தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லிங்கோத்பவ தத்துவம்

Go down

லிங்கோத்பவ தத்துவம் Empty லிங்கோத்பவ தத்துவம்

Post  meenu Fri Mar 08, 2013 12:54 pm

‘நமசிவாய’ நாயகன், சிவன். இவர் ஈசானம், தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாமதேவம் என்று ஐந்து முகங்களும், அவற்றின் அம்சங்களாக 25 வடிவங்களும் கொண்டவர். இவற்றில் ஒருவர் லிங்கோத்பவர். சிவாலயங்களில் இம்மூர்த்தியை, மூலவர் சந்நதியின் நேர்பின்னால், கோஷ்டத்தில் தரிசிக்கலாம். இந்த வடிவம், கொழுந்து விட்டெறியும் சுடர் போன்றமைந்து நடுப்பாகத்தில் மான், மழு இரண்டையும் கையில் ஏந்தி, ஈசன் வரதக் கரத்துடன் நின்ற கோலத்தில் விளங்குகிறது. அவரது பாதங்கள் அந்த ஜோதியில் மறைந்திருக்க வராகமுகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு பாதாளத்தை நோக்கிப் பாய்வதும், அச்சுடரின் மேலே பிரம்மன் அன்னபட்சியாக மேல் நோக்கிப் பறப்பதும் லிங்கோத்பவரின் மூர்த்தத்தில் செதுக்கப்பட்டிருக்கும்.

சிவராத்திரியின் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பர். இந்த வேளையில் மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவித்து எள் அன்னம் நிவேதித்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம். சிவபூஜா விதியின்படி தேன், கஸ்தூரி, சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளை ஆடை, மாணிக்க ஆபரணம், நீர்மலர் மாலை சூட்ட வேண்டும். கோதுமை அட்சதை, முள்கிளுவை பத்திரத்தால் அர்ச்சிக்க வேண்டும். எள் அன்னம் மற்றும் மாதுளம் பழம் நைவேத்தியம் செய்து பஞ்சமுக தீபத்துடன் சாமவேதம் ஓதி வழிபட வேண்டும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சந்நதியில் அடி-முடி காணாத ஆலயம் உள்ளது. இதன் உள்ளே சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளியிருக்க, அவர்களுக்குப் பின்புறம் ரிஷப வாகனமும் மேற்புறத்தில் தீபச் சுடரும் காட்டப்பட்டுள்ளன. உச்சியைக் காண முயற்சிப்பது போல் அன்னத்தையும் பீடத்தில் அடியைக் காண முயற்சிக்கும் வராகத்தையும் காணலாம். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டில் முதலாம் ராஜராஜசோழனின் தேவியரில் ஒருத்தியான அபிமான வல்லி, லிங்க புராணத் தேவர் திருமேனியை எழுந்தருளச் செய்து இந்த மூர்த்திக்கு அணிகலன்களும் அளித்த செய்தி காணப்படுகிறது.

அருப்புக்கோட்டை ஸ்ரீ சந்தரேசுவரர் கோயிலிலும் இந்த வடிவத்தை எழுந்தருளிவித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரில், பால்வண்ண நாதர் கோயிலில் பஞ்சலோகத்திலான லிங்கோத்பவ மூர்த்தம் உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் முழுமையான லிங்கோத்பவர் திருமேனி உள்ளது. இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். சொர்ணவேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயத்தில் மானும் மழுவும் இடம் மாறி அமைந்திருக்கும் லிங்கோத்பவ மூர்த்தியைக் காணலாம். காஞ்சிபுரம் கயிலைநாதர் கோயிலில் எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவரைக் காணலாம் பல்லவர் காலச் சிற்பம் இது.

குன்றக்குடி மலைக் கொழுந்தீஸ்வரர் குகைக் கோயிலில் கிழக்குபுறம் லிங்கோத்பவர் வடிவம் உள்ளது. தவிர, திருமயம், குடிமல்லூர், பிள்ளையார்பட்டி, திருச்செட்டாங்குடி, நாகப்பட்டினம், கூவம் மற்றும் கூளம்பந்தல் ஆகிய தலங்களில் உள்ள லிங்கோத்பவ வடிவங்களும் அற்புதமானவை. ஆந்திர மாநிலம் நளகொண்டா வட்டம் பனகல் கோமேஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத் திருவடியை பிரம்மனும் விஷ்ணுவும் வழிபடுவது போன்ற திருக்கோலத்தை காணலாம். ஆதியும் அந்தமுமில்லாத லிங்கோத்பவராக நின்ற ஈசனுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட தொடங்குமுன் ஸ்ரீருத்ரத்தில் ‘‘ஆபாதாலனபவ ஸ்தலாந்த புவன பிரம்மாண்டமாவினபுரம் ஜோதி:

ஸ்படிக லிங்க’’ என்று தொடங்கும் சுலோகத்தை (பாதாளம் முதல் ஆகாயம் வரை ஆதியும் அந்தமும் இல்லாது வியாபித்து பிரகாசமான ஜோதியாக நின்ற ஸ்படிகம் பொறை லிங்கத்தைத் தியானித்து அபிஷேகம் செய்கிறேன்) என்று கூறி ஈசனை வணங்குகிறோம். ஒளி ஊடுருவக்கூடிய ஸ்படிக லிங்கத்தை எந்த வண்ணப்பூவினால் அர்ச்சனை செய்கிறோமோ அந்த வண்ணம் அந்த ஸ்படிக லிங்கத்தில் தெரியும். இத்தகைய நிர்குணமான ஸ்வரூபமே ஜோதியாக நின்ற லிங்கோத்பவர். லிங்கோத்பவ மூர்த்தியை வழிபட்டால் எல்லாத் தீமைகளும் விலகி எல்லா நலன்களும் விளையும். நீண்ட ஆயுளையும் பெரும் புண்ணியத்தையும் பெறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum