தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எக்ஸ்பைரி

Go down

எக்ஸ்பைரி                Empty எக்ஸ்பைரி

Post  ishwarya Wed Feb 27, 2013 1:05 pm

‘எக்ஸ்பைரி’ என்கிற ஆங்கில வார்த்தைக்கு ‘மரணம்’ அல்லது ‘இறப்பு’ என்றொரு அர்த்தம் காட்டுகிறது அகராதி. இறந்து போன எதையாவது நாம் பத்திரப்படுத்த நினைப்போமா? வீட்டில் வைத்து அழகு பார்க்க ஆசைப்படுவோமா? ஆயுள் முடிந்த எதுவும் அப்புறப்படுத்தப்பட வேண்டியவை... ஆபத்தானவை! உயிருள்ளவற்றுக்கு மட்டுமில்லை, உயிரல்லாத, உயிர் இருப்பதை உணர முடியாத பல பொருள்களுக்கும் இந்த விதி பொருந்தும். மனித உயிர் பிரிந்தாலும், ‘எக்ஸ்பயர்டு’ என்றுதான் சொல்கிறோம். மருந்துகளின் காலக்கெடு முடிந்தாலும் ‘எக்ஸ்பயர்டு’ என்றுதான் சொல்கிறோம். உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் மருந்துகளில் தொடங்கி, நாம் குடிக்கிற தண்ணீர், சாப்பிடுகிற உணவு, அவற்றில் சேர்க்கிற பொருள்கள், காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொன்றுக்குமே காலாவதி காலம் என ஒன்று உண்டு. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ‘எக்ஸ்பைரி’
பற்றியதுதான் இந்த அலசல்.

மற்றதைப் பற்றித் தெரியுமோ, இல்லையோ, மருந்துகளுக்கு ‘காலாவதி’ உண்டு என்பது பலரும் அறிந்ததே! மருந்து வாங்கும் போதும், ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கிற போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியைக் கவனிக்க வேண்டியது மிக மிக
முக்கியம்.

காலாவதி தேதி முடிந்த பிறகும் 3 மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூட நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது!
காலாவதி தேதி என்றால் என்ன? அது எப்படிக் கணக்கிடப்படுகிறது? காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் என்னாகும்? இப்படி சகல கேள்விகளுக்குமான விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...

‘‘மருந்துகளோட காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுது. அதாவது ஒரு மருந்தோட வீரியத் தன்மையைப் பாதுகாக்க, அந்த மருந்துக்கு ஸ்திரத் தன்மையைக் கொடுக்கக் கூடிய, கிரியை உண்டாக்காத சில பொருள்களை அதில்
சேர்த்துத் தயாரிப்பாங்க. வெப்பத்தன்மையால பாதிக்கப்படற மருந்துகளை ‘தெர்மோலயபிள்’ (Thermolabile) னும், வெப்பத்தைத் தாங்கக் கூடிய மருந்துகளை ‘தெர்மோஸ்டேபிள்’ (Thermostable) னும் சொல்றோம். முதல் வகை மருந்துகளை வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்கள்லதான் வைக்கணும். அடுத்ததை வெளிச்சத்துலயும் வைக்கலாம். இதை அளவுகோல்களா வச்சுதான், ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும்னு கணக்கிட்டு, அதுக்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுது’’ என்கிறார் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளியின் இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் ரவிச்சந்திரன்.

‘‘காலாவதி தேதி முடிஞ்ச பிறகு, மருந்துகள், தன்னோட வீரியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிக்கும். அதுக்குக் காரணம், அந்த மருந்துகள்ல உள்ள மூலக் கூறுகள்ல ஏற்படற மாற்றம்! அதுக்குப் பிறகு, அந்த மருந்துகள், நாம எதிர்பார்க்கிற பலன்களைக் கொடுக்கறதில்லை. உதாரணத்துக்கு காலாவதி ஆகாத ஒரு மாத்திரை, நூறு சதவிகிதம் பலன் தரும்னா, காலாவதியான மாத்திரை, முழுப்பலனைத் தராது. காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால, நாம எதிர்பார்க்காத பக்க விளைவுகளும் வரலாம். இதுக்காகத்தான் ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் - 1940/1945’ காலாவதியான மருந்துகளைப் பத்தின விதிகளை வரையறுத்துச் சொல்லியிருக்கு. காலாவதியான மருந்துகளை, காலாவதி தேதிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம். காலாவதியான மருந்துகளை, விற்பனைக்காக வச்சிருக்கிற மற்ற மருந்துகளிடமிருந்து பிரிச்சு, ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள போட்டு, ‘காலாவதியானவை - விற்பனைக்கல்ல’ என்ற குறிப்போட வைக்கணும்னு அந்தச் சட்டம் சொல்லுது.

காலாவதியான மருந்துகளை உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்ற சட்டம், இதுவரை அந்த மருந்துகளை எப்படி அப்புறப்படுத்தறதுங்கிறதுக்கான எந்த வழிமுறைகளையும் வரையறுக்காததுதான் வருத்தமான விஷயம்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.‘‘காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிடறது எவ்வளவு தவறான விஷயமோ, அதைவிட மோசமானது, அந்த மருந்துகளை வீட்ல வச்சிருக்கிறது. தேவையில்லாத மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தறதுதான் பாதுகாப்பானது’’ என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மார்பு நோய் நிபுணர் வி.எஸ்.அனந்தன்.

‘‘மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள்னு ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மாத்திரைகளை, வாங்கின கடைக்காரங்கக் கிட்டயே திருப்பிக் கொடுத்துடலாம். அப்படிக் கொடுக்கிறதுல சிக்கல் இருக்கிறதா நினைக்கிறவங்க, அதையெல்லாம் ஒரு பாலிதீன் கவருக்குள்ள போட்டுக் கட்டி, குப்பைத்தொட்டியில போட்டுடலாம். சிரப் மற்றும் திரவ வடிவ மருந்துகளை கழிவறையில கொட்டிடலாம். இன்ஜெக்ஷனா இருந்தா, அதை உடைச்சு, அப்புறப்படுத்தணும்’’ என்கிற டாக்டர், காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் அக்கறைஅவசியம் என்கிறார்.

‘‘உங்க குழந்தைக்கு இருமல்னு டாக்டரை பார்க்கறீங்க. சிரப் எழுதிக் கொடுக்கறார். ரெண்டு நாளோ, மூணு நாளோ கொடுத்ததுமே, குழந்தைக்கு நல்லாயிடுது. சிரப்பை எடுத்து அலமாரியில வச்சிடறீங்க. அந்த மருந்து எக்ஸ்பைரி ஆக இன்னும் ஒரு வருஷம் இருக்குன்னு வச்சுப்போம். மறுபடி 6 மாசம் கழிச்சு, உங்க குழந்தைக்கு இருமல் வரும்போது, அதான் எக்ஸ்பைரி ஆகலையேன்னு அதே மருந்தை எடுத்துக் கொடுப்பீங்க. அது ரொம்பத் தப்பு. சில மருந்துகளை திறந்துட்டா, அதோட எக்ஸ்பைரி தேதி மாறிடும். அதுலயும் சில பவுடர் வகை மருந்துகள், குறிப்பா குழந்தைகளுக்கான ஆன்டிபயாடிக் பவுடர்களை தண்ணீர்ல கலந்து கொடுக்கச் சொல்வாங்க. அப்படி தண்ணீர் கலந்துட்டாலே, அதை 1 வாரத்துக்குள்ள உபயோகிச்சிடணும். திரவ வடிவ மருந்துகள் வாங்கும்போது ஒரு கலர்ல இருந்து, பிறகு நிறம் மாறினா, எக்ஸ்பைரி ஆக நிறைய காலம் இருந்தாலுமே அதை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் ஃபாயில் பேப்பர்ல சுத்தி வரும். ஒரு சில மாத்திரையை திறக்கும்போதே உடைஞ்சு, பவுடர் மாதிரி கொட்டும். அப்படி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது.

எந்த மருந்தா இருந்தாலும், அதை சூரியவெளிச்சம் படற மாதிரியான இடத்துல வைக்கவே கூடாது. ஏசி ரூம் சிறந்தது. அந்த வசதியில்லாதவங்க, நிழலான இடத்துல வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ல (ஃப்ரீசர்ல வைக்கக் கூடாது) 4 டிகிரியில வைக்கலாம். வெயில் படற இடத்துல வைக்கிற போது, மருந்துகள் இன்னும் சீக்கிரமே காலாவதியாகும்...’’ - மருந்துகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை ‘அலர்ட்’ செய்கிறது டாக்டரின்
அட்வைஸ். கைவசம் இருக்கட்டுமே என்கிற நினைப்பில், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிகளுக்கான மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைப்பது பலரது வழக்கம். மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில் அது காலாவதியாகும் தேதி அச்சிடப் பட்டிருக்கும். அதைக் கவனிக்காமல், அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்திருப்பார்கள். அடுத்த முறை உபயோகிக்கும் போது, காலாவதி தேதி கண்ணில் தெரியாது. ‘இப்பதானே வாங்கினோம்... அதுக்குள்ளயா எக்ஸ்பையரி ஆகியிருக்கும்’ என்கிற நினைப்பில் அதைத் தீரும் வரை உபயோகிப்பார்கள், பல நேரங்களில் அது காலாவதியானதே தெரியாமல்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum