தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண் என்ற நீறு பூத்த நெருப்பு

Go down

பெண் என்ற நீறு பூத்த நெருப்பு Empty பெண் என்ற நீறு பூத்த நெருப்பு

Post  meenu Thu Mar 07, 2013 2:08 pm

‘குடும்பத்தின் பெருமைக்குப் பெரிதும் காரணம் கணவனா, மனைவியா?’ என்ற தலைப்புடன், முதன்முதலில் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் மதுரையில் பட்டிமன்றம் நடைபெற்றது. எல்லோருக்கும் இந்தத் தலைப்பெல்லாம் வெற்றி பெறுமா என்று தயக்கம். பேச்சாளர்களும் நடுவரும் நடந்து பட்டிமன்ற மேடைக்கு அருகில் சென்றனர். இரண்டு தெரு தாண்டி கூட்டம் கூடியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஏதோ வித்தியாசமாக உணருகிறார்கள். என்ன அது? பெரும் அளவில் பெண்கள் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். 1960களில் அது சாத்தியமே இல்லை; வழக்கமும் இல்லை.

அன்றைய பட்டிமன்றத்திற்குத் தீர்ப்பு வழங்குகையில், குடும்பங்களில் ஆண்களின் அலட்சியத்தையும் பெண்கள் படும் பாடுகளையும் அவர் சொல்லச் சொல்ல, கூடியிருந்த பெண்கள் குமுறி அழுது தீர்த்தனர். ‘‘மனைவியே’’ என்று அவர் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் கண்ணீரும் கம்பலையுமாய் அவரை வாழ்த்தியபடியே நகர்ந்தது பெண்கள் கூட்டம். தமிழகத்தின் தவிர்க்க முடியாத கலை வடிவமாகிவிட்ட பட்டிமன்றங்களின் பாதையை மாற்றிப்போட்ட தனிப்பெரும் நிகழ்வு அது.

அன்று அவர் சொன்ன தீர்ப்பை கடந்த பல்லாண்டுகளாய் அவர் மாற்றவில்லை. ‘கணவனா, மனைவியா?’ என்று பட்டிமன்றம் நடந்தால் அவரின் மாறாத் தீர்ப்பு மனைவி பக்கமே. அடி, உதை, அலட்சியம் என்று நம் பெண்கள் வாழ்ந்த துன்பக் கேணியின் இருண்ட பக்கங்களை, பட்டிமன்றம் என்ற நிகழ்ச்சி காட்சிப்படுத்தியதைப் போன்று வேறு எந்தக் கலை வடிவும் காட்சிப்படுத்தியதில்லை. அன்று, தமக்கு விதிக்கப்பட்ட நிர்ப்பந்தங்களைத் துறந்து வீதிக்கு வந்து குழுமிய பெண்கள், ஏதோ ஒன்றை நமக்குச் சொல்கின்றனர். காலம் காலமாக பெண்கள் தம் கட்டுப்பாடுகளையும் அடையாளங்களையும் துறந்து எழும்போது, சரித்திரம் படைக்கப்படுகிறது. சமூக வாழ்வில் மட்டுமல்ல.

ஆன்மிக வாழ்விலும் இதுவே நடந்திருக்கிறது. மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் மற்றும் கன்னட இலக்கியத்தின் பெரும் படைப்பாளியாகக் கருதப்படும் அக்கமஹாதேவி எல்லோரும் ஏதேதோ கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு வந்தவர்கள்தான். அக்கமஹாதேவி சிறு வயதிலிருந்தே சென்ன மல்லிகார்ஜுனன் என்ற பெயரில் விளங்கும் சிவனிடம் பக்தி கொண்டுவிட்டார். ஜைன மன்னன் கௌசிகன் நகர் உலா வருகையில் மஹாதேவியின் அழகைப் பார்த்து மயங்கி மையல் கொண்டான். பெற்றோரின் வற்புறுத்தலும் சேர்ந்துகொள்ளவே, ‘‘நான் சிவ பூஜை செய்வதைத் தடுக்கக் கூடாது’’ என்று மன்னனிடம் நிபந்தனை விதித்து அவன் சம்மதித்த பிறகே கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டார், மஹாதேவி. திருமணம் ஆன உடனேயே நிபந்தனை தூக்கிப் போடப்பட்டது. தொந்தரவுகள், அவமதிப்பு தொடர்ந்தன. கணவன் மாளிகையை விட்டகன்று ஸ்ரீசைலத்திற்குப் போகப்போவதாய்ச் சொன்னார் மஹாதேவி. அரண்மனை உடமைகள் எதையும் எடுத்துப் போகக்கூடாது என்று கட்டளையிடப்படுகிறது. அத்தனை நகைகளையும் ஏன் உடையையும் கூடத் துறந்து தன் காட்டருவிக் கூந்தலால் மட்டுமே உடலை மறைத்து, திகம்பரியாக அரண்மனையை விட்டு நீங்கினார், மஹாதேவி. கவிதைகளைப் பொழிந்தார். இவை ‘வசனக் கவிதை’ என்னும் வகையைச் சேர்ந்தவை. கன்னட இலக்கிய உலகில் பெரும் சாதனையாகக் கருதப்படும் இந்த வசனங்களை எழுதிய மஹாதேவியை, மரியாதையோடு அக்கமஹாதேவி என்று அழைக்கின்றனர். ஒரு வசனம் இப்படிச் சொல்கிறது.

நெருப்பில்லாச் சூட்டில் வெந்தேனம்மா!
வடுவில்லாக் காயத்தில் நொந்தேனம்மா!
சுகமிழந்து தவித்தேனம்மா!
சென்ன மல்லிகார்ஜுன தேவனை விரும்பி
வரக்கூடாத பிறவிகளில் வந்தேனம்மா!

12ம் நூற்றாண்டுப் பெண்ணான மஹாதேவி ‘கேடுகெட்ட கணவர்களை அடுப்பில் வைப்போம்’ என்று எழுதிய வசனம் அன்றைய சூழலில் எத்தனை மகத்தான சமூக மீறலாக இருந்திருக்கும்! யுக யுகாந்திரங்களாக நம் பெண்கள் சமையல் அறைகளின் இருட்டில் சிந்திய கண்ணீரில், எரிந்த அடுப்புகள் எத்தனை அணைந்தனவோ!

மீராவும் கூட அப்படி ஒரு போராளிதான். ராஜபுத்ர வம்சத்தில் வந்த அவளின் தைரியத்திற்குக் கேட்பானேன்! மீராவின் பக்தியை அடியோடு வெறுத்த அவளின் நாத்தனார் உதா, ஒருநாள் மீராவிற்கு விஷத்தைப் பாலில் கலந்து கொடுத்துவிட்டாள். மீராவின் கையில் குவளையைக் கொடுத்ததும் உதாவினால் குற்ற உணர்வைத் தாங்க முடியவில்லை. ‘‘வேண்டாம் மீரா, குடிக்காதே, அது விஷம்’’ என்று கதறினாள். ‘‘அதனால் என்ன?’’ என்று வைராக்கியத்துடன் கேட்டு மீரா பாலை அருந்தி விட்டாள். என்ன ஆச்சரியம்! மீராவிற்கு எதுவுமே நேரவில்லை. ஆனால் அதே நேரத்தில் துவாரகாபுரியில் நூற்றக்கணக்கான பக்தர்கள் பார்த்திருக்க, கண்ணனின் வெண்மைநிற விக்கிரகம் கன்னங்கரேல் என்று மாறி, அவன் சந்நதியின் கதவுகள் தாமே அடைத்துக் கொண்டன! நடந்த சம்பவங்களினால் கலக்கமடைந்த மீராவின் கணவன் அரசன் ராணா, மீரா சதாநேரமும் இருக்கும் கண்ணன் கோயிலை இடிக்கச் சொன்னான்.

‘ராணா, கோயிலை இடிக்கும் அளவுக்கு உங்கள் மனம் கலக்கமடையக் காரணமான நான் உங்களுக்கு ஏற்ற மனைவியே அல்ல. என் பாதை வேறு’ என்று சொல்லிவிட்டு தடுக்க முடியாத உறுதியோடு தன் தம்புராவை மட்டும் துணையாகக் கொண்டு மீரா புறப்பட்டு விட்டாள். பாலைவனங்களில் திரிந்து, காடுகளில் அலைந்து, பிருந்தாவன த்தை அடைந்த மீரா, ரூபகோஸ்வாமி என்ற துறவியின் ஆசிரமத்தை அடைந்தாள். ‘‘மகான் பெண்களைப் பார்க்க மாட்டார்’’ என்று சீடர்கள் அவளைத் துரத்தினர். மீரா சொன்னாள்: ‘‘இந்தப் பிருந்தாவனக் கோயிலில் ஆண் யார், பெண் யார்? அந்த விஷ்ணு மட்டும்தானே ஆண்? அவனிடம் பிரேமை கொண்ட அடியார்கள் எல்லாம் பெண்தானே!’’ உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த ரூபகோஸ்வாமி கதறியபடியே வெளியே வந்து மீராவின் பாதம் பணிந்தார் என்பது வரலாறு.

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. கணவன் தான் கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு மாம் பழங்களை அனுப்பினான். பசியோடு வந்த சிவனடியார் ஒருவருக்கு ஒரு மாம்பழத்தை புனிதவதி கொடுத்தாள். மதிய சாப்பாட்டிற்காக கணவன் வந்தபோது இன்னொரு பழத்தைப் பரிமாறினாள். ‘‘இரண்டு பழம் அனுப்பினேனே, இன்னொன்றையும் கொண்டு வா’’ என்றான், கணவன். ஒரு பழத்தையாவது மனைவி சாப்பிடட்டுமே என்ற எண்ணமே இல்லாத கணவன்! சிவனடியாருக்கு அளித்து விட்ட உண்மையைச் சொல்ல தைரியம் இல்லாத மனைவி, சிவனை வேண்டி ஒரு பழத்தைப் பெற்று அதனைக் கணவனிடம் தந்தாள். முந்தைய பழத்தைவிட இது சூப்பர் சுவை. ‘‘எங்கிருந்து வந்தது?’’ என்று மிரட்டினான் கணவன்; மிரண்டாள் மனைவி. உண்மையைச் சொன்ன புனிதவதியை விட்டு விலகினான் கணவன். மனைவியின் சக்தி அவனை பிரமிக்க வைத்திருக்க வேண்டும். மனைவியைப் பார்த்து பிரமிக்கும்படி இருந்தால் அவளை மனைவியாக நடத்த முடியாதே! ஓடியவன் அதே வேகத்தல் இன்னொரு திருமணத்தையும் முடிக்க, புனிதவதி வாழ்வைத் துறந்து காரைக்கால் அம்மையானாள். அழகான மேனி இருந்தால் ஆண்டவனைத் தேடும் பயணம் கூட ஆபத்தில் முடியும் என்று, பேய் உருவம் கேட்டுப் பெற்றாள். ‘திமுதிமுவென புயற்காற்று அடித்தாலே, காடெல்லாம் விறகான செய்தி போலே’ என்று பாரதியார் எழுதுகிறார். அவமானம், விரக்தி என்று இல்லறத்தில் புயற்காற்று வீசினால், காடெல்லாம் விறகானாற்போல பெண்ணும் பேயாகத்தான் வேண்டுமோ என்னவோ! நூற்றாண்டுகளாய் வீடுகளை விட்டு வெளியே வராத நம் பெண்கள், காந்திஜியின் தண்டி யாத்திரையில் கைகளில் இடுக்கிய குழந்தைகளோடு இணைந்தபோதுதான் இந்த தேசத்தின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. அது ஆன்மிக மறுமலர்ச்சியோ, அரசியல் விடுதலையோ, சமூக மாற்றமோ, சலுகைகளும் உரிமைகளும் மறுக்கப்பட்ட, குரலற்ற பெண்கள் கொதித்து எழுந்து இணையும் போதுதான் சரித்திரங்கள் மாறுகின்றன, இல்லையா?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum