தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகா சிவராத்திரி விரதம்!

Go down

 மகா சிவராத்திரி விரதம்!  Empty மகா சிவராத்திரி விரதம்!

Post  amma Tue Jan 15, 2013 5:20 pm

மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி வரலாறு

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

கடைபிடிக்க வேண்டிய விரதமுறை

மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் பற்றிப் பார்ப்போம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோயில்களுக்கும் வழங்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum