நாகதோஷம் நீக்கும் ராகு பகவான்
Page 1 of 1
நாகதோஷம் நீக்கும் ராகு பகவான்
திருநாகேஸ்வரம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது நாகதோஷ பரிகாரத்தலம்தான். ஏனெனில், ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதள பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு. இவ்விரு கிரகங்களில் தன் இரு தேவியரான நாகவல்லி-நாகக்கன்னியோடு, நாகநாதரின் அருள் சூழ, திருநாகேஸ்வரத்தில் மங்களமாக அமர்ந்திருக்கிறார், மங்கள யோக ராகு பகவான். ராகுவை யோககாரகன் என்கிறது ஜோதிடம். கோயிலின் பிராகாரத்தில் நிருதி மூலையில் வீற்றிருக்கிறார் ராகுபகவான். அவர் இங்கு வந்து அமர்ந்த புராணம் என்ன?
எல்லை காணமுடியாத அந்த நிலப்பரப்பு செண்பகவனம் போலக் காட்சியளித்தது. அதன் வாசமும், ஈசனின் வெண்ணீற்று மணமும் வானை உரசின.
பிரபஞ்சத்தின் இரவை ருத்ரன் எனும் சிவன் தம் கட்டுக்குள் வைத்துக் கொண்டார். ருத்ர தாண்டவத்தை எவரும் அறியாது நிகழ்த்தினார். அந்த முழு தாண்டவத்தை சந்திரன் தரிசித்தான். தன் ஒவ்வொரு கலையும் மறையும் நாட்களிலும், வளரும் நாட்களிலும், பூரணமாகப் பொலியும் நாட்களிலும், முழுவதுமாக மறையும் நாட்களிலும்கூட அந்த தரிசனத்தைக் கண்டு அவன் ஆனந்தித்தான். சிவத்தினுள் இருந்து பொழியும் அமுதை தமக்குள் தேக்கிக் கொண்டு, இரவுப் பொழுதுகளில் பூவுலகை நனைத்தது. விண்ணை நோக்கி ஈசன் தம் பார்வையை வீசினார்.
வண்ண நிலவு பூரணப் பிரகாசத்தோடு பூரித்திருந்தது. ஈசனின் கண்ணோக்கினால் களிப்புற்றது. செண்பகாரண்யம் நோக்கி நகர்ந்து ஆதிசிவத்தை வழிபடும் உணர்வு பெருகியது. பூவுலகை செம்மையான செங்கதிர்களால் சூரியன் ஊடுருவினான். செண்பகாரண்ய சிவன் சூரியனை நோக்க அவனுக்குள்ளும் அந்த சிவத்தை சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. சூரியனும், சந்திரனும் பூவுலகை நோக்கி நகர்ந்தனர். பூவுலகை மிக நெருக்கமாக சந்திரன் வருடி நகர்ந்தபோது மாபெரும் சக்தியொன்று வெளிப்பட்டது. சக்தியின் அம்சமாக ஒளிராது தன்னை நிழலாக வெளிப்படுத்தியது. அது நீண்ட உருவில் நெளிந்தது. நிழலாக படிந்தது.
அதன் ஒருபுறம் நாகத்தின் ஐந்து தலைகளாகவும், மறுபுறம் வால்பகுதியாகவும் காணப்பட்டன. தன் தலை முதல் வால்வரை பல்வேறு கிரகங்களையும் ஊடுருவி நின்றது. தனக்கென்று முரணான எதிர்ப்பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் சுழன்றது. ஆதியில் மேருமலையை கடையும்போது அந்த நிகழ்வில் உற்பவித்த அந்தச் சக்திதான் இப்போது செண்பக மலர்கள் அடர்ந்த கானகத்தின் நேரே நின்றது. சந்திரன் பூமிக்கு அருகே நெருங்கும்போது நிழலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அதை தரிசித்தவர்கள் தலைப்பகுதியை ராகு என்றும், வால் பகுதியை கேது என்றும் அழைத்தனர். அதன் எதிரான பயணத்தை வைத்து உயிர்களின் மீது அது செலுத்தும் சக்தியை கவனித்து வாழ்க்கையை கணித்தனர்.
நாகாபரண பூஷிதன் என அழைக்கப்படும் சிவனை நோக்கி அது நகர்ந்தது. அதற்குள் சந்திரனும், சூரியனும் சிவபாதத்தை அடைந்திருந்தனர். தீந்தழல் சூரியனும், அமுதக்குளிர் சந்திரனும் சிவசாந்நித்தியத்தில் தம்மை மறந்து கிடந்தனர். செந்நிறச் செல்வனை கயிலைப்பிரான் மெல்ல வருடினார். சூரியன் கனன்றபடி உச்சியை நோக்கி நகர்ந்தான். நிலவை நீவ, அமுத ஊற்றொன்று அதன் மத்தியில் பீறிட, அது வானை நோக்கி மிதந்தபடி சென்றது. ராகு சிவனை நோக்கி ஊர்ந்து வந்தான். திருவடியில் தலைசாய்த்து கிடந்தான். சிவனின் அண்மை அவனையும் சிவமாக்கியது. எந்தப் பேதமுமற்று ஈசனுடன் இயைந்திருந்தான்.
ராகுவான அந்த நாகத்தின் சக்தி அத்தலத்திலேயே தம்மை நிறுத்திக் கொண்டது.
மகரிஷிகள் செண்பகா ரண்யத்திற்குள் நுழைந்து ராகு பகவானாக, எல்லோரையும் காக்கும் தெய்வமாக உயர்ந்த நிலை கண்டு ஆனந்தித்தனர். ராகு எனும் நாகம் பூஜித்ததால், இறைவனை நாகநாதன் என்றழைத்தனர். அத்தலம் திருநாகேஸ்வரம் என்றானது. தமது அருகிலேயே ராகுவின் குடும்பத்தையும் அமர்த்திக் கொண்டார் நாகநாதர். இந்த நிகழ்வை திருநாவுக்கரசர் தமது பதிகத்தில் மிக அழகாக, ‘‘சந்திரனொடு சூரியர் தாமுடன்....’’ என்று தொடங்கி, ‘‘ஐந்தலை அரவின் பணி கொண்டருள் மைந்தர்போல் மணி நாகேச்வரரே’’ என்று உறுதி செய்கிறார். அதுமட்டுமல்லாது ‘‘நல்லர் நல்லதோர் நாகங் கொண்டாட்டுவர்’’ என தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார். நல்ல வாழ்வு அமைய வேண்டுமெனில் நாகத்தை வழிபடுங்கள் என குறிப்பால் தெரிவிக்கிறார்.
திருஞானசம்பந்தரும் அடியார் குழாத்தோடு வந்து ‘‘நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் கோளும் நாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொண்மினே’’ என்று நாகநாதரின் மகத்துவத்தை அறிவிக்கிறார். அன்று தொடங்கிய அந்த ராகுவின் வழிபாடு இன்றுவரை தொடர்ந்து அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே நவகிரகத்தில் ராகுவுக்குரிய தலமாக திருநாகேஸ்வரம் ஈடு இணையற்று விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழரின் நாகரிகத்தை இக்கோயில் எடுத்துச் சொல்கிறது. ஆயிரம் வருட சரித்திரத்தை நெல்மணியாக விரவிக் கிடக்கும் கல்வெட்டுக்கள் விவரிக்கும். யுகாந்திரங்களுக்கு முன்னர் நாகநாதர் அமர்ந்த புராண விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘‘என் வாழ்வு வெறும் பிரச்னைகளால் சூழ்ந்திருக்கின்றன. ராகு தோஷம் என்கிறார்கள்’’ என்று யாராவது குறைபட்டுக்கொண்டால், ‘‘அப்படியெனில் வாருங்கள்.
உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ராகுவையும், நாகநாதரையும், பிறையணி அம்மையையும் தரிசித்துச் செல்லுங்கள்’’ என்று அழைக்கிறது இந்த ஆலயம். அதனால் எப்போதும் இந்தக் கோயிலில் கூட்டம்தான். பக்தர்கள் தவிர, வரலாற்று ஆராய்ச்சி யாளர்களாலும் கோயில் நிரம்புகிறது. பழமையைப் பறைசாற்றும் நெடிதுயர்ந்த கோபுரங்கள். வெளி வாயில், உள்கோபுர வாயில், வெளிப் பிராகாரம், உட் பிராகாரம், திருச்சுற்று மதில் என சீரான அமைப்போடு கோயிலை பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா எத்தனையோ மன்னர்களும், மகான்களும், மக்களும் பூஜித்த புண்ணிய பூமி. ஐந்து நிலைகளையுடைய கீழ்கோபுர வாசலின் வழியே உள்ளே நுழைந்தால் முன்னே நிருத்த கணபதி, நந்தி தேவர் வரவேற்க, இடப்புறம் சூரிய புஷ்கரணியும், வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன. மூலவர் கருவறையை அடுத்த முதல் பிராகாரத்தில் மேல்புறம் விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், லட்சுமி போன்றோரின் சிலையும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளன.
கோயிலின் நிருதி மூலையில் நாகவல்லி, நாகக் கன்னியோடு கம்பீரமாய் வீற்றிருக்கிறார், ராகு பகவான். நாகதோஷமா, களத்திர தோஷத்தால் திருமணத் தடையா, சரியான வேலை கிடைக்காமல் அல்லாடும் இளைஞரா, பிரச்னைகளே வாழ்க்கையாகிப்போனதே என்று விரக்தியில் இருப்பவரா.... இன்னும் எப்படிப்பட்ட, எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், தன் தரிசன மாத்திரத்தாலேயே தீர்க்கும் வல்லமை மிக்க சந்நதி அது. ராகு பகவான் முகம் முழுதும் பேரின்பம் தளும்ப, கருணை பொங்கும் கண்களோடு அருள் பாலிக்கிறார். அவருடைய இரு தேவியர்களும் உங்களுக்கு என்ன குறை என்று கேட்கிறார்கள். ராகு பகவானுக்கு தினமும் ராகு கால நேரத்தில் பாலபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவதைக் காண உடல் சிலிர்க்கும்.
மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, முருகன், பிறையணிவாள் நுதல் அம்மை சந்நதிகள் சிறப்புற அமைந்துள்ளன. நாகநாதரின் சந்நதியை நெருங்கும் போதே உடல் முழுவதும் ஒரு அதிர்வு பரவுவதை உணரமுடிகிறது. நாகநாதர் சகல ஜீவராசிகளிடத்திலும் குண்டலினி ரூபத்தில் இருந்து இயக்குகிறார். இந்த சந்நதிகளை சென்று வணங்கும்போது வெளியிலிருக்கும் சக்தி நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டிவிடுகின்றன. இவையெல்லாம் நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் தாமாக நிகழ்ந்தேறும். சந்நதியை விட்டு நகரும்போது நம்மை இறுக்கும் வினை முடிச்சுகள் தாமாக அவிழ்ந்து விடுகின்றன.
நாகராஜன் சிவராத்திரியின் நான்கு ஜாமங்களிலும் நான்கு சந்நதிகளில் வந்து வழிபடுவதாக ஐதீகம் உள்ளது. முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாவதாக திருநாகேஸ் வரம் நாகநாதரையும், மூன்றாவதாக திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், நான்காவதாக நாகூர் நாகநாதரையும் வழிபடு வதாக சொல்வர். இத்தல நாகநாதர் நல்வாழ்வு தர காத்திருக்கிறார். சுருண்டு கிடக்கும் மகாசக்தியை கிளர்ந்தெழச் செய்ய அவர் காத்திருக்கிறார். நகர மனமில்லாது பிறையணிவாள்நுதல் அம்மை சந்நதி நோக்கி நகர்கிறோம். அம்மையை தரிசிக்கும்போது சந்திரனின் குளிரமுதம் நம்மை சில்லிட வைக்கிறது. அம்பாள் எளியவளாக இருக்கிறாள்.
அழகில் பிறை நிலவை விஞ்சி அருட்கோலம் காட்டுகிறாள். அவள் திருப்பெயருக்கேற்ப, கார்த்திகை பௌர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் நிலவின் வெளிச்சம் அம்பாளின் மீது விழுமாறு கட்டப்பட்டிருக்கும் அமைப்பு பிரமிப்பூட்டுகிறது. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானுக்கு இத்தலத்தின் மீது ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்திருக்கிறது. என் ஈசன் என தன்னோடு நெருங்கிய பக்தி பூண்டு, பல்வேறு திருப்பணிகள் செய்திருக்கிறார். சேக்கிழாரின் அன்னை அழகம்மையார், தம்பியார் பாலறாவாயர் போன்றோரின் திருவுருவங்கள் நடராஜப் பெருமானின் சந்நதிக்கு அருகே அமைந்துள்ளது வியப்பளிக்கிறது.
இக்கோயிலின் மற்றுமொரு அபூர்வ சிறப்பானது, கிரிகுஜாம்பிகை சந்நதியாகும். குன்றுமா முலையம்மை என தேனூறும் தமிழில் அழைக்கப்படுகிறாள். இந்த சந்நதியின் வெளிப்பிராகாரத்தைச் சுற்றிலும் சமண முனிவர்கள் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் முப்பெருந் தேவியரும் ஒரே சந்நதியில் விளங்குகின்றனர். கிரிகுஜாம்பிகை தவக்கோலத்திலும், சரஸ்வதியும், லட்சுமியும் அருகருகே அமைந்து அருள்பாலிக்கின்றனர். தேவியர் சுதை வடிவில் இருப்பதால் அபிஷேகம் கிடையாது. தை, ஆடி மாதங்களில் புனுகுத் தைலம் சாத்தப்படுகின்றது. கோயில் முழுதும் வலம் வந்து கொடிமரத்தின் கீழ் வீழ்ந்து பரவுகையில் சுருண்டு கிடந்த நாகசக்தி நிதானமாக வெளிப்படுவதை சுகமாக உணரலாம். கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாகதோஷம் நீக்கும் ராகு பகவான்
» ராகு பகவான் துதி
» ராகு பகவான் ஸ்லோகம்
» ராகு பகவான் விரதம்
» ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?
» ராகு பகவான் துதி
» ராகு பகவான் ஸ்லோகம்
» ராகு பகவான் விரதம்
» ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum