தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்!

Go down

காதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்! Empty காதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்!

Post  amma Mon Feb 18, 2013 12:32 pm

சென்ற மாதம் ஒரு நாள், எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பிரபல நடிகருடன் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ‘இப்படி ஒரு தளத்தை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்’ என்று அவரிடம் கூறியவுடன், “நீ உடனே என் வீட்டிற்கு வா; ஆன்மீகத்தை பற்றி நான் உனக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறேன்” என்று கூறினார். எதிர்பாராத இந்த அழைப்பால் எனக்கு ஒரே சந்தோஷம். தேடி வரும் வாய்ப்பை எதற்கு விடுவானேன் என்று அவருடனான சந்திப்புக்கு தயாரானேன்.

இதற்கு முன்பு எத்தனையோ பிரபலங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் வீடியோ பேட்டி எடுத்ததில்லை. எங்கள் உரையாடலை பெரும்பாலும் என் மொபைலில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்துவிடுவேன். பின்னர் ஆடியோவை பிளே செய்து செய்து எழுதுவேன். இது மிகவும் கடினமான ஒரு பணி என்பதால் வீடியோ பேட்டி எடுக்க ஆசை. இருப்பினும் அதற்கு ஆகும் செலவை மனதில் கொண்டு அதை தவிர்த்து வந்தேன். மேலும் அதை பக்காவாக எடிட் செய்து இணையத்திலோ யூ-டியூபிலோ அப்லோட் செய்ய எனக்கு தொழில்நுட்ப வசதியோ அல்லது HUMAN RESOURCE என்று சொல்லப்படும் ஆட்கள் உதவியோ கிடையாது. என் நண்பர்களிடமும் அதை செய்துத் தரக்கூடிய அளவிற்கு வசதிகள் உள்ள கம்ப்யூட்டரோ கிடையாது. எனவே வீடியோ பேட்டியில் நான் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை.

ஆனால் மேற்படி நடிகர் என்னை அழைத்தபோது, “வீடியோ காமிராமேனையும் அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டபடியால் அவரது வார்த்தையை தட்ட முடியாது வீடியோ காமிராமேன் ஒருவரை என்னால் இயன்ற தொகைக்கு ஏற்பாடு செய்துகொண்டு நண்பர்கள் இருவரையும் அழைத்துகொண்டு சென்றேன்.

“ஆன்மீகத்துல இவர் என்ன பேட்டி கொடுப்பார்?” என்று எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. அலட்சியத்தினால் அல்ல. இயல்பான ஒரு சந்தேகம்.

ஆனால் பேட்டியில் மனிதர் பேச ஆரம்பித்தார் பாருங்கள் … ஒரு கட்டத்தில் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் முட்டி விட்டது. நாம ஏதோ உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம் போல என்று நினைத்து நண்பர்களை பார்த்தால் அவர்களுக்கும் அப்படித்தான்.

பேட்டி அளித்துக்கொண்டிருந்த அந்த நடிகரோ பெருகி வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அந்தளவு மனிதர் ஊனை உருக்கி எடுத்துவிட்டார்.

அவர் அப்படி என்ன பேசினார்? யாரைப் பற்றி பேசினார்?

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்கியவரும், தன்னை நாடி வந்த பக்தர்களின் பாவங்களை பார்வையினாலேயே பொசுக்கியவருமான, மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி – மகா பெரியவா – என்று பக்தர்களால் அன்போடு அழைப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்.

மகா பெரியவாவை பற்றி அவர் நிகழ்த்திய அற்புதங்களை பற்றி நான் நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு. ஆனால் அவரையே நினைத்து உருகியது கிடையாது. ஆனால் மேற்படி நடிகர் அவரது அனுபவத்தை கூறியவுடன் எனக்கு பெரியவா மீது பேரன்பும் பெருமதிப்பு ஏற்பட்டதோடல்லாமல் எனக்கு பெரியவாவை பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்த தேடலின் விளைவாக இதோ இன்று அவரது பரம பக்தனாக மாறிவிட்டேன்.

தெய்வம் என்னை தடுதாட்கொண்டது. வேறன்ன சொல்ல?

மகா பெரியவர் தான் வாழ்ந்த காலத்தில் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல. ஏன் தற்போது கூட அவரது ஆத்யந்த பக்தர்களின் வாழ்வில் அவர் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு குறைவே இல்லை.

தன்னை சந்திக்க வரும் எத்தனையோ பேருக்கு தன்னுடைய புண்ணியத்தின் பலன்களை வழங்கி அவர்களின் கர்மவினைகளை உடைத்தெறிந்து நல்லது நடக்க வைத்தவர் மகா பெரியவர்.

தான் செய்த உபதேசப்படி வாழ்ந்து காட்டிய மகான். சாட்சாத் அந்த ஈஸ்வரனின் அம்சமாக கருதப்பட்ட அவர் மீது பக்தர்கள் பேரன்பு வைத்திருந்தனர். தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் குறைகளை தீர்க்கும் கற்பக விருட்சமாக திகழ்ந்தார் மகா பெரியவா. தனது மகா சமாதியில் ஜீவனுடன் இருந்து தற்போதும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.

எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ தெரியாது…. கடும் சோதனை, அதன் விளைவாக ஏற்பட்ட தேடல், பின்னர் நல்லோர்களின் நட்பு, சாதனையாளர்களுடன் அறிமுகம், சான்றோர்களின் ஆசி, இறையடியார்களுடன் பழக்கம் என தற்போது வாழ்க்கையே தலை கீழாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

அந்த நடிகர் யார்? எப்படி எங்கள் சந்திப்பு நடைபெற்றது? மகா பெரியவாவை பற்றிய அவர் அப்படி என்ன பேசினார் உள்ளிட்ட விபரங்கள் நிச்சயம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். அந்த நடிகர் அளித்த வீடியோவின் எடிட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் நமது தளத்தில் அப்லோட் செய்யப்படும்.

இப்போதைக்கு மகா பெரியவா தன்னுடைய மெய்யன்பர்கள் சிலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தை பார்ப்போம்….

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!

பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் என்பவர் கூறுகிறார்.

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?……….பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்……….அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?

(நன்றி : balhanumaan.wordpress.com)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மகா பெரியவாவின் வாக்கு அவர் மெய்யன்பரின் உயிரை காத்த நிகழ்வு!

பெரியவா பற்றி அவரது அற்புதங்கள் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. வந்துகொண்டிருக்கின்றன. காமேதேனு பப்ளிகேஷன்ஸ் சார்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நூல் ‘மகா பெரியவா.’ சமீபத்தில் நடந்த புத்தக சந்தையில் இந்நூலை வாங்கினேன்.

நூலை படிக்க ஆரம்பித்தேன். என்னால் ஒரு அத்தியாயம் கூட முழுமையாக படிக்கமுடியவில்லை. முதல் அத்தியாயமே அத்தனை அற்புதம்; நெகிழ்ச்சி!

இப்படி இவரின் அருளைப் பெற வழியின்றி நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. நூலில் கூறப்பட்டுள்ளவர்களுடன் ஒன்றி என்னையுமறியாமல் கண்கலங்கிவிட்டேன். நண்பர்கள் சிலருக்கு இந்நூலை ரெகமன்ட் செய்ய அவர்களும் இதையே சொன்னார்கள். மிகையல்ல என்பது படிக்கும்போது உங்களுக்கு புரியும்.

இந்நூலில் இருப்பது பெரியவரின் அற்புதங்கள் மட்டுமல்ல. நமக்கும் ஒரு ஆன்ம பரிசோதனை. நாம் வாழும் வாழ்வு எத்தகையது என்று சீர் தூக்கி பார்க்க உதவும் ஒரு தராசு.

நான் படித்து பரவசப்பட்டு நண்பர்களுக்கு சொல்ல, அவர்கள் என்னை தங்களுக்கொன்றும் வாங்குமாரு சொல்ல, அதற்கு பிறகு நான்கைந்து புத்தகங்கள் வாங்கிவிட்டேன்.

மேற்படி மகத்தான நூலை எழுதியிருப்பவர் திரு.பி.சுவாமிநாதன். பெரியவாவின் பரம பக்தர். சமீபத்தில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் நண்பர். நம் தள வாசகர்.

நண்பர் ஒருவர் ‘பெரியவாவின் வாக்கு’ பற்றி தான் கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தை என்னிடம் சென்ற வாரம் கூறியிருந்தார். அது பற்றி இவரிடம் கேட்கலாம் என்று நினைத்து கேட்டபோது கூடுதல் தகவல்களுடன் அவர் நமக்கு கூறிய சம்பவம் மெய்சிலிரிக்க வைப்பது.

இது நடந்து பல வருடங்கள் இருக்கும். திருநெல்வேலியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் அவர். வயது 80 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. பெரியவாளின் பரம பக்தர். தன்னால் இயன்றபோதெல்லாம் காஞ்சி வந்து மடத்தில் தங்கி பெரியவாளை தரிசித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி ஒருமுறை வந்திருந்து மடத்தில் நான்கு நாட்கள் தங்கினார். ஐந்தாவது நாள்… சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார். கிளம்பும் முன் பெரியவாளிடம் ஆசி பெற்று ஊர் திரும்ப வேண்டி அவர் முன் போய் நின்றார்.

“என்னப்பா கிளம்பிட்டியா?”

“ஆச்சு சுவாமி”

“சாப்பிட்டாச்சா?”

“அதுவும் ஆச்சு சுவாமி”

“சரி பார்த்து பத்திரமா போ. பசிச்சா கூட வழியில நீ எதுவும் சாப்பிட மாட்டே. தாகம் கீகம் எடுத்தா சோடா எதாச்சும் வாங்கி குடி” என்கிறார்

சரி என்று உத்தரவு பெற்று கிளம்பிவிடுகிறார்.

காஞ்சியில் இருந்து செங்கல்பட்டு வந்து அங்கே திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்து ஒன்றை பிடிக்கிறார். பேருந்தில் முன்பகத்திலேயே ஜன்னல் ஒர சீட் கிடைக்கிறது. சுகமான பயணம்.

பேருந்து திருச்சியை அடைந்த தருணம் ஒரு நான்கு இளைஞர்கள் பேருந்தில் ஏறுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் போல. அவர்கள் ஏறியதிலிருந்து பேருந்தில் ஒரே கலாட்டா தான்.

அடுத்தவர்களை தொந்தரவு செய்யாத வரையில் எதுவும் ஒ.கே தான். ஆனால் அவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்வதும் கூச்சலிடுவதுமாக இருந்தது. பேருந்தில் உள்ள பெண் பயனிகளை எல்லாம் கூட ஒரு கட்டத்தில் ஜாடை மாடையாக டீஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள். பேருந்தில் உள்ள எவருக்குமே அவர்களின் ஆட்டிட்யூட் பிடிக்கவில்லை. அவர்களிடம் எதற்கு பேச்சு கொடுப்பானேன் என்று யாரும் வாயை திறக்கவில்லை.

இதனிடையே பேருந்து மதுரை தாண்டியதும் அருகே ஒரு சாலையோர கடையில் நிற்க, பயணிகள் சிலர் இயற்கை உபாதையை கழிக்க பேருந்தில் இருந்து இறங்குகிறார்கள்.

நம்ம பெரியவருக்கோ ஒரே தாகம். ஜன்னல் வழியே பார்க்க, எதிரே பெட்டிக்கடை ஒன்று தெரிகிறது. அங்கு இவருக்கு முதலில் கண்ணில் படுவது சோடா தான். பெரியவர் தாகம் எடுத்தா சோடா ஏதாவது குடின்னு சொன்னாரே…. அவர் சாதாரணமா எதுவும் சொல்லமாட்டாரே? என்று பலவாறாக நினைத்து தான் கொண்டு சென்ற மஞ்சள் பையை தனது சீட்டில் வைத்துவிட்டு தாக சாந்தி செய்ய கீழே இறங்குகிறார்.

கடைக்கு சென்று சோடா குடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறுகிறார்.

இங்கு சீட்டில் இவர் வைத்த மஞ்சள் பையை காணவில்லை. அதற்கு பதில் அந்த நான்கு இளைஞர்களில் இருவர் அந்த சீட்டை ஆக்ரமித்து அமர்ந்திருக்கின்றனர்.

“என்னா பெரிசு? இன்னா தேடறே?”

அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் கிண்டல் சற்று அதிகமானது.

“என்னோட பை….பையை இங்கே வெச்சிருந்தேன்…. பார்த்தீங்களா…?”

” போய் வெச்ச இடத்துல தேடிப் பாரு….”

“நான் இங்கே தான் வெச்….சேன்….”

“அப்போ என்னா நாங்க எடுத்துட்டோம்னு சொல்றியா?”

“இல்லே… இங்கே தான் நான் உட்கார்ந்திருந்தேன்…”

“என்ன நீ இங்கே உட்கார்ந்திருந்தியா? பெரிசு சரக்கு கிரக்கு அடிச்சிருக்கும்போல… போ… போ… போய் வெச்ச இடத்துல தேடிப்பாரு….’” என்று விரட்ட…. இவருக்கு என்னவோ போலாகிவிடுகிறது.

சக பயணிகளுக்கு உண்மை தெரியும் என்றாலும் எவருக்கும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க எவருக்கும் தைரியம் இல்லை.

இவர்களிடம் வாயை கொடுப்பது வீண் வேலை என்று நினைத்த அந்த பெரியவர் பஸ்ஸில் வேறு எங்காவது பையை வைத்திருக்கிறார்களா என்று தேட ஆரம்பிக்கிறார்.

கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் இவரது பையை பார்க்கிறார். அங்கு போய் உட்கார்ந்துகொள்கிறார்.

மதுரையை தாண்டி பஸ் நெடுஞ்சாலையில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மணிநேரம் கழிந்திருக்கும். திடீரென ‘டமார்’ என்று சப்தம் கேட்கிறது. அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பஸ் மீது மோதிவிட முன்பக்கத்தில் இருந்த சீட்டுக்கள் அப்படியே நொறுங்கிப் போய்விடுகின்றன.

பெரியவரை கேலி செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிடுகின்றனர். வேறு சிலருக்கு படு காயம்.

பெரியவர் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போய் விடுகிறார்.

மகா பெரியவா ஏன் வழியில் தாகம் எடுத்தா சோடா ஏதாவது குடிக்குமாறு என்று சொன்னார் என்று அப்போது தான் இவருக்கு புரிகிறது.

ஒருவேளை தான் மட்டும் சோடா குடிக்க இறங்காதிருந்திருந்தால் அந்த இளைஞர்கள் இவர் சீட்டில் உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு உட்கார்ந்திருந்த இவர் இந்நேரம் பலியாகியிருப்பார்.

ஆனால் அந்த சூழ்நிலையிலும் அந்த இளைஞர்களுக்காக இவர் பரிதாபப்பட தயங்கவில்லை. அவர்களுக்காக அனுதாபப்பட்டு அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்தித்துக்கொண்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? சான்றோர்கள் மற்றும் இறைவனின் மெய்யடியார்களின் தரிசனமும் அவர்களது ஆசியும் நம்மையறியாமல் நமக்கு வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்துக்களிலிருந்து நம்மை காப்பாற்றும் என்பது தான்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum