தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேட்ட வரம் அருளும் மஹாசக்தி!

Go down

கேட்ட வரம் அருளும் மஹாசக்தி!  Empty கேட்ட வரம் அருளும் மஹாசக்தி!

Post  meenu Fri Mar 08, 2013 1:15 pm

கொங்கு நாட்டிலுள்ள சிறப்புமிக்க அம்பிகை திருத்தலங்களில் ஒன்று, அந்தியூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள ‘சித்தர் காடு மஹாசக்தி’ ஆலயம். 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கே காணப்படும் சிவலிங்கத் திருமேனி பல குறுநில மன்னர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளது. இது, கடினமான கற்பாறையில் சுயம்புலிங்கமாக அமைந்துள்ளது. தற்சமயம் இதனருகில், ஒன்பது அடி உயரத்தில் சிவபெருமானின் மிகப்பெரிய முழு உருவக் கற்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்தப் பேருருவம் வேறெங்கும் காணவியலாத வகையில் தனித்துவம் பெற்றிருக்கிறது. சுயம்பு லிங்கத்திற்குப் பின்புறமாகக் காணப்படும் பாறைகளில் இரண்டு நீர்ச் சுனைகள் உள்ளன. இந்த நீர்ச் சுனைகளில் தண்ணீர் எப்போதும் வற்றாமலிருப்பது பேரதிசயம். இந்த நீரை எடுத்துதான் சிவபெருமானுக்கும், அவர் முன்னே காணப்படும் நந்திதேவருக்கும் அபிஷேகம் செய்கிறார்கள்.

இங்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாகவும் தருகிறார்கள். இந்த தீர்த்தம் எல்லாவிதமான நோய்களையும் தீர்க்க வல்லது. ‘மஹா சக்தி ஆலயம்’ என்றழைக்கப்படும் இந்த சித்தர் காடு ஆலயத்தில் கொலுவிருக்கும் துர்க்கை அம்மன், அந்தக் காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னர்களின் இஷ்டதெய்வமாக விளங்கியவள். அதற்கு ஆதாரமாக ஒரு பழங்கால ஓலைச்சுவடி, ராமர், ராவணனைக் கொன்றதால் அவரை ‘பிரம்மஹத்தி தோஷம்’ பீடித்திருந்தது. அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு இந்த தோஷத்தைப் போக்கிக் கொண்டார். ராவணன் என்ற மஹாவீரனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு ‘வீர ஹத்தி தோஷமும்’ ஏற்பட்டது. வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் சிவலிங்க பூஜை செய்து இந்த தோஷம் நீங்கப் பெற்றார் ராமர்.

வேதாரண்யம் கோயிலிலுள்ள விநாயகர், ‘வீர ஹத்தி விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். ராமரைத் துரத்தி வந்த ‘வீர ஹத்தி’ என்ற வேதாளத்தை விரட்டியடித்ததால் இவருக்கு இந்தப் பெயர். ஒரு காலைத் தூக்கி, வேதாளத்தை எத்தி விரட்டுவது போல் இவரது உருவம் அமைந்திருக்கிறது. ராவணன் சிறந்த வீணைக் கலைஞன். கலைத் தேர்ச்சியுடையவர்களை ‘சாயை’ என்பார்கள். பல கலைகளில் வல்லவனான ராவணனைக் கொன்றதால், ராமருக்கு ‘சாயாஹத்தி தோஷம்’ என்ற மூன்றாவது தோஷமும் பற்றிக் கொண்டது. அதனைப் போக்கிக் கொள்வதற்காக, பட்டீஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கோடி தீர்த்தம் அமைத்து ராமர் வழிபட்டார். அதோடு பட்டீஸ்வரத்தில் உள்ள துர்க்கை அம்மனையும் ராமர் பிரார்த்தித்ததால் அவரது தோஷங்கள் நிவர்த்தியாயின.

அதேபோல, கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள், போர் காரணமாகத் தங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய தோஷங்களையும் போக்கிக் கொள்ள, இந்தச் சித்தர் காட்டில் சிவலிங்கத்தையும், துர்க்கையையும் பிரதிஷ்டை செய்து, தோஷம் நீக்கிக் கொண்டதாக ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. மூன்று கண்களோடும், காதுகளில் குண்டலங்கள் ஜொலிக்க, அபய கரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றைத் தாங்கி, புன்னகையுடன்,
சாந்தஸ்வரூபியாக அருள்பாலிக்கிறாள் அன்னை. கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் முக்கிய அரசு முடிவு எடுக்கு முன்பும், போர் துவங்கு முன்பும் இந்த துர்க்காதேவியை வழிபட்டே செயல்படுவர்.

இந்த அன்னையை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, ராகுகாலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் பக்தர்கள் சிறப்பாக வழிபடுகின்றனர். ராகுவின் அதிபதி, துர்க்கை என்பதால், ராகுதோஷம் நிவர்த்தியாகிறது. தன்னை நாடிவருவோரின் சகல கிரகதோஷங்களையும், மனச் சங்கடங்களையும் போக்கி அருள்கிறாள் இந்த அன்னை. இவ்வாலய முகப்பிலேயே ‘மஹா சக்தி’ என்ற பெயரில், கம்பீரமாக அமர்ந்து, வருகின்ற பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளமுது தருகின்றாள், அன்னை சிவபரமேஸ்வரி நேர்மையான, நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் இந்த அம்பாள் நிறைவேற்றித் தருகிறாள்.

திருமணத் தடையா, குழந்தைப் பேறு இல்லையா அல்லது ஏதேனும் குறைபாடா, விரும்பிய வேலை கிடைக்கவில்லையா, உடல் நலப் பிரச்னையா, எந்த சோகமும் சித்தர்காடு மஹாசக்தியின் கடைக்கண் பார்வையால் உடனே தீர்கிறது. இந்தக் கோயிலில் தை அமாவாசை அன்று மிகப் பெரிய திருவிழா நடைபெறுகிறது. வேண்டுதல் மேற்கொண்டவர்கள், அன்று தீக் குண்டம் இறங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், குண்டம் இறங்கும் வேண்டுதல் காரர்களும் பயபக்தியோடு வருகிறார்கள். அக்னி குண்டம் இறங்குவதற்கு முன்னதாக அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள சித்தேஸ்வரன் மலை அடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதிக்குள்ளிருந்து ஓடி வரும் பாலாற்றிலிருந்து 108 குடங்களில் தூய தீர்த்தத்தை எடுத்து வந்து மஹாசக்தியாக வீற்றிருக்கும் அன்னை உமா மகேஸ்வரிக்கு நீராட்டு நடத்துகிறார்கள்.

திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை வரம் கேட்பவர்களும், பிற கோரிக்கைகளை வைப்பவர்களும் அன்று அதிகாலையில் குளித்து விட்டு, ஈர உடையோடு தூய்மையான நீரை ஒரு சொம்பில் நிரப்பி அதில் வேப்பிலை சொருகி இந்த அம்மனின் ஆலயத்தை மூன்று முறை சுற்றி வந்து பூசாரியிடம் சொம்பைத் தந்து அன்னை மஹாசக்திக்கு அபிஷேகம் செய்விக்கிறார்கள்; விரைவில் தம் குறை தீர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை நாட்களிலும், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் இங்கே விசேஷ வழிபாடுகள் நடப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும். சிவலோகேஸ்வரி அன்னையின் சிரசில் ‘பூ‘ வைத்து வாக்குக் கேட்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

சிலர்திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஜாதகத்தைக் கொண்டு வந்து அம்மனின் காலடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், நோய் நொடிகளைத் தீர்க்கும் தெய்வமாய் இவ்வாலய அம்பாள் விளங்குவதால், ஏராளமான தாய்மார்கள், உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளை இங்கே எடுத்து வந்து வேண்டிக் கொண்டு மனம் நெகிழ நன்மை பெறுகிறார்கள். இக்கோயிலுக்கு வந்து உளமாற வழிபட்டால், கஷ்டங்கள் மறையும். கவலைகள் தீரும்.

கடன் தொல்லை நீங்கும். தீராத நோய்கள் குணமாகும். தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத் தடைகள் விலகும். புத்திரப் பேறு உண்டாகும். மன சஞ்சலங்கள் நீங்கி மனத் தெளிவு பிறக்கும். வாழ்க்கையில் ஒளி உண்டாகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஈரோடு மாவட்டம், அந்தியூர்-வெள்ளித் திருப்பூர் பேருந்துப் பாதையில் கெட்டி சமுத்திரம் ஆதிரெட்டியூர் அருகே 8வது கிலோ மீட்டரில் சித்தர்காடு மஹாசக்தி ஆலயம் அமைந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum