தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல் நெக்லஸ் விதை வளையல்!

Go down

நெல் நெக்லஸ் விதை வளையல்!   Empty நெல் நெக்லஸ் விதை வளையல்!

Post  ishwarya Sat Feb 23, 2013 4:58 pm

நெல்லில் இருந்து என்ன கிடைக்கும்? இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்கிறீர்களா? அரிசியை விடுங்கள்... கண் கவரும் கலைநயம்மிக்க நகைகளை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் திருச்சி ஸ்ரீதர் பாபு. அதோடு, இந்தியாவிலேயே முதல்முறையாக அரிய ரக விதைகளில் இருந்தும் ஆபரணங்களைத் தயாரித்திருக்கிறார். இவர் தயாரிக்கும் நகைகள் அனைத்துத் தரப்புப் பெண்களையும் ஈர்த்து விற்பனையிலும் சக்கைப் போடு போடுகின்றன. தெலுங்கிலும் தமிழிலும் வெளியான ‘ராமராஜ்ஜியம்’ படத்தில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த நகைகள் எல்லாம் ஸ்ரீதர் பாபுவின் பட்டறையில் உருவானவை!

‘‘பெண்களுக்கு நகைகள் மேல இருக்கிற ஆசையை சொல்லவே வேண்டாம். அதுலயும் இன்னிக்கி என்ன ஃபேஷன்னு தேடித் தேடி வாங்கறதும் டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா நகைகளை அணிய விரும்பறதும் அவங்களுக்கேயான பிரத்தியேக குணம். டிரெண்டி, ஸ்டைலிஷ்னு வித்தியாசமா நகைகளை அணிய விரும்பறவங்களுக்கு இமிடேஷன் நகைகள்தான் பெஸ்ட் சாய்ஸ். தங்கம் விக்கிற விலையில அதை வாங்க முடியாம, நிறைய பேர் இமிடேஷன் ஃபேன்ஸி நகைகள் மேல ஆர்வமா இருக்காங்க. அதைத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டுதான் நாங்க இந்த பிசினஸை ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்துல காய்ந்த மலர்களைக் கொண்டு நகைகள் செஞ்சோம். வெயிட்லெஸ்ஸா இருந்ததால இளம்பெண்களுக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. அதனால அந்த நகைகளுக்கு வரவேற்பு அமோகமா இருந்தது. அதுக்கப்புறம், இன்னும் புதுசு புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சோம். பூந்திக்கொட்டையோட ஓடுகளைக் கொண்டு நகைகளை உருவாக்கினா என்னன்னு தோணிச்சு. பூந்திக்கொட்டையின் ஓடுகளைத் தனியா பிரிச்சு, அதுல வர்ணம் தீட்டி, கம்மல், நெக்லஸ் செய்ய ஆரம்பிச்சோம். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது.

தானியங்களோட விதைகள் வீணாகறது இன்னிக்கி பரவலா இருக்குற ஒரு விஷயம். விதைகள்ல கூட புதுசா ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சேன். முதல்ல நம்ம ஊர்ல கிடைக்கும் குண்டுமணி, நெல்லுன்னு ஆரம்பிச்சேன். சின்னச் சின்ன கம்மல், பிரேஸ்லெட், நெக்லஸ்னு அதுல செய்யப்பட்ட நகைகள் பெண்களை ரொம்பக் கவர்ந்துடுச்சு. நிறைய பேர் ஆர்வமா வாங்கினாங்க. அதுக்கப்புறம் எனக்குள்ள புது உத்வேகம் வந்துடுச்சு. இன்னும் பெருசா ஏதாவது பண்ணணுங்கிற வெறியும் ஆசையும் உள்ள வந்து உட்கார்ந்துடுச்சு. அரிய ரக விதைகள் எங்கெல்லாம் கிடைக்குதுன்னு தேடியலைஞ்சேன். வெளிமாநிலங்கள்ல கிடைத்த பெரும்பாலான விதைகள் ரொம்ப அபூர்வமா இருந்துச்சு. அதையெல்லாம் வாங்கிட்டு வந்து நகைகள் செய்ய ஆரம்பிச்சோம்.

கறுப்பு, பிரவுன், சிவப்புன்னு வெரைட்டியான காம்பினேஷன்ல இருந்த நகைகளைப் பார்த்து கல்லூரி மாணவிகள் பலபேர் அசந்து போயிட்டாங்க. விற்பனைக்கண்காட்சிகள் எங்கே நடந்தாலும் எங்களோட நகைகளை கொண்டு போய் வைக்க ஆரம்பிச்சோம். இப்படித்தான் எங்க விதை நகைகளுக்கான மார்க்கெட்டிங் ஆரம்பிச்சுது. டீலர்கள்கிட்டயேயும் கொடுத்தோம். கோயம்புத்தூர்ல இருக்கும் ஒரு கடையில ‘ராமராஜ்ஜியம்’ படத்தோட டீம் பர்ச்சேஸ் பண்ண போயிருக்காங்க. அங்கே எங்களோட நகைகள் வித்தியாசமா இருக்கறதைப் பார்த்துட்டு மொத்தமா வாங்கிட்டுப் போயிட்டாங்க. நெல் நகைகள் இருக்குங்கற விஷயத்தை வெளியே கொண்டு வந்ததே இந்தப் படம்தான். இப்போ வெளிநாடுகள்ல இருந்தும் எங்களுக்கு ஆர்டர் வருது.

கல்வாழை, குண்டுமணி, படம்பை, சுபாபுல், பூந்திக்கொட்டை, மோத்தி, குதிரைக்குளம்பி, பென்சில் விதை... இப்படிப் பலவிதமான விதைகள்ல இருந்து நகைகள் செய்றோம். இந்த மாதிரியான விதைகளை உற்பத்தி செஞ்சு தர்றதுக்காகவே தனியா ஆட்கள் இருக்காங்க. இது தவிர கொல்கத்தா மற்றும் பீகார்ல இருக்குற சில இடங்களுக்குப் போயும் பர்ச்சேஸ் பண்றோம். நெல் நகைகளுக்கு விதை நெல்லை மட்டும்தான் பயன்படுத்துறோம். கெமிக்கல் எதுவும் கலக்காம, தரமா இருக்கறதால இந்த நகைகள் ரொம்ப நாள் பாதுகாப்பா இருக்கும்.

இந்த நகை மட்டுமில்லே... எதுவுமே நாம பயன்படுத்தறதைப் பொருத்துதான் அதிக நாள் உழைக்கும். மழைக்காலத்துல மட்டும் விதை நகைகளை அப்பப்போ எடுத்து துடைச்சு, ஒரு கவர்ல போட்டு வச்சுக்கறது நல்லது. ஏன்னா விதைகள்ல பூஞ்சை படர ஆரம்பிச்சா கலர் மாறிடும். அதனால அதைப் பராமரிக்கறது ரொம்ப முக்கியம். வாங்கினதும், பத்திரமா பூட்டி வச்சுக்காம, புழக்கத்துல வச்சிருந்தாலே நகைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. நெல் நகைகள்ல தூசு சேர்ந்துச்சுன்னா ஒரு சின்ன பிரஷ் வச்சு க்ளீன் பண்ணினா போதும். மற்றபடி நெல் நகைகளுக்குத் தனியா பராமரிப்பு எதுவும் தேவையில்லை.

சுடிதார் போடுற பெண்களுக்கு விதை நகைகள் ரொம்ப எடுப்பாக இருக்கும். தினமும் அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ போட்டுட்டுப் போற மாதிரி சிம்பிளான நகைகளும் இருக்கு. புடவை கட்டுறவங்களுக்கு நெல் நகைகள் எடுப்பாக இருக்கும். அதுலயும் காட்டன் புடவை கட்டுறவங்களுக்கு இந்த நகை ஒரு தனிக் களையைக் கொண்டு வந்துடும். விலை, அப்படி ஒண்ணும் அதிகமில்லை. ஆரம்ப விலை 200 ரூபா. அதிகபட்சமா 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும். பல பெண்கள் கல்லூரிகள்ல இந்த நகைகளை மொத்தமா வாங்கிப் பயன்படுத்துறாங்க.

அதோட காலேஜ்ல ஏதாவது ஃபங்ஷன்னாலும், ஃபேர்வெல் மாதிரியான நிகழ்ச்சின்னாலும் எங்க நகைகளை ஆர்டர் பண்ணி வாங்கிட்டு போறாங்க. இப்போ லண்டன், கனடா போன்ற நாடுகளுக்கும் அனுப்பிட்டு இருக்கோம். இந்த நகைகளைத் தயாரிக்கறது முழுக்க முழுக்கப் பெண்கள்தான். பொதுவாவே பெண்களுக்கு க்ரியேட்டிவிட்டி அதிகம். இந்த நகைகளை செய்யற பெண்கள் விதவிதமா டிசைன்களை உருவாக்கித் தர்றாங்க. அதுதான் எங்களோட பலம்...’’ என்கிறார் ஸ்ரீதர் பாபு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum