தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நபிகள் வாழ்க்கையில்...

Go down

நபிகள் வாழ்க்கையில்... Empty நபிகள் வாழ்க்கையில்...

Post  ishwarya Sat Feb 16, 2013 5:08 pm

நம்பிக்கைக்கு உரியவர்கள்

இளமை முதல் உண்மை, விசுவாசம், நம்பிக்கை முதலான உயரிய குணங்கள் பெருமானார் அவர்களிடம் அமைந்திருந்தன. உண்மை பேசும் அவர்களுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நம்பிக்கையிலும் அவ்வாறு உயர்வு பெற்றிருந்தார்கள். மக்காவிலுள்ள மக்கள், பெருமதிப்புடைய பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் பொருட்டுப் பெருமானார் அவர்களிடம் கொண்டு வந்து கொடுப்பார்கள். அப்பொறுப்பை பெருமானார் அவர்கள் மிக நாணயமாக நிறைவேற்றினார்கள். ஆகையால், ‘நம்பிக்கைக்கு உரியர்’, ‘உண்மை பேசுபவர்,’ என்னும் பொருள் படைத்த ‘அல்அமீன்’, ‘அஸ்ஸாதிக்’ என்னும் பட்டங்கள் பெருமானார் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பெருமானார் அவர்களின் பகைவர்கள், அவர்களை நிந்தித்து எழுதிய கவிதைகளிலும் கூடப் பெருமானார் அவர்களை ‘அல்அமீன்’ என்றே கூறியுள்ளனர்.

ஏழை பங்காளர்

பெருமானார் அவர்கள் இளமைப்பருவத்திலிருந்தே பணிவும் கனிவும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். நலிவுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருடைய துன்பங்களைக் கேட்பதற்கு அவர்களின் காதுகள் எப்பொழுதும் தயாராயிருக்கும். உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிவார்கள். தெருவில் நடந்துபோகும்பொழுது அவர்கள் அடக்கத்தோடு நடந்து செல்வார்கள். அவர்கள் போகும்போது, ‘‘உண்மையும் நேர்மையும் உடைய அல் அமீன் அதோ போகிறார்கள்’’ என்று சுட்டிக்காட்டி மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வார்கள். பொருள் வாங்குவதற்காகப் பெருமானார் அவர்கள் கடைக்குப் போகும்பொழுது, வழியில் இருக்கும் ஏழை எளியவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘‘முஹம்மது கடைக்குப் போகிறார். உங்களுக்குத் தேவையான பொருள்களைச் சொல்லுங்கள். வாங்கி வருகிறேன்,’’ என்று கூறுவார்கள். அவர்கள் சொல்லும் பொருள்களை அவ்வாறே வாங்கி வந்து தருவார்கள்.

அடிமையை விடுவித்த உயர் பண்பு

செல்வந்தன்-ஏழை; முதலாளி-அடிமை என்ற வேறுபாடின்றி எல்லோரிடமும் அன்பும் சமத்துவமும் கொண்ட இயல்பு உடையவர்களாக பெருமானார் விளங்கினார்கள். இந்தச் சமத்துவ இயல்பினால், பெருமானார் உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். போரில் சிறைப்பட்டவர்களை அடிமைகளாக்கி, அவர்களை பண்டமாற்றுப் பொருள்களைப்போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தின் வழக்கமாயிருந்தது. ஒருசமயம், சிறைப்பிடித்து அடிமையான ஜைநுப்னு ஹாரிதா என்பவரை விற்பனை செய்வதற்காகச் சந்தைக்குக் கொண்டு சென்றனர். அவரை, ஹக்கீம் இப்னு ஹஸ்ஸாம் என்பவர் விலைக்கு வாங்கி, தம் தந்தையின் சகோதரி கதீஜா நாயகியாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். கதீஜா நாயகியாரோ, அந்த அடிமையைப் பெருமானாருக்குக் கொடுத்து விட்டார்கள்.

பெருமானார் அவர்கள், உடனே ஜைதை அடிமையிலிருந்து விடுவித்து, ‘‘நீர் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம்: அல்லது உம் விருப்பம்போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் போகலாம்’’ என்று கூறினார்கள். அவர்களுடைய உயர் பண்பால் உண்மை நெகிழ்ந்த ஜைது, பெருமானார் அவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லாதவராய் அவர்களின் காலடியிலே என்றும் இருந்துவிட்டார். ஜைது அடிமையான செய்தியை அறிந்த அவருடைய தந்தை, மகனை விடுவித்து அழைத்துப் போவதற்காகத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு தேடி வந்தார். அவர் மக்கா வந்ததும் தம் மகன் விடுதலை அடைந்த தகவல் தெரிய வந்தது. மகனை தம்மோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

‘‘அருமைத் தந்தையே! நான் விற்கவும் வாங்கவும் முடியாதபடி, பெருமானார் அவர்களின் அடிமையாகி விட்டேன். மேலும், அவர்களின் மேன்மைக் குணங்கள், பெற்றோரின் அன்பையும் சொந்த வீட்டின் சுகத்தையும் மறக்கச் செய்துவிட்டன!’’ என்று உள்ளம் கனியக் கூறி, தந்தையைத் திருப்பி அனுப்பி விட்டார் ஜைது.

முதல் அறிவிப்பு - ‘‘ஓதுவீராக!’’

ஒருசமயம் பெருமானார் அவர்கள், ஹிரா குகையில் ரமலான் மாதம் திங்கட்கிழமை ஆண்டவனுடைய வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது பேரொளி ஒன்று உதயமாயிற்று. ஓருருவம் தோன்றி, ‘‘முஹம்மதே! ஓதுவீராக!’’ என்று கூறியது. உடனே பெருமானார் அவர்கள், ‘‘நான் ஓதுபவன் அல்லனே (எனக்கு ஓதத் தெரியாதே)’’ என்று கூறினார்கள். அப்பொழுது அந்த தேவதூதர் அரபி மொழியில் வேத வசனங்கள் சிலவற்றை ஓதினார். அவற்றின் கருத்து: ‘‘எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவனேதான் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோல் மூலமாகக் கற்றுக்கொடுத்தான்: மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்கிறான்.’’ - (96: 1-5)

இம்மொழிகளைக் கேட்டதும் பெருமானார் அவர்களுக்கு மெய் சிலிர்த்தது. விவரிக்க இயலாத ஓர் ஆத்ம உணர்ச்சி தோன்றியது. அவர்கள் முன் தோன்றியவர், ‘ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்’ என்னும் பெயருடைய வானவர். அவர்கள் அவ்வப்போது பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவனுடைய சமூகத்திலிருந்து வெளியான தெய்வச் செய்திகளை அறிவிப்பார்கள். இவ்வாறு அறிவிக்கப்படுவது ‘வஹீ’ (தெய்வீக அறிவிப்பு) என்று கூறப்படும்.

திருக்குர்ஆன் முழுவதும் இவ்வாறு பெருமானார் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் ஆண்டவன் சமூகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெய்வச் செய்திகளே ஆகும். முதல் முறையாக அறிவிக்கப்பட்டது திருக்குர்ஆனின் ‘அலக்’ என்னும் அத்தியாயத்தின் துவக்கத்திலுள்ள ஐந்து திருவசனங்களாகும்.

திக்கற்றவரிடம் பரிவு

மக்காவில் ‘ஸெதா பின்த் ஸம்ஆ’ என்னும் பெண்மணி, பெருமானார் அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு முஸ்லிம் ஆனார். அவருடைய முயற்சியினால் அவருடைய கணவரும் இஸ்லாத்தைத் தழுவினார். அவர்களையும் மற்ற முஸ்லிம்களைப் போலவே குறைஷிகள் துன்புறுத்தினார்கள். அதனால் கணவனும் மனைவியும் மக்காவைவிட்டு அபிசீனியா நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில நாட்களில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அந்தப் பெண்மணியை ஆதரிப்பவர் எவரும் இல்லை. திக்கற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் பரிதாப நிலைமையைக் காணப் பெருமானார் அவர்களின் மனம் பொறுக்கவில்லை.

தவிர, ஆயிஷா நாயகியோ வயதில் சிறியவர்கள். பெருமானார் அவர்களின் வீட்டுக் காரியங்களை நிர்வகிக்கவும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் தகுதியானவர் ஒருவரும் இல்லை. மற்றும் விதவைகளை மறுமணம் செய்து ஆதரிப்பது முன்னே இருந்த தீர்க்கதரிசிகளின் வழக்கமாகவும் இருந்தது.
இத்தகைய காரணங்களினால் ‘ஸௌதாபின்த் ஸம்ஆ’ என்னும் பெண்மணியையும் பெருமானார் அவர்கள் மணம் செய்துகொண்டார்கள்.

முதல் பள்ளிவாசல்

மதினாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள குபா என்னும் ஊரில் பெருமானார் அவர்களும் அபூபக்கர் அவர்களும் வந்தனர். அங்கே இருந்த அன்சாரிகள் (மதீனாவாசிகள்) பெருமானார் அவர்கள் வருகை தெரிந்தும் மிகுந்த அன்போடு வரவேற்று அழைத்து வந்து உபசரித்தனர். மக்காவிலிருந்து அலி அவர்களும் குபாவில் பெருமானார் அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்டார்கள். பெருமானார் அவர்கள் குபாவில் முதலாவதாக ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். மற்றவர்கள் கட்டட வேலை செய்வதைப்போல நபி பெருமானாரும் பொருள்களை எடுத்துக்கொடுத்து, கூட வேலை செய்வார்கள். ‘‘நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்; நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்’’ என மக்கள் சொல்வார்கள். அப்பொழுது பெருமானார் அவர்கள் சிறிது நேரம் சும்மா இருப்பார்கள். பிறகு மீண்டும் வேலையில் ஈடுபட்டு விடுவார்கள்.

கட்டட வேலை செய்தவர்களுள் அரபிக் கவிஞர் ஒருவரும் இருந்தார். வேலை செய்யும் சிரமம் தெரியாமல் இருக்கும் பொருட்டு, அந்தக் கவிஞர் பாடுவார். பெருமானார் அவர்களும் அவரோடு சேர்ந்து பாடுவார்கள். குபாவில் பெருமானார் அவர்கள் திங்கட்கிழமையிலிருந்து வியாழன் வரை தங்கியிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டு பனூ ஸலீமுப்னு அவ்பு இடத்துக்கு வந்தார்கள். ஜூம்ஆத் தொழுகை நேரம் வந்துவிட்டதால் வாதீ ரானூனா என்னுமிடத்தில் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றினார்கள். மதீனாவில் அவர்கள் நடத்திய முதல் ஜூம்ஆ தொழுகை இதுதான்.

மதீனாவில் பள்ளிவாசல்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்து தங்கியதும், அங்கே ஒரு பள்ளிவாசலை நிறுவத் தீர்மானித்தார்கள். தங்களுடைய ஒட்டகம் முதன் முதலாக எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்திலேயே பள்ளிவாசலைக் கட்ட வேண்டும் என்பது பெருமானார் அவர்கள் விருப்பம். அந்த இடமானது ஸஹ்லு, ஸூஹைலு என்ற அநாதைச் சகோதரர் இருவருக்கு உரியது. பெருமானார் அவர்களின் எண்ணத்தை அறிந்த அந்தச் சகோதரர்கள் விலை ஏதும் பெறாமலேயே இடத்தைத் தர முன்வந்தனர். கருணையே உருவான பெருமானார் அவர்கள், அபூபக்கர் அவர்களைக் கொண்டு அந்தச் சகோதரர்களுக்கு, இடத்துக்கான கிரயத்தைக் கொடுக்கச் செய்தார்கள்.

பள்ளிவாசல் கட்டட வேலை தொடங்கப்பட்டது. மற்றவர்களுடன் சேர்ந்து பெருமானார் அவர்களும் கட்டட வேலை செய்தார்கள். பள்ளிவாசல் எளிய முறையில் அமைந்தது. எனினும் வணக்கம், தூய்மை, ஒழுக்கம், சத்தியம், சுத்தம் என்னும் உபகரணங்கள் அதில் இருந்தன. பள்ளி வாசலைச் சார்ந்த இரண்டு அறைகள் பேரீச்ச ஓலைகளால் அமைக்கப்பட்டு, அவற்றிலே பெருமானார் அவர்களும் குடும்பத்தினரும் இருந்து வந்தனர். ஐந்து வேளை தொழுகைகளையும் பெருமானார் அவர்கள், அந்தப் பள்ளி வாசலிலேயே நடத்தி வந்தார்கள். அங்கேயே மக்களுக்கு அறிவுரைகளும் கூறிவந்தார்கள்.

தொழுகைக்கு அழைத்தல்

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. அவ்வாறு கூடிச் செய்யும் வணக்கத்துக்கு மக்களை எல்லாம் அழைப்பதற்கு எவ்வித ஒழுங்கும் ஏற்படுத்தப்படாமல் இருந்து வந்தது. மக்கள் முன்னும் பின்னும் தங்கள் நோக்கம்போல் வந்து தொழுது வந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில், மக்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு ஒரு திட்டமான அடையாளம் இல்லாததால், தொழுகை நேரத்தில் மக்களை அழைத்து வருவதற்காகச் சிலரை நியமிக்கலாம் எனப் பெருமானார் கருதினார்கள். ஆனால், அவ்வாறு செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால் எல்லோரும் கூடி ஆலோசித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினார்கள்.

‘‘தொழுகை நேரத்தில், மக்கள் பார்க்கும்படியான உயரமான இடத்தில் ஒரு கொடியை கட்டச் செய்யலாம்’’என்றார் ஒருவர்.

‘‘தொழுகை நேரத்தில், மணி அடிக்கச் செய்யலாம்’’ என்றார் மற்றொருவர்.

‘‘சங்கு ஊதலாம்’’ என்றனர் சிலர்.

‘‘அடையாளத்துக்காக, நெருப்பைக் கொளுத்தலாம்’’ என்று சிலர் கூறினர்.

அவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, உமர் அவர்கள், (இப்பொழுது நடைமுறையில் இருந்துவரும்) பாங்கு-தொழுகைக்காக அழைக்கும் முறையை பெருமானார் அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக்கொண்டார்கள். முதன்முதலாக, அம்முறை, அந்தப் புதிய பள்ளி வாசலிலேயே தொடங்கப்பட்டது.

பெருமானார் அவர்களின் எளிய வாழ்க்கை

மதீனாவில் பள்ளி வாசலை ஒட்டி அமைந்திருந்த இரண்டு அறைகளில் பெருமானார் அவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அறைகளோ மிகவும் சிறியன. இரவு நேரங்களில் அந்த அறையில் விளக்குக்கூட இருக்காது. பெருமானார் அவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்தது. நாள் கணக்கில் அடுப்பு எரியாமலேயே இருக்கும். பெருமானார் அவர்கள் பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு தண்ணீரைப் பருகி, திருப்தி அடைவார்கள். ரொட்டி சுடுவதற்கு மாவு கிடைக்கவில்லையானால், வெறும் மாமிசத்தை மட்டுமே சமைத்து உண்டுவிடுவார்கள். சில வேளைகளில், பெருமானார் அவர்கள் ஒட்டகப் பாலையும் அருந்துவார்கள். பெருமானார் அவர்கள் தாங்களே வீட்டைப் பெருக்குவார்கள்.

நெருப்புப் பற்ற வைப்பார்கள். தங்கள் உடைகளைத் தைத்துக்கொள்வார்கள். எவ்வளவோ வசதிகளைச் செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் அவற்றையெல்லாம் விரும்பாமல், சாதாரணமாகவே இருப்பார்கள். அவர்களுடைய எளிய வாழ்க்கை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. மதீனாவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பெருமானார் அவர்களிடம் சிறப்பு மிக்க மதிப்பு வைத்திருந்தார்கள்.

கருணை மிகுந்த உள்ளம்

நபி பெருமானார், பகைவர்களிடத்தில் எத்தகைய கருணை காட்டினார்கள் என்பதை பல நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம். முஸ்லிம்களுக்கும் பனூஹனீப் கோத்திரத்தாருக்கும் நிகழ்ந்த சிறிய சண்டையில் அக்கூட்டத் தலைவர் துமாமா என்பவர் முஸ்லிம்களிடம் சிறைப்பட்டார். பெருமானார் அவர்களின் முன்னிலையில் துமாமாவைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ‘‘உம்மை எவ்வாறு நடத்த வேண்டும்?’’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது அவர், ‘‘நீங்கள் என்னைக் கொன்று விடுவதால், முஸ்லிம்களைக் கொலை செய்த ஒருவனைக் கொன்றதாகும். ஆனால், என் மீது இரக்கம் காட்டினால் அதற்காக நன்றியறிதல் உள்ள ஒருவன் மீது கருணை காட்டியதாகும்’’ என்றார்.

பெருமானார் அவர்கள், உடனே அவரை விடுவிக்கும்படி உத்தரவிட்டார்கள். உடனே துமாமா அருகில் இருந்த ஊற்றில் குளித்துவிட்டுப் பெருமானார் அவர்களிடம் வந்து, ‘‘ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நேற்றுவரை நான் உங்களை வெறுத்ததைப்போல் இவ்வுலகில் வேறு எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்களுடைய முகத்தைப்போல் அவ்வளவு ஒளி மிகுந்ததாக வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. மற்றும் உங்களுடைய மார்க்கத்தை வெறுத்ததைப்போல் வேறு எதையும் வெறுக்கவில்லை. ஆனால் இன்றோ எனக்கு அதைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை’’ என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்.

அதன்பின்னர், துமாமா மதீனாவிலிருந்து நேராக மக்காவிற்குப் பயணமானார். குறைஷிகள் அவரைக் கண்டதும், ‘‘நீர் என்ன மதம் தவறியவர் ஆகிவிட்டீரே?’’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘நான் மதத்தில் தவறவில்லை; ஆண்டவனுடைய தூதரின் மார்க்கத்தைத் தழுவி இருக்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.
துமாமா வாழ்ந்து வந்த யமாமா மாகாணத்திலிருந்தே மக்காவுக்குக் கோதுமை போய்க்கொண்டிருந்தது. அவர் முஸ்லிமானதும் பெருமானார் அவர்களுடைய உத்தரவு இல்லாமல், இஸ்லாத்தின் விரோதிகளான மக்கா குறைஷிகளுக்குக் கோதுமை அனுப்ப இயலாது என்று கூறி, அதை நிறுத்திவிட்டார். அதனால், குறைஷிகள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்கள். தங்களுக்குக் கோதுமை அனுப்புமாறு துமாமாவுக்கு கட்டளையிட வேண்டும் என பெருமானார் அவர்களை மிகவும் வேண்டிக் கொண்டனர். கடுமையான பகைவர்களின் வேண்டுகோளை, கருணை மிக்க பெருமானால் அவர்கள் மறுக்காமல், துமாமாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வழக்கம்போல் அவர்களுக்குக் கோதுமை கிடைத்தது.

கவிஞர் மன்னிக்கப்பட்டார்

அரபு நாட்டில் முஸைனாக் கூட்டத்தில் கஃபுப்னு ஸுஹைர் என்ற கவிஞர் இருந்தார். சிறப்பாகக் கவி பாடுவதில் அவர் வல்லவர். அவர் புகழ் எங்கும் பரவியிருந்தது. கவிஞர் கஃபு, இஸ்லாத்தின் மீது விரோதம் கொண்டு பெருமானார் அவர்களையும் முஸ்லிம்களையும் கண்டித்துக் கவிபாடுவதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தார். அதனால் அக்கவிஞரை எங்கே கண்டாலும் சிரச்சேதம் செய்து விடுமாறு பெருமானார் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
கவிஞர் கஃபுவின் சகோதரர் முஸ்லிமாயிருந்தார். விக்கிரக வணக்கத்தைக் கைவிடுமாறும் இஸ்லாத்தில் சேரும்படியும் கவிஞரை அவர் வற்புறுத்தி வந்தார். சகோதரருடைய அறிவுரையால் கவிஞர் மனம் மாறி மறைமுகமாக மதீனாவுக்குச் சென்றார்.

அதிகாலைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் இருந்த நபி பெருமானாரைக் கண்டார். அவர்களருகே சென்றமர்ந்து கொண்டு அவர்கள் திருக்கரத்தின் மீது நம் கையை வைத்தவராக, ‘‘இறை தூதே! நான் கவிஞர் கஃபை ஒரு முஸ்லிமாக இப்பொழுது தங்கள் முன்னிலையில் அழைத்து வந்தால், தாங்கள் அவரை மன்னிப்பீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘ஆம்,’’ என்றார்கள் பெருமானார் அவர்கள். உடனே அவர், ‘‘ஸுஹைரின் குமாரனான கஃப் என்னும் கவிஞன் நான்தான்!’’ என்றார். அவர் அவ்வாறு கூறியதும், அன்ஸாரிகளில் ஒருவர் குதித்தெழுந்து, ‘‘இறைவனின் இப்பகைவன் கழுத்தை வெட்டுவதற்கு உத்தரவு தருமாறு’’ பெருமானார் அவர்களை வேண்டினார்.

பெருமானார் அவர்கள், மிக அமைதியாக, ‘‘கடந்த காலத்தை நினைத்து மனந்திருந்தியவராக அவர் வந்திருக்கிறார். எனவே அவரை விட்டு விடுங்கள்’’ என்று கூறிவிட்டார்கள். பின்னர், ஒரு பாடலைப் பாடுவதற்கு அனுமதி தருமாறு பெருமானார் அவர்களை வேண்டினார் கவிஞர் கஃப். பெருமானார் அவர்கள் அவரை அனுமதித்தார்கள்.

உடனே, ‘பானத் ஸுஆது’ என்ற சிறப்புமிக்க ஒரு பாடலைப் பாடினார் கவிஞர் கஃப். ஐம்பத்தியெட்டுப் பாக்களைக் கொண்ட இக்கவிதை அரபு இலக்கியத்தில் புகழ் மிக்கதாகும். பெருமானார் அவர்கள் தங்கள் மேனியிலிருந்த மேலாடையை எடுத்து, கவிஞருக்கு அணிவித்து அவரை கௌரவித்தார்கள்.

(எம்.கே.ஈ. மவ்லானா-முல்லை முத்தையா எழுதிய ‘நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகள்’ என்ற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பெற்றவை. முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40 தொலைபேசி: 044-26163596/24715968)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum