தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

Go down

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1) Empty மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

Post  ishwarya Mon Feb 18, 2013 1:52 pm



சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் பொதுமக்கள் அதிகம் அறிந்திராத நூற்றுக்கணக்கான அழகிய கோவில்கள் இருக்கின்றன. இத்தகைய கோவில்களுக்கு சென்று அந்த அனுபவத்தை ஒரு நான்கு பேரிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் செல்ல ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம்.

இவைகளில் ஆகர்ஷன சக்தியை தங்களுக்குள் கிரகித்துக்கொண்டு சிறந்த பரிகாரத் தளங்களாக விளங்குபவைகளும் இருக்கின்றன. விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ போவதற்கு பல முறை யோசிக்க வேண்டியுள்ளது. ஒரு மாறுதலுக்காக இது போன்ற அழகிய கோவில்களுக்கு மாதமொரு முறை செல்லலாம். குடும்பத்தினருடன் பயனுள்ள முறையில் ஒரு நாளை கழித்த உணர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு சென்றதற்கான பலனையும் ஒரு சேர அடையலாம். (Rare temples தவிர பிரபல கோவில்களும் இந்த பகுதியில் அவ்வப்போது இடம்பெறும்!)

சென்ற வருடம் முக்கிய விஷயம் ஒன்றைப் பற்றி நண்பர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தவேண்டியிருந்தது. பரபரப்பின்றி காணப்படும் அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு அனைவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது தோன்றிய இடம் தான் இந்த மலை ஆஞ்சநேயர் கோவில். மனதில் இன்னும் அதன் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.

தாம்பரத்தை அடுத்த வண்டலூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது இந்த கோவில். வண்டலூரிலிருந்து அநேகமாக சுமார் 15 கி.மீ இருக்கும்.

அடுத்த சில நாட்களில் விஜயதசமி திருநாள் என்பதால், அன்றைக்கு அனைவரும் மேற்படி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வோம். சுவாமி தரிசனத்துக்கு பின்னர் நம் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். என்னை பொறுத்தவரை கோவிலுக்கு போனது போலவும் ஆச்சு. நம்ம விஷயத்தை டிஸ்கஸ் செய்வதற்கு ஏற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்த மாதிரியும் ஆச்சு. ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கோவிலில் லௌகீக விஷயங்கள் பேசக்கூடாது என்றாலும், ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேசி முடிவெடுக்க நாங்கள் விரும்பியதால் இந்த இடமே சரியென்று பட்டது. மேலும் அனுமனின் கோவிலில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் விஷயம் தடையின்றி சிறப்பாக நடந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை.

சென்னையில் இப்படி மலை மேலொரு ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருப்பது பலருக்கு தெரியாது. இந்தக் கோவிலுக்கு இதற்க்கு முன்பு பெற்றோருடன் ஒருமுறை நான் சென்றிருக்கிறேன். மிக மிக ரம்மியமான அமைதியான இடம். கிட்டத்தட்ட திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு போவது போலவே இருக்கும். (இங்கிருந்து சில கி.மீ. தொலைவில் ரஜினி அவர்களின் பண்ணை வீடு இருப்பதால், அதிகாலை வேளைகளில் சர்ப்ரைசாக சில முறை இங்கு வந்து சென்றிருக்கிறாராம் ரஜினி.)

டூ-வீலரில் ஆளுக்கு இருவர் வீதம் சென்றாலே சென்றுவிடலாம் என்றாலும் நாங்கள் அங்கிருந்து வேறொரு இடம் செல்ல விரும்பியதால் டிராவல்ஸில் வேன் புக் செய்துவிட்டோம்.

கோடம்பாக்கத்தில் இருந்து சரியாக காலை 7.30 மணிக்கு கிளம்பிவிட்டோம். எங்க ஸ்டார்டிங் பாயிண்ட் எப்பவுமே இதுதான். வடபழனியில் நூறடி ரோட்டை பிடித்து, கிண்டி சென்று, வண்டலூர் செல்லவேண்டும். முன்னதாக குரோம்பேட்டை ஹாட் சிப்ஸில் சிம்பிளாக எங்கள் டிஃபனை முடித்துக்கொண்டோம்.

அடுத்து ஒரு அரைமணி நேரத்தில் வேன் வண்டலூரை அடைய, அங்கு ஜூவுக்கு அருகில் இருக்கும் கேளம்பாக்கம் சாலையில் திரும்பினோம். கிளைமேட் மிதமாக இருந்தது. அதிக வெயிலில்லை. அவ்வப்போது தூறி சூழ்நிலை சற்று குளுமையாக இருந்தது.


சரியா ஒரு அரைமணிநேரத்தில் கோவில் அமைந்திருக்கும் புதுப்பாக்கம் வந்துவிட்டது. சாலைக்கு அருகிலேயே ஒரு ஆஞ்சநேயர் சிமெண்ட் விக்ரகம் இருந்தது. அதையொட்டிய சிமென்ட் சாலையில் வண்டி திரும்ப… சில வினாடிகளில் கோவில் அடிவாரம்.

———————————————————————————————————
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் மாருதியை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

*புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்*

பொருள் : அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!
———————————————————————————————————

கீழே நவக்கிரஹங்களுடன் கூடிய அழகான பிள்ளையார் கோவில் ஒன்று இருந்தது. சூடம் கொளுத்தி தும்பிக்கையானை அனைவரும் வணங்கிய பின்னர்… வெளியே ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். (ஒரு வயதான நண்பர் தோப்புக்கரணம் போடவில்லை. மன்னிப்போமாக!)

பிறகு படிகளில் ஏறத் துவங்கினோம். படிகள் என்றவுடன் பயப்படவேண்டாம். ஏறுவதற்கு மிகவும் சௌகரியமான வகையில் தான் படிகள் கட்டப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் மலை உச்சிக்கு சென்றுவிடலாம்.

படி தவிர, கார் மற்றும் டூ-வீலரில் மலையில் ஏறுவதற்கு சாலை வசதியும் இருக்கிறது. கான்க்ரீட் மற்றும் தார் சாலை அமைத்திருக்கிறார்கள். (அந்த சாலை பக்கவாட்டில் இருக்கும். நேரிதேரே தெரியாது/).

படிகளில் ஏற ஏற, புதுப்பக்கம், மற்றும் கேளம்பக்கத்தின் சுற்றுப்புறங்கள் மிக அழகாக தெரிந்தன. எங்கெங்கும் காணினும் பச்சைப் பசேலென்று இருக்க… நாம் இருப்பது சென்னையா அல்லது வேறு ஏதேனும் ஒரு பசுமைக் கிராமமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

மேலும், அந்த வெயிலிலும் குளிர்ந்த காற்று சில்லென்று வீச… மலைக்கு மேல்… ஏர்கண்டிஷன் செய்தது போலிருந்தது.

படிகள் சில நிமிடம் ஏறியவுடன், மண்டபம் போன்ற ஒரு அமைப்பு. அதில், கோவிலின் சிறப்பு மற்றும் இங்கு செலுத்தக்கூடிய பிரார்த்தனைகள் பற்றி எழுதப்பட்ட போர்டு காணப்பட்டது.

* தீராத நோய் தீர
* பிரிந்த தம்பதியினர் சேர
* எடுத்த காரியம் நிறைவடைய
* இடையூறுகள் நீங்க வழக்குகளில் வெற்றி பெற
* நல்ல காரியத்தை துவக்க
* மகிழ்ச்சியுடன் இருக்க குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் நீங்க
* கோள்களின் தோஷம் உட்பட சகல தோஷங்களும் நீங்க

என்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு அதில் எழுதப்பட்டிருந்தது. அனைத்துமே நாம் மனது வைத்தால் சுலபமாக செய்யக்கூடியது தான். உங்களால் முடிந்தவற்றை செய்து பலன் பெறுங்கள்.

அடுத்த சில நிமிடங்கள் மறுபடியும் படி ஏறுதல்…. முடிவில் உச்சிக் கோவிலை அடைந்துவிட்டோம்.

நாங்கள் சென்ற நாள் விஜயதசமித் திருநாள் என்பதால் நல்ல கூட்டம். அனைவரது பெயர், ராசி மற்றும் நட்சத்திரம் இவற்றை கூறி கிராண்ட் அர்ச்சனை ஒன்று அனுமனுக்கு செய்தோம். நண்பர் சுருதி சங்கர், அனைவரின் சார்பாக மிகப் பெரிய மாலை ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதை அனுமனுக்கு அர்ச்சகர் சாத்த, திவ்ய தரிசனம் போங்க.

பின்னர் அனைவரும் ஆஞ்சநேயரின் பாதத்தில் சமர்பித்து ஆசி பெறுவதற்காக அவரவர் தங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்தோம். அனுமனின் பாதத்தில் வைக்கப்பட்டு திருப்பித் தந்தார் அர்ச்சகர்.

கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால் தல வரலாறு பற்றி கேட்க இயலவில்லை. ஆனால், இந்த ஷேத்ரத்துக்கு கஜகிரி என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மலை மீதுள்ள கோவில் என்பதால் நிச்சயம் ஏதேனும் தொன்மையான தொடர்பு இருக்கவேண்டும். (யாருக்கேனும் தெரிந்தால் கூறவும்).

தரிசனம் முடித்து, ‘ஸ்ரீ ராம ஜெயம்’ கூறிக்கொண்டே பிரகாரத்தை வலம் வந்தோம். முதலில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மிகப் பெரிய படம் ஒன்று காணப்பட்டது. (நம்ம ராசி நாம எங்கே போனாலும் அங்கே ராகவேந்திரர் ஏதோ ஒரு ரூபத்துல இருப்பார்.) அதில் சுவாமிகளின் பிறந்த தேதி, நட்சத்திரம் உள்ளிட்டவற்றை எழுதியிருந்தார்கள். அந்த படத்துக்கு முன்பாக நின்று கொண்டு ஆளாளுக்கு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

பிரகாரத்தில் கருவறையை சுற்றிலும் ராமாயணக் காட்சியை அழகிய சித்திரங்களாக தீட்டியிருந்தார்கள். ஒவ்வொன்றையும் ரசித்தோம். வலம் வந்து முடித்தவுடன் கை நிறைய கல்கண்டு + கொஞ்சம் திருத்துழாய் (துளசி) பிரசாதமாக கிடைத்தது. யாரோ ஒருவரின் உபயம் போல. மனதுக்கு இதமாக இருந்தது.

கொடுத்த வைத்த மரம்

பிரகாரத்துக்கு வெளியே விருட்சம் ஒன்று காணப்பட்டது. பக்தர்கள் சமர்ப்பிக்கும் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மாலைகளை சுவாமிக்கு சாத்திய பின்னர், இந்த மரத்தில் போட்டுவிடுவார்கள் போல ஏகப்பட்ட மாலைகள் காணப்பட்டது. அத்துணை மரங்கள் அங்கிருக்க, இந்த மரம் மட்டும் என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை… இத்துனை ராமனாமாக்களை சுமப்பதற்கு. அநேகமாக இந்த மரம், யாரேனும் ஒரு ரிஷியாக இருக்கவேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. (அறிவியல் படி மரத்துக்கு உயிர் இருக்கிறது தெரியுமில்லே?)

Road for two-wheelers & cars

தரிசனம் முடித்து, உட்கார்ந்தோம். சிறிது நேரம் அனைவரும் தியானம் செய்த பின்னர்… நாங்கள் வந்த விஷயம் பற்றி பேசி நல்லதொரு முடிவு எடுத்தோம்.

இன்னொன்னு சொல்ல மறந்துவிட்டேனே… மலை மீதுள்ள உள்ள விசாலமான இடம் ஒன்றில், அருமையான VIEW POINT ஒன்று இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் கேளம்பாக்கம், மற்றும் புதுப்பக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகள் மிகப் பிரமாதமாக தெரிந்தன. அதன் மீது நின்று ‘டைட்டானிக்’ ரேஞ்சுக்கு நண்பர்கள் ஆளாளுக்கு போஸ்கள் கொடுத்து காமிராவின் பாட்டரியை தீர்த்துவிட்டனர்.

கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், உடனிருப்பவர்கள் தான் நண்பர்கள் என்று புது இலக்கணம் ஏற்பட்டுவிட்ட இந்நாட்களில், “நல்ல நாள் இன்னைக்கு… கோவிலுக்கு போகலாம் வாங்க” என்று அழைத்தால் வருவதற்கு நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் இறைவனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30 முதல் 11.30 வரை. மாலை : 5.00 முதல் 8.00 மணி வரை.

நாமக்கல்லிலும் நங்கநல்லூரிலும் இருக்கும் அனுமனுக்கு தான் சக்தி அதிகம் என்றில்லை. இறைவழிபாட்டை பொறுத்தவரை… எந்த தெய்வமாக இருந்தாலும் சரி… எந்த ஊராக இருந்தாலும் சரி… நமது நம்பிக்கை எந்தளவு இருக்கிறதோ அந்தளவு அந்த தெய்வத்தின் சக்தியும் இருக்கும். சில ஷேத்ரங்களில் சில மூர்த்தங்களுக்கு சக்தி அதிகம் என்று சொல்லப்படுவதன் காரணம்… ஆகம விதிகளின் படி… அறிவியலின் படி… பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை கட்டப்பட்டது தான். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

———————————————————————————————————
ஆஞ்சநேய காயத்ரி :

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்

(நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லிவாருங்கள். மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம்).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum