனித

சவேரியாரின் காலத்திலிருந்தே இவ்வாலயம் முத்துக்குளித்துறையில் தலை சிறந்த யாத்திரைத் தலமாக விளங்கிற்று. வியாபார நோக்குடன் அருகேயுள்ள காயல்பட்டணம் துறைமுகத்திற்கு வரும்

போர்த்துக்கீசியர் பலரும் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் வழிபாடு நிகழ்த்தி வந்தனர். புனித சவேரியாரின் தனிப்பட்ட அன்பினால் மாண்புற்று விளங்கிய கொம்புத்துறையானது, அவர் செய்த

மகத்தான ஒரு புதுமைக்குப் பிறகு மேலும் புகழ்மிக்க ஒரு திருத்தலமாக விளங்க ஆரம்பித்தது. அந்தப் புதுமை இதுதான்: 1544ம் ஆண்டில் ஒருநாள் புனித சவேரியார் கொம்புத்துறையில் புனித

முடியப்பர் பெயரால் உருவாகியிருந்த புதிய ஆலயத்தில் திருப்பலிப்பூசை நிறைவேற்றுவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் திடீரென ஆலயத்திற்கு வெளியே அழுகை ஓலமும் பெரும்

சப்தமும் கேட்டன. என்னவென்று அறிய சவேரியாரும் ஆலயத்தில் குழுமியிருந்தவர்களும் வெளியே ஓடிவந்தனர்.

ஆலயத்திற்கு நேர் எதிரே சில அடிதூரத்தில் கிணறு ஒன்று இருந்தது. அதன் சுற்றுச்சுவரானது தரையோடு தாழ்ந்து இருந்தது. சிறுவன் ஒருவன் அக்கிணற்றுக்குள்ளே தவறி விழுந்து, தண்ணீரில்

அமிழ்ந்து இறந்து விட்டான். அவனைப் பெற்ற தாய் கதறித் துடித்தாள். சவேரியாரின் காலடியில் வந்து வீழ்ந்தாள்; அழுதாள்; புலம்பினாள்; தன் மகனுக்கு உயிர்பிச்சை அருளும்படி அவரை மன்றாடினாள்.

சிலர் சிறுவனின் சடலத்தைத் தூக்கி வந்து சவேரியாரின் பாதத்தில் வைத்தனர். இறந்த சிறுவனின் தாயின் கண்ணீரைக் கண்டு மனமுருகிய சவேரியார் சிறுவனின் சடலத்தருகில் முழந்தாளிட்டு

கண்களை உயர்த்தி சிறிது நேரம் ஜெபித்துவிட்டுப் பின்னர் திருவிவிலிய வாசகம் ஒன்றை வாசித்தார். சிறுவனின் கையைப் பிடித்து, கடவுளின் பெயரால் எழுந்திருக்கும்படி பணித்தார். உடனே சிறுவன்

உயிர் பெற்று எழுந்தான். சூழ்ந்து நின்றவர்கள், ‘புதுமை! புதுமை!’ என அலறினர்.

புனித சவேரியாரின் காலத்தில் வாழ்ந்த பலரும் இப்புதுமைக்குச் சான்று பகர்ந்துள்ளனர். புனித சவேரியாருக்கும் ‘புனிதர்’ பட்டம் வழங்குவதற்கு ஆயத்தமாக அவரது வாழ்க்கை வரலாறு பற்றி 1616ம்

ஆண்டு கொச்சியில் நடைபெற்ற விசாரணையின்போது கொம்புத்துறையைச் சேர்ந்த பவுல்வாஸ், புன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோணி செர்க்குய்ஸ், தூத்துக்குடியைச் சேர்ந்த தியோகோ பெர்னாண்டஸ்,

வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்த பேதுரு பெர்னாண்டஸ் ஆகியோர் மேற்கண்ட புதுமை உண்மையெனச் சாட்சியம் கூறினர். புனித முடியப்பரைப் பாதுகாவலராகக் கொண்டிருந்த கொம்புத்துறை

ஆலயம், புனித சவேரியார் செய்த இம்மாபெரும் புதுமைக்குப்பின் இன்னும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கிற்று. கொம்புத்துறை திருத்தலத்தைச் சந்திக்க வந்த மக்கள் இவ்வாலயத்திற்கு ஏராளமான

காணிக்கைப் பொருட்களை வாரி வழங்கினர். அதனால் இக்காணிக்கையைக் கொண்டே 1644ம் ஆண்டில் இயேசு சபைக் குருக்கள் இங்கு புதியதோர் ஆலயத்தை உருவாக்கினர். புதுமைச் சிறப்புமிக்க

கொம்புத்துறை ஆலயத்தைத் தேடி மக்கள் இன்றும் திரளாக வருகின்றனர். புனித சவேரியாரின் புதுமை நிகழ்ந்த கிணற்றைக் கண்டு பேரின்பம் கொள்கின்றனர். புனித முடியப்பரின் பீடத்தை அணுகி வரம்

கேட்கின்றனர். இவ்விரு புனிதர்களின் வழியாக இறைவன் தங்களுக்கு அருளிய கொடைகளுக்கு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க கொம்புத்துறை ஆலயம் சிலகாலம்

வீரபாண்டியன் பட்டணம் பங்கின் பாதுகாப்பில் இருந்தது. இன்று மீன்பிடித் தொழிலை முன்னிட்டு பல கடலோரக் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து கொம்புத்துறை கடலோரத்தில் இல்லங்கள் அமைத்து

வாழும் கிறிஸ்தவ மக்களின் பக்திப் பெருக்கினாலும் தாராள உதவியினாலும் கொம்புத்துறைத் திருத்தலம் தனது பழைய செல்வாக்கை மீண்டும் பெற்று ஒரு தனிப் பங்காக இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஜனவரித் திங்கள் 2ம் நாள், புனித முடியப்பரின் திருநாள், இங்கு பக்தி சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum