தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதகர்கள் குழுக்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது

Go down

சாதகர்கள் குழுக்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது Empty சாதகர்கள் குழுக்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது

Post  meenu Thu Mar 07, 2013 2:39 pm

மகாநதியின் பிரவாக அலைகளாக உத்தவருக்கு உபதேசங்களை பொழிந்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். உத்தவர் உபதேசத்தின் ஒவ்வொரு கூறுக்குள்ளும் அதி நுணுக்கமாய் சிந்தையை செலுத்தி புரிந்து கொண்டார். ஐயம் தோன்றும்போதே ‘‘புரியவில்லையே பகவானே..’’ என்று பிரவாகத்தை இடையிடையே அணை கட்டியதுபோல் நிறுத்தி, கேட்டு, தெளிந்து கொண்டுதான் முன்னேறினார். புரிந்தபின் இதயத்தின் ஆழம்வரை கிருஷ்ணனின் வாக்குகளை கொண்டு சென்றார்.

ஆத்மிக பாதையில் கடவுளை தேடும் ஞான மார்க்கத்தில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையே உத்தவருக்கு கிருஷ்ணர் தெளிவாகக் காட்டுகிறார். அதற்குத்தான் தத்தாத்ரேயர், யது மன்னனிடம், ‘பருந்தும் எனக்கு குருதான்’ என்றார்.

இந்த இடத்தில்தான் உத்தவருக்கு சந்தேகம் உதித்தது. ‘‘பகவானே! அந்தப் பருந்து மாமிசத் துண்டை, கீழே நழுவ விட்டது. காக்கைகள் உடனே பருந்தை விட்டு அகன்றன. மாமிசம் நழுவியதால் பருந்து விடுதலை பெற்றதா? மீண்டும் இந்தக் காக்கைகள் தன்னை தாக்காது என்று பருந்துக்குள் தற்காலிக சந்தோஷம் உண்டானதா? எந்த விதத்தில் பருந்தை தத்தாத்ரேயர், குருவாக வரித்தார்?’’ என உத்தவர் கூர்மையாகக் கேட்டார்.

கிருஷ்ணர் மிகவும் எளிதாக பதிலளித்தார்: ‘‘உத்தவா, மாமிசத்தை பருந்து நழுவ விட்டது உண்மைதான். ஆனால் அதற்கும் உள்ளாக வெகு ஆழத்தில் வேறொரு விஷயமும் உள்ளது. பருந்து முதலில் நழுவ விட்டது எதைத் தெரியுமா? நான் இந்த மாமிசத்தை தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணத்தைத்தான். நான் இந்த உடம்பு அல்ல என்கிற விழிப்புணர்வு உதயமாகும்போதே ஞானம் திரண்ட வெண்ணையாக மேலெழும்பும். தத்தாத்ரேயர் பருந்துக்குள் ஏற்பட்ட மலர்தலை, பருந்து எய்திய ஞான நிலைக்கு வெறும் சாட்சியாக நின்றார். எந்த வஸ்து எப்போது எல்லாவற்றையும் கடந்து சாட்சியாக நிற்கிறதோ அதற்குத்தான் குரு என்று பெயர்.’’

‘‘இந்த நிகழ்வை கண்டதும் தத்தாத்ரேயருக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டது?’’ என்று தொடர்ந்து கேட்டார் உத்தவர்.

பகவான் கிருஷ்ணர், ‘‘அவதூதரான தத்தாத்ரேயர் தன் நிலையை எப்படி சொல்கிறார், கேள்’’ என்று சொல்லி மேலும் விவரித்தார்.

யது மன்னன், புதிதாக சமுத்திரம் கண்ட குழந்தையைப்போல விழி விரித்து வியப்போடு கிடந்தான்.

தத்தாத்ரேயர், ‘‘யது மகாராஜா, எனக்கு மனமே இல்லாமல் போயிற்று. நான், அது, அவை என்று பிரித்தறியும் பேதத்தை ஞானத் தீ பொசுக்கி விட்டெறிந்தது, மனம் இல்லை. ஆதலால் மானமும் அவமானம் இல்லை. வீடு, புத்திரன், குடும்பம் பற்றிய சிந்தை இல்லை. காணுமிடம் எல்லாம் ஆத்மா பரந்து விரிந்து ஜொலித்தது. அதற்குள் நானும் எனக்குள் அதுவுமாக பிரித்தறியா பேதமற்றிருந்தோம். முதன் முறையாக என்னை நான் ஒரு குழந்தையாக உணர்ந்தேன். அப்போதுதான் குழந்தையையும் தெய்வத்தையும் ஏன் ஒரே தராசுத் தட்டில் சமமாக ஞானியர் நிறுத்தினர் என்பது புரிந்தது. குழந்தைக்குத்தான் ஒன்றை செய்ய வேண்டும் என்கிற பிரயத்தனம் இல்லை. இறைவன் உந்துகிறான். அது தவழ்கிறது. அதனால் கவலையற்று இருக்கிறது. அதுபோல, ஞானிக்கு நான் செய்கிறேன் என்கிற எண்ணம் அறவே இல்லை. நான் செய்விக்கப்படுகிறேன் எனும் சரணாகதித் தெளிவு மட்டுமே உண்டு. அதனால் கடமையின் பலனைக் குறித்த எண்ணமே எழுவதில்லை. செயல்கள் மட்டுமே அங்கு உண்டு. செய்பவராக அந்த மகாசக்தியே உள்ளது. அதனால் எனக்கு குழந்தையும் குருவானது.

‘விருத்தி’ எனும் சொல் அழகானது. மிகுந்த அர்த்தம் பொதிந்தது. நிவிருத்தி என்கிற சொல் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதை குறிக்கும். அதேபோல பிரவர்த்தி என்பது வெளியே விரிவதை குறிக்கும். மனம் பிரவர்த்தித்தால் உலக வியாபாரத்தில் ஈடுபடும். நிவிர்த்தி என்றால் ஆத்மாவினிடம் சென்று ஒடுங்கும். மனதிற்கு இந்த இரண்டு தொழில்கள் மட்டுமே தெரியும். இதில் மனதை வெளியே விட்டால் மாயை கவிழ்த்து போடும். மனதை உள்ளுக்குள் ஒடுக்கினால் ஆத்மாவில் சென்று கரைந்து போகும்.

ஆன்மிக ஞான யாத்திரையில் பயணிக்கும் சாதகன் நிவிர்த்தி என்கிற மனதை ஒடுக்கும் வித்தையை, கைக்கொள்ள வேண்டும். உலகத்தின் சகல நிகழ்வுகளும் இந்த மார்க்கத்தைத்தான் ஆன்மிக சாதகனுக்கு போதித்தபடி இருக்கின்றன. நான் இதுவரை கூறிய குருக்கள் எல்லாம் என்னை உள்முகமாக திருப்பினர். ஒன்றை முக்கியமாக நினைவில் கொள். இறை தேடலில் ஈடுபட்டுள்ள சாதகனை உலகம் ஒதுக்கித் தள்ளுகிறது. என்னிலிருந்து வெளியேறு என்று அப்பால் தூக்கிப் போடுகிறது. அதை கணத்திற்குக் கணம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. அதுபோல யோகியானவன் எப்படியிருக்க வேண்டும் என்றும் எனக்கொரு பெண் சொல்லிக் கொடுத்தாள்.

உலக விவகாரங்களை அறியும் ஆவலோடு நகரத்தில் அங்கும் இங்குமாக அலைந்தேன். ஒரு வீட்டின் முன்பு நின்றேன். அழகான கன்னிகை ஒருத்தி வெளியே வந்தாள். என்ன வேண்டுமென கேட்டாள். அமைதி காத்தேன். நான் உணவை யாசித்து வந்திருப்பதாக அவள் புரிந்து கொண்டாள். வீட்டிற்குள் செல்ல முற்படும்போது வாயிலில் குதிரை பூட்டிய வண்டி ஒன்று வந்து நின்றது.

சட்டென்று அவள் முகத்தில், நாணக் கோடுகள் பரவின. என்னை என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு மரத்தினடியைக் காட்டி அமரச் சொன்னாள். ‘என்னைப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சற்று நேரம் பொறுங்கள்,’ என்று மன்னிப்பு கேட்கும் பாவனையாகப் பேசிவிட்டு, உள்ளே நகர்ந்தாள். வந்தவர்கள் கூடத்திற்குள் அமர்ந்தனர். கன்னிகையோ உணவளிப்பதற்காக நெல்லைக் குத்தத் துவங்கினாள். அவள் கைகளில் நிறைய வளையல்கள் இருந்தன. ஒவ்வொரு முறை நெல் குத்தும்போதும், அந்த வளையல்கள் பெரிய சப்தங்களோடு சிணுங்கின. ஏதோ அவளுக்குள் அந்த சப்தங்கள் வெட்கத்தையும் வருத்தத்தையும் உண்டாக்கின.

சட்டென்று நெல் குத்துவதை நிறுத்தி கைகளில் இரண்டு வளையலை மட்டும் நிறுத்தி, மீதியை உடைத்துப் போட்டாள். மீண்டும் நெல்லைக் குத்த, அந்த இரண்டு வளையலும் உரசிக்கொண்டு சப்தம் எழுப்பின. அந்த சிறு சப்தம்கூட அவளை தொந்தரவு செய்தது. வந்தவர்கள் இவள் அடங்கா பெண்ணோ, நாம் வந்தது பிடிக்கவில்லையோ, வெளியே செல்லுங்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறாளோ, அதற்குத்தான் இத்தனை சப்தங்களோடு நெல்லை குத்துகிறாளோ என்று நினைத்து விடுவார்களே என்று பயந்தாள். எனவே இரு வளையலில் ஒன்றை உடைத்துப் போட்டாள். இப்போது ஒற்றை வளையல் மட்டுமே மிஞ்சியது. சப்தமும் நின்றது.

யது மன்னா, அவள் செய்தது, அவள் சொந்த விஷயத்துக்காக இருக்கலாம். ஆனால், எனக்கு அது வேறு விதமாக புரிந்தது. யோகப் பாதையில் பயணிப்போர் கூட்டமாக இருக்கக் கூடாது. சாதகர்கள் கூட்டமாக வசிக்கக் கூடாது. குழுக்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது. நான்கு பேராக சேர்ந்து கடவுளை தேடலாமே என்பது அபத்தத்தில் முடியும். இலக்கை நோக்கிப் பாயும் அம்புபோல் ஒரே நேர்க் கோட்டில் தனியாகப் பயணிக்க வேண்டும். ஆன்மிக பாதை எப்போதுமே ஒரு வழிப்பாதைதான். திசை காட்ட, ஆங்காங்கு பலர் வருவர். போவர். ஆனால் தனியே பயணிப்பதுதான் யோகிக்கு அழகு. நான்கு பேருடன் சேர்ந்திருப்பது என்பது சப்தங்களைத்தான் உருவாக்கும். வீணாக சக்தி அங்கு விரயப்படும். இரையப்படும். நெல்முனை அளவும் முன்னேற்றம் இருக்காது. பல சப்தங்கள் கூடி வெறும் இரைச்சல்தான் உருவாகும். எல்லாவற்றையும் விலக்கி ஆதார ஸ்ருதி எது என்று தேட வேண்டும். ஆதார ஸ்ருதி என்பது ஒற்றை வளையல்போல தனித்திருக்கும். அந்த தனித்து இருக்கும் வஸ்துவே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.

நான் மனதிற்குள் அந்த பெண்ணை நமஸ்கரித்தேன். அந்த ஒற்றை வளையல் ஒரே பரம்பொருளான நாராயணனை எனக்குக் காட்டிக் கொடுத்தது’’ என்று தத்தாத்ரேயர் பல குருக்களை யது மன்னனுக்கு விளக்கினார். யது மன்னனுக்குள் ஆத்ம ஜோதி ஒளிர்ந்தது.

ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரை பிரியத்தோடு பார்த்தார். ‘‘நான் உனக்கொரு முக்கிய விஷயம் கூறட்டுமா?’’ என்று கேட்டார்.

‘‘என்ன பகவானே...’’ என அடிக்குரலில் தழுதழுத்தபடி கேட்டார், உத்தவர்.

ஏனோ பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கண்களும் குளமாயின. பகவானும் பாகவதனும் தாயும் சேயும் குருவும் சீடனும் இப்படித்தான் இருப்பார்கள் என்று மகாயோகி சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்தை நோக்கிக் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சாதகர்கள் குழுக்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது
» இனி பிரைவேட் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது! – பிலிம்சேம்பர் உத்தரவால் கேரள நடிகர்கள் ஷாக்!
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum