தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

Go down

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!! Empty கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

Post  ishwarya Mon Feb 18, 2013 2:10 pm

இந்த தளத்தில் ‘ஆலய தரிசனம்’ பகுதிக்கு இது ஒரு தொடக்கம் தான். அடுத்தடுத்து நமது ஆலய தரிசனங்கள் குறித்த அனுபவப் பதிவுகள் (புகைப்படங்களுடன்) வரவுள்ளன. இந்த தொடக்கப் பதிவில் மனதில் உள்ளவற்றை வடித்திருக்கிறேன். இவற்றை சீர்படுத்தி தேவையில்லாதவற்றை தவிர்த்து, இன்னும் சுவாரஸ்யமாக சுவையாக எழுதக் கூடிய நடை போகப் போகத் தான் கைகூடும் என்று நினைக்கிறேன். இந்த பதிவு மற்றும் நடை குறித்த உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன்.

இந்த பதிவின் நோக்கமே இதை படிக்கும் உங்களுக்கும் இத்தகைய செயல்களை செய்யவேண்டும், கோவில்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதற்கு தானே தவிர, வேறு எதுவும் அல்ல.

————————————————————————————————————-
ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:!!

பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக.
————————————————————————————————————-
மஹாளய அமாவாசையின் சிறப்பு பற்றிய பதிவை ஞாயிற்றுக்கிழமை எழுதும்போதே, திங்களன்று அதாவது அமாவாசை தினத்தன்று நான் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுத்துவிட்டேன்.

வீட்டில் அப்பா தன் தாத்தாவுக்கும் அவர் முன்னோர்களுக்கும் முறைப்படி செய்ய வேண்டிய சிரார்த்தத்தை செய்துவிடுவார் என்பதால் அதை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய போது நான் போக முடிவெடுத்தது அருகில் உள்ள திருவேற்காடு. (சுமார் 5 கி.மீ.).

காரணம், திருவேற்காட்டில் இருக்கும் தொன்மையான சிவாலயம் மற்றும் வழியில் உள்ள ஒரு கோ-சாலை. (பசு காப்பகம்!).

ஏற்கனவே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டிருந்தபடியால் எந்த விதம் அவசரமும் இல்லாமல், காலை திருவேற்காடு கிளம்பினேன். எங்கள் பகுதியில் உள்ள காய்கறிக்கடை ஒன்றில் சுமார் 10 கட்டுக்கள் அகத்திக்கீரைகளை வாங்கினேன்.

அடுத்த சில நிமிடங்களில் டூ-வீலரில் திருவேற்காடு பயணம்.

திருவேற்காடு செல்லும் வழியில் உள்ள பெருமாள் அகரத்தில் உள்ள கோ சாலைக்கு சென்றால், அங்கே கூட்டமோ கூட்டம் அப்படியொரு கூட்டம்.

பண்டிகை மற்றும் விசேஷ நாள் என்றால் இந்த பசு காப்பகத்தில் கூட்டம் அலைமோதும். கோ பூஜை செய்ய ஒரு முறை இங்கு சென்றிருக்கிறேன். ஆகையால் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கவேண்டும் என்று எண்ணிய போது இந்த இடம் உடனே மனதில் தோன்றியதில் வியப்பில்லை.

வயதான, கறவை நின்றுபோன, கசாப்பு கடைகளுக்கு செல்லும் பசுக்களை மீட்டு கொண்டு வந்து இங்கு பராமரிக்கின்றனர். தவிர விசேஷ நாட்களில் கோ தானம் செய்பவர்கள் அளிக்கும் நல்ல ஆரோக்கியமான பசுக்களும் இங்கு உண்டு.

காப்பகத்துக்கு வெளியே வரிசையாக சாலை ஓரங்களில் கார்கள் அணிவகுத்து நின்றிருந்தன. அப்பொழுதே புரிந்தது. வசதிமிக்கவர்கள் திரளாக கோ-பூஜை மற்றும் கோ-தானத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று.

இன்றைக்கு மேற்படி செல்வந்தர்கள் பசுக்களுக்கு தீவனங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டியிருப்பார்களே… குசேலன் அவல் கணக்காக நான் கொண்டு செல்லும் சில கட்டு அகத்திக்கீரைகளுக்கு என்ன மதிப்பிருக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன். இருப்பினும், எதற்கும் உள்ளே சென்று பார்த்துவிடுவோம்.

கீரைகளை கொடுக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை, பசுகொட்டிலில் காலையாவது வைத்துவிட்டு வந்துவிடுவோம் என்று எண்ணி உள்ளே சென்றேன். (பசுவின் கால் தூசி படுவது கங்கையில் குளிப்பதற்கு சமம்!) இரண்டாவது பசுக்கொட்டிலில் செய்யப்படும் பிரார்த்தைனைகள் மற்றும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பன்மடங்கு பல தரக்கூடியவை. சக்திமிக்கவை.

கேட்டை திறந்து உள்ளே சென்றால், எள் போட்டால் எள் எடுக்க இடமில்லை என்னுமளவிற்கு ஒரே கூட்டம். அதாவது பசுக்கள் கட்டப்பட்டிருக்கும் கொட்டிலுக்கு முன்பாக உள்ள வராண்டா போன்ற இடம் அது. சுமார் 20 பேர் மட்டுமே நிற்கக் கூடிய அந்த இடத்தில் 100 பேர் இருந்தனர். நான் சென்றிருந்த சமயம், கண்ணன் பட்டாச்சார்யா வந்திருந்தார். (இவர் தினமும் காலை ஜீ – தமிழ் தொலைக்காட்சியில் அருளோசை நிகழ்ச்சியில் வருவார்.)

அநேகமாக கோ-தானம் செய்பவர்கள் எவரேனும் பூஜைக்காக அவரை அழைத்துவந்திருக்கவேண்டும். அல்லது காப்பகமே அவரை இன்றைக்கு பூஜைகளுக்காக அழைத்து வந்திருக்கவேண்டும்.

ஒரு பக்கம் கோ-பூஜை, மறுபக்கம் கோ-தானம் என்று எங்கெங்கு பார்க்கிலும் வேதம் மந்திர முழக்கங்கள் தான்.

கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று, மெயின் கொட்டகை கேட்டை அடைந்தேன். கொட்டகையின் உள்ளேயும் கூட்டம். அங்கும் ஒரு பசு + அதன் கன்றுக்கும் சேர்த்து கோ பூஜை நடந்துகொண்டிருந்தது. காவலாளி கோ-தானம் அளித்தவர்களையே உள்ளே விட மறுத்துக்கொண்டிருந்தார். “உள்ளே போனவங்க முதல்ல வெளியே வரட்டும். அப்புறம் நீங்க உங்க பூஜைக்கு உள்ளே போகலாம். அங்கே போய் எங்கே நிப்பீங்க? அந்த பக்கம் ஃபுல்லா மாடுங்க நின்னுக்கிட்டுருக்கு. அதான் சொல்றேன்” என்று அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை கொடுக்க வந்திருப்பதாக கூறினேன். கையில் இருந்த கட்டுக்களை காண்பித்தேன். என்ன நினைத்தாரோ என்னை உள்ளே அனுமதித்தார். ஏதோ அயல்நாட்டு விசா கிடைத்த மாதிரி எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

உள்ளே சென்று கட்டுக்களை பிரித்து, கீரையை கொடுக்க ஆரம்பித்தேன். பசுக்கள் நான் கொடுப்பதற்கு முன்பாக அவற்றை பிடித்து இழுத்து போட்டி போட்டு உண்டது, கண்கொள்ளா காட்சி. இங்கு சில பசுக்கள் சாப்பிடும்போது அவர்களுக்கு அடுத்த வரிசையில் உள்ளவைகளும், “ஏய்… எனக்கு… எனக்கு” என்று தலையை கயிற்ருடன் சேர்த்து இழுத்து இழுத்து திமிறிக்கொண்டு சைகை காட்டின.

“இதோ வர்றேன் .. இதோவர்றேன்… அவசரப்படாதீங்க” என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு பசுவாக கீரைகளை பிரித்துக்கொடுத்தேன். இப்படியே ஓரளவு எல்லா பசுக்களுக்கும் கொண்டு சென்ற கீரைக்கட்டை பிரித்து கொடுத்தாயிற்று.

பசுக்களுக்கு கீரை கொடுப்பதை பார்த்து, கடைசி வரிசையில் நின்றிருந்த சில எருமைகளும் கீரைகளை கேட்டு ரகளை செய்ய, அதுங்க மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு… என்று அவற்றுக்கும் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்தேன். பின்னர் பராமரிப்பவர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது, பசுக்களை ஏற்றிக்கொண்டு கசாப்புக்கடைக்கு செல்லவிருந்த ஒரு வண்டியை மீட்டபோது, அவர்களுடன் இந்த எருமைகள் சிலவும் இருந்தனவாம். அவற்றையும் மீட்டு வந்திருக்கிறார்கள். கொடூர மரணத்திலிருந்து எமனின் வாகனத்தையே மீட்டு வந்திருக்கிறார்கள். நல்ல விஷயம் தான்.

உள்ளே நின்ற அந்த அரைமணி நேரம் பல பசுக்கள் கோமியங்களை கழிப்பதும் சாணங்கள் போடுவதுமாக இருந்தன. ஆனால் ஒரு சின்ன நாற்றம் அடிக்கவேண்டுமே… ஒரு சின்ன சத்தம் கேட்கணுமே… ஹூம்…ஹூம்… அது தாங்க பசுமாடு. (பசுவுக்கென்று தனி சிறப்புகள் உண்டு. படித்தால் வியந்து போவீர்கள். அதை தனிப் பதிவாக பின்னர் தருகிறேன்!).

இப்படி பசுமாடுகளுக்கு அகத்திக் கீரைகளை கொடுத்தபின்னர், அவற்றின் முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, வெளியே வந்தேன்.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர்

ஆட னாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.
- திருஞானசம்பந்தர்

பொருள் : ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

அடுத்து நேரா நம்ம பயணம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். திருவேற்காட்டுக்கு பெயர் காரணமே அங்கே இருக்கும் சிவன் கோவில் தான். காலப்போக்கில் கருமாரியம்மன் ஆலயம் ஃபேமஸாகிவிட்டது.

கோவிலை அடைந்தவுடன் அர்ச்சனை பொருட்கள் + ஒரு ஜோடி விளக்கும் வாங்கிக்கொண்டு உள்ளே போனேன்.

உள்ளே வேதபுரீஸ்வரர் அற்புதமான அலங்காரத்தில் இருந்தார். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்துணை அழகு. பின்னால் இறைவனின் திருக்கல்யாணக் காட்சி சிற்பத்தை விஷேட அலங்காரம் செய்திருந்தார்கள். அது இன்னும் அழகு.

(இந்தக் கோவிலோட விசேஷமே அது தான். விரிவானக தகவல்களுக்கு http://www.shivatemples.com/tnaadut/tnt22.php பார்க்கவும்.)

அர்ச்சனை முடிந்தபிறகும் கூட அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் நின்றுகொண்டிருந்தேன். ஒரு வழியாக தரிசனம் முடிந்த பின்னர், பிரகாரத்தை வலம் வரும்போது, கதிரவனின் ஒளிக்கதிர்கள் கருவறைக்கு பக்கவாட்டில் வெளியே விழும் காட்சி பார்க்க அத்துணை ரம்மியமாக அசத்தலாக இருந்தது. (பார்க்க புகைப்படம்!)

பிரகாரத்தை சிவநாமத்தை கூறியபடி சுற்றி வந்து, அம்பாளை தரிசித்துவிட்டு, நவக்கிரகங்களை வலம் வந்து பின்னர் தரிசனத்தை நிறைவு செய்தேன்.

கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு நிமிர்ந்தேன். எதிரே ஒரு அம்மாவும் மகனும் ஒரு பக்கெட்டில் தயிர் சாதம் கொண்டு வந்து அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு தொன்னை நிறைய இஞ்சி, கருவேப்பிலை போட்ட தயிர் சாதம் கிடைத்தது. அடடா நமக்கு இது தோணாம போச்சே என்று நொந்துகொண்டேன். அடுத்த முறை ஏதாவது விசேஷம் வரும்போது செய்துடலாம் என்று எண்ணிக்கொண்டு சாப்பிட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

வெளியே வந்தேன். கோவில் குளம் மிகவும் ஈர்த்தது. கோவிலையும் முருகப் பெருமான் உருவாக்கிய குளத்தையும் ஒருங்கே ஒரு நல்ல ANGLE தேர்வு செய்து படம்பிடித்தேன்.

நல்ல நாள் அன்று நல்ல விஷயம் செய்த திருப்தியும், வேதத்திற்க்கே தலைவனான வேதபுரீஸ்வரரையும் தரிசித்த திருப்தியுடன் வீடு திரும்பினேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum