தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதினாறு செல்வங்களும் அருளும் புவனேஸ்வரி

Go down

 பதினாறு செல்வங்களும் அருளும் புவனேஸ்வரி Empty பதினாறு செல்வங்களும் அருளும் புவனேஸ்வரி

Post  meenu Sat Mar 09, 2013 12:30 pm

காலமாக விரிந்தவள் காளி. தலமாக விரிந்தவள் புவனேஸ்வரி. கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் புவனேஸ்வரியே. புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் இல்லாத மந்திரமே இல்லை எனலாம். தேவி புவனேஸ்வரி வசிக்கும் இடம் மணித்வீபம் எனப்படுகிறது. உலகங்கள் எல்லாம் உருவாகக் காரணமாகிய புவனேஸ்வரி உலகங்களைப் படைப்பதற்கு முன்தான் தங்குவதற்குரிய இடம் வேண்டுமென எண்ணி அந்த நினைப்பிலேயே இந்த மணித்வீபத்தைப் படைத்தாள். நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டது இந்த த்வீபம். மூவுலகிலும் இதற்கு ஈடான அழகு வாய்ந்த நகரம் கிடையாது. அமுதமயமான கடலின் நடுவில் உள்ள இத்தீவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரரின் மடியில் அமர்ந்து அருள்கிறாள்.

ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசிய ஸ்தனங்கள், சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள். லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள். விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள்.

ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ. ஹ்ரீம் மந்திரத்தால் புகழப்படுபவள். புவனேஸ்வரரின் பத்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள். தேவியின் கையிலுள்ள பாசம் தன்னை நாடி வரும் பக்தியுள்ளத்தை தன் பால் இழுத்து இறுகக் கட்டி விடுகிறது. பா என்ற தாதுக்குக் காத்தல் என்றும் எங்கும் நிறைந்திருத்தல் என்றும் பொருள். எது பிரபஞ்சத்தைக் காத்து, அதன் அனைத்திலும் நிறைந்திருக்கிறதோ அதுவே பாசம். பாசம் எனில் ஆசையையும் குறிக்கும்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ராகஸ்வரூப பாசாட்யா எனும் நாமத்தில் ஜீவன்களின் கட்டும் தளையாயுள்ளது பாசம் எனக் கூறப்பட்டுள்ளது. பிறரைக் கட்டுப்படுத்தும் பாசத்தை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன் என்பதைக் குறிக்கவும் கட்டுண்டு கிடக்கும் ஜீவன்களை விடுவித்து முக்தியளிக்கத் தன்னால் முடியும் என்பதைக் குறிக்கவும் அன்னை புவனேஸ்வரி பாசம் ஏந்திய கரத்தினளாய் துலங்குகிறாள். அங்குசம் பக்தர்களின் அகந்தையை அடக்கி
விடுகிறது. ஜீவராசிகள் குரோத உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். பெரிய மகரிஷிகள் கூட தடுமாறி குரோதத்தில் விழுந்த வரலாறுகள் உண்டு. ஜீவன்களைத் தன் வயப்படுத்தும் குரோதத்தை ஈஸ்வரி தன்வயப்படுத்தி வைத்துள்ளாள். யானையின் மதத்தை அடக்க அதன் பாகனிடம் அங்குசம் இருப்பதைப் போல ஜீவன்கள் கர்வம், அகங்காரம் அடக்கி சாந்தப்படுத்தவே புவனேஸ்வரி தன் கரங்களில் அங்குசத்தைத் தாங்கியுள்ளாள்.

‘அம்’ ஆத்மாவையும் ‘கு’ சரீரத்தையும் ‘ச’ மீண்டும் மீண்டும் என்ற பொருளையும் உணர்த்தும். எது சரீரங்களைக் கொண்டு வந்து ஆத்மாவில் இணைக்கிறதோ அதற்கு அங்குசம் என்று பெயர். வரத முத்திரை ‘என் பாதாரவிந்தமே என்றும் கதி என இரு’ என்பதைக் கூறாமல் கூறுகிறது. மேலும் சக்தியுடையவள்தானே கேட்டவற்றையெல்லாம் தரமுடியும்! எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள், ஜீவராசிகள் வேண்டியதை அளிக்கச் சித்தமாயுள்ளாள் என்பதை வரத முத்திரை குறிக்கிறது. பயம் வந்தால் அதைப்போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள். அந்த அபய கரத்தை நினைத்த மாத்திரத்தினாலே சம்சார சூழலில் அகப்படும் பெரிய ஆபத்தினின்றும் விடுபட முடியும். பிறவித் துன்பமே தொலைந்துவிடுகிறது. உதிக்கும் ஆயிரம் சூரியனுக்குச் சமமான செந்நிற ஒளியுடையவள். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் கடார்க்களம் எனும் யந்திரத்தின் மீது தன் செந்தாமரைப் பாதங்களைப் பதித்தருள்பவள்.

பிறைச் சந்திரனின் கிரணங்களால், அழகிய மணிகளால் ஆக்கப்பட்ட கிரீடத்தைத் தரித்தவள். லலித ரூபத்துடன் பிரகாசிப்பவள். ஜகஜ்ஜனனியான புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சக்தியின்றி உலகம் படைக்கப்படவில்லை. ஸ்ரீமாதாவான தேவி ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் பிரமாண்டத்தில் உள்ள அனைத்தையுமே படைத்துக் காத்து ரட்சித்து வருபவள். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ஆப்ரஹ்மகிரீடஜனனீ என்று போற்றுகிறது. மேலும், கருணையில் கடல் வடிவானவள் என்பதை கருணார ஸாகரா எனும் நாமம் உணர்த்துகிறது. மனிதர்கள் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத கொடிய தவறுகளையும் மறந்து மன்னித்து தடுத்தாட்கொண்டு ரட்சிக்கும் கருணை இந்த புவனமாதாவான புவனேஸ்வரி தேவிக்கு உண்டு. சகல அண்டங்களில் உள்ள சக்திகளுக்குக் காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருப்பவள் இந்த புவனேஸ்வரி.

சகல புவனங்களையும் நியமித்து நடத்தும் புவனேஸ்வரி தசமகாவித்யா தேவிகளுள் நான்காவது வடிவம் கொண்டவள். இவள் பரம்பொருளின் ஞான சக்தி. அனைத்திற்கும் ஆதாரமான ஆகாசதத்துவமே இவள் திருவுருவம். தேவி மஹாத்மியத்தில் தேவர்கள் தேவியைத் துதிக்கும் நமோதேவ்யை என ஆரம்பிக்கும் துதியில் ‘நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’ என ஐந்து முறை வருகிறது. பராசக்தி பஞ்சபூதங்களிலும் உறைபவள். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என ஐம்பெரும் தொழில்களையும் புரிபவள். எனவேதான் தேவர்கள் அவளை ஐந்து முறை வணங்குகிறார்கள் போலும். தைத்ரீய உபநிஷத் ஐந்து கோசங்களிலும் வேறுபட்டதாயும் பிரம்மம் என்றதுமான பரமாத்ம வடிவம் புவனேஸ்வரியே என்கிறது.

இதை திருமூலர் தன் திருமந்திரத்தில்,
‘‘ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரியாகி ஐவரைப் பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!’’ என்கிறார்.
‘‘கொய்யாது குவியாது குமையாது மணம் வீசும்
கோவாத தெய்வமலர்
கோவாத முத்தம், குறையாத மதியம்

கோடாத மணி விளக்கு’’ என புவனேஸ்வரியைப் போற்றுகிறார், வள்ளலார். புவனேஸ்வரி என்ற உடனேயே சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கி பின் கேட்கும் வரங்களுக்கு கொடுக்க ஒன்றுமில்லாமல் பக்தர்களிடம் கடனாளியாகிவிடுவாள், புவனேஸ்வரி! அவ்வளவு கருணை கொண்டவள் என்கிறார், வியாசராஜர். ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி.
ப்ருத்வீதரர் எனும் வடநாட்டில் வசித்த புவனேஸ்வரி தேவி உபாசகர், ‘‘புவனேஸ்வரியை அறிந்தவர்கள், அவள் மந்திரத்தை ஜபிப்பவர்கள், அவள் திருவுருவை தியானிப்பவர்கள், அவள் தோத்திரத்தை கானம் செய்பவர்கள் போன்றோரின் வாக்கிலிருந்து மிருதுவான சொற்கள் வரும்படி செய்வாள். மேலும் அமிர்த தாரை போலும், சரத்காலத்தில் நிலவு போலும் இனிமையாக அந்த உபாசகனின் கீர்த்தி மூன்று உலகங்களிலும் பரவும்’’ என்கிறார்.

லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் கடாக்ஷகிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா எனும் நாமம் யாருக்கு புவனேஸ்வரியின் கடைக்கண் நோக்கு படுகிறதோ அவர்களுக்கு கோடிக்கணக்கான மகாலட்சுமிகள் பணிவிடை செய்யக் காத்திருப்பர் என்கிறது. ஆதியில் தேவர்கள் அசுரர்களை வென்ற செருக்கில் அலைந்த போது ஆகாசத்திற்கும் பூமிக்குமாய் ஒரு பேரொளி தோன்றியது. தேவர்கள் அனைவரும் அது என்ன என்று பார்க்கப் போனார்கள். அந்த பேரொளி ஒரு யட்ச உருவமாகி ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டு அதை அழிக்கச் சொன்னது. வாயுவினால் அதை அசைக்கவே முடியவில்லை. தீயினால் எரிக்க முடியவில்லை. கடைசியில் அனைத்து தேவர்களும் தேவேந்திரனையே அதனிடம் அனுப்பினர். தேவேந்திரன் தன் அகம்பாவத்தைத் தொலைத்து மிகப் பணிவுடன், ‘‘தாங்கள் யார்?’’ எனக் கேட்டபோது ஒரு அழகிய பெண்ணுருவம் அங்கே தோன்றியது.

கேனோபநிஷத், இப்படித் தோன்றியது பரதேவதையான உமாதேவி என்கிறது. ஞானமே வடிவான அவள், ‘‘நீ ஜோதியாகப் பார்த்தது பிரம்ம ஸ்வரூபம். இவ்வளவு பிரபஞ்சத்திற்கும் காரணமாக இருப்பதும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதும் அந்த பிரம்ம ஸ்வரூபம்தான். அந்த அம்பிகைக்கும் ஈசனுக்கும் உள்ள சம்பந்தத்தை சரீரபாவம் என்பர். உடலும் உயிரும் எப்படியோ அப்படி ஈசன் உயிர். அந்த உயிருக்கு உடலாயிருப்பது அம்பிகை’’ என்று இந்திரனுக்குப் பதிலளித்தாள். ‘த்வம் சரீரம் சம்போ’ என்றார், ஆதிசங்கரர். அந்த சம்புவின் சரீரமாய் இருக்கும் அம்பிகை அகண்ட வடிவில் விளங்குகிறாள். எப்படி
பிண்டமாகிய உடல் அவளுடையதோ அதைப்போல் அண்டமாகிய உடலும் அவளுடையதே. சூரியனும் சந்திரனும் அவளின் இரு ஸ்தனங்கள். குழந்தைகளுக்கு ஸ்தனங்களிலிருந்து பால் கொடுப்பவள் தாய். இந்த புவனங்கள் எல்லாம் அம்பாளுடைய குழந்தைகள். சூரியன், சந்திரன் எனும் இரு ஸ்தனங்களால் இந்த லோகத்தை அம்பிகை காக்கிறாள்.

அவள்தான் தேவி புவனேஸ்வரி. ஒருவன் தன் சக்தியை சமயத்திற்குத் தகுந்தாற்போல் உபயோகிப்பதைப் போல ஈசனும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் தன் சக்தியை உபயோகிக்கிறார். அந்தந்த பிரயோகத்திற்குத் தக்கவாறு சக்திகளும் துர்க்கா, லட்சுமி, ராஜராஜேஸ்வரி என மாறுபடுகின்றன. சக்திகள் அனைவருமே மாயா சக்தியின் பரிணாமமேயாயினும் புவனங்கள் படைப்புக்குக் காரணமாக இருக்கும்போது புவனேஸ்வரி எனும் பெயருடன் விளங்குகிறாள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ‘உன்மேஷநிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ’ எனும் நாமம் ஒன்று உண்டு. அம்பிகை கண்களைத் திறந்தால் எல்லா லோகங்களும் சிருஷ்டிக்கப்படுகின்றனவாம். கண்களை மூடினால் அவ்வளவும் அழிந்து விடுமாம். கருணை காரணமாக அவள் தன் கண்களை மூடுவதேயில்லையாம். இதையே ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்யலஹரியில் ‘நிமோஷான்’ எனும் துதியில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த இரவில் ஜீவர்களின் அசைவுகள் நின்று விடுகின்றதோ அந்த இரவு ஜீவராத்திரி எனப்படும். ஈஸ்வரனின் அசைவுகள் நின்றுவிடும் இரவு, மகா பிரளய காலம். அந்த ராத்திரிக்கு தேவதை புவனேஸ்வரி என தேவி புராணம் கூறுகிறது. புவனேஸ்வரியின் உபாசனையால் உலகங்களை ஜெயிக்கும் ஆற்றலை சாதகன் அடைகிறான். அளவில்லா செல்வமும் வாழ்க்கை வளமும் பதவி உயர்வும் நிச்சயமாகப் பெறுகிறான். நோய்நொடியற்றவனாய் கருணையுடன் கூடியவனாய், த்ரிகால ஞானியாகவும் விளங்குவான். ராஜவசியம், தன வசியம் கிட்டும். அரசதண்டனை, பேய், பிசாசு, ஏவல் உபாதைகள் நீங்கும். மன்னர்களாலும் வணங்கப்படுவான். உலகங்கள் எல்லாம் தன் ஆத்மாவே என்ற ஸர்வாத்மபாவம் (எங்கும் நானே உளன் என்கிற ஞானத்தை) நிச்சயம் பெறுவான். நிலவுலகில் புவனேஸ்வரியை உபாசித்து வழிபட்டவர்கள் தன் தேக விநியோகம் ஆன பின் மணித்வீபத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

அடுத்து: திருப்பங்கள் தரும் திரிபுரபைரவி

புவனேஸ்வரி த்யானம்

உத்யதி நத்யதிமிந்துகிரீடாம் துங்ககுசாம் நயநத்ரய யுக்தாம்
ஸ்மேரமுகீம் வரதாங்குஸபாஸாபீதிகராம் ப்ரபஜே புவநேஸீம்

புவனேஸ்வரி காயத்ரி

ஸர்வ சைதன்யரூபாம் தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி
ஹ்ரீங்கார ரூபிணீம் தேவீம் தியோ யோந: ப்ரசோதயாத்
(சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளியது)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum