தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதவி உயர்வு தந்தருளும் பதஞ்சலீஸ்வரர்

Go down

பதவி உயர்வு தந்தருளும் பதஞ்சலீஸ்வரர் Empty பதவி உயர்வு தந்தருளும் பதஞ்சலீஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 2:11 pm

திருக்காணாட்டாம்புலியூர் திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலம்

பாற்கடலில் பாயாய் விரிந்திருந்த ஆதிசேஷனின் மீது சயனித்திருந்தார், பரந்தாமன். அலைகள் ஓசையில்லாமல் முன்னும் பின்னுமாய் அலைந்து கொண்டிருந்தது. அந்த அலையலால் நாராயணனின் யோக நித்திரைக்கு எந்த தொந்தரவும் நேர்ந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் தாய் மையும் நுரையாய் பொங்கி வழிந்தது. பரந்தாமனின் பாதங்களை மெல்ல அழுத்தி விட்டுக்கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அலைகடல் தாலாட்ட ஆனந் தமாய் சயனித்திருக்கும் நாராயணனை சுமந்து நிற்கும் ஆதிசேஷனின் மனதில் ஒரு ஆசை அரும்பியது. ‘பரந்தாமனின் தாமரை வதனம் போல பரமனின் நடனமும் அழகல்லவா? தம்மைச் சுமக்கும் வரம் தந்த மாதவன், பரமனின் நடனத்தைக் கண்ணா ரக் கண்டு திளைக்கும் வரத்தை தனக்கு தந்தருள்வாரா?’ என மனதிற்கும் கைகூப்பி விண்ணப்பித்தார், ஆதிசேஷன்.

இதழ் பிரிக்காது சிரித்த மாதவன், ஆதிசேஷனை கண் திறந்து பார்த்தார். ‘உன் ஆசை செரித்துத் திரும்பு’ என அனுமதித்தார். ஆதிசேஷன் பரமனை நோக்கி தவமிருந்தார். அக்கினியாய் உள்ளே பூத்த ஆவல், பரமனின் மனத்தை மலர்த்தியது. ‘‘சிதம்பரத்தில் உம் ஆசை நிறைவேறும்’’ என வரம் தந்து மறைந்தான், பரமன். சுவாதி நட்சத்திர நாளில் விழும் மழைத்துளியைத் தாங்கி, கடலுள்ளே தவமிருந்து முத்தாக்கும் சிப்பி போன்று நல்ல பாத்திரத்திற்காக காத்திருந்தார், ஆதிசேஷன். பிரம்மனின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக ஒளிர்பவருமான அத்திரி மகரிஷியையும் மும்மூர்த்திகளையே குழந்தையாக்கிக் கொஞ்சிய அனுசுயா தேவியையுமே தன் அவதாரத்திற்கான ஆதாரமாய் கொண்டார், ஆதிசேஷன்.

ஒரு புனித மானதிருநாளில் அவர்களுக்கு மகனாய் மலர்ந்தார். ஆதிசேஷ அவதாரமாய் வந்த குழந்தைக்கு பதஞ்சலி என பெயர் சூட்டினார், அத்திரி மகரிஷி.
பதஞ்சலி முனிவர் தில்லைக்கு விஜயம் செய்து, ஆடலரசனின் அழகிய நாட்டியத்தைக் கண்டு களித்தார். தில்லையம்பதியிலேயே இருந்து தாம் அறிந்த ஞான ரகசியங்களை தகுதியும் தேடலும் நிறைந்த சீடர்களுக்கு அருளி வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகையால் இவரது மூச்சுக் காற்று ப ட்ட மாத்திரத்திலேயே அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடும். ஆகையால் தாம் உபதேசிக்க விரும்பியதை அசரீரியாகவே தம் சீடர்களுக்கு உபதே சித்தார். ஒருநாள் தாம் இயற்றிய வியாகரண சூத்திரத்தை நேருக்கு நேராக சீடர்களுக்கு அருள விரும்பினார். மூச்சுக்காற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, சீடர்களுக்கும் தமக்கும் இடையே திரையமைக்கச்சொல்லி, திரைக்கு மறுபுறம் ஆதிசேஷ ரூபத்திலேயே தம் உபதேசத்தைத் தொடர்ந்தார்.

இதுவரை அசரீரியாக ஒலித்த உபதேசக் குரல், கண்ணுக்கு எட்டும் தூரத்தில், திரைக்குப் பின்னால் மணியாய் ஒலிக்கிறதே. இப்பேர்பட்ட குருநாதரின் திருமுகத்தைக் காண வேண்டுமே என துடித்த சில சீடர்கள், சிறு மணித்துளி திரை விலக்க, ஆதிசேஷனின் ஆயிரம் முகங்களில் இருந்து வெளிப்பட்ட மூச்சுக் காற்று பட்டு அத்தனை பேரும் எரிந்து சாம்பலானார்கள். பதஞ்சலி முனிவர் எது நடக்கக் கூடாது என்று தன்னை மறைத்துக் கொண்டு ஞான மழை பொழிந்தாரோ, அது நடந்தே விட்டது. குருவின் கட்டளையை ஏற்று அவர் பணி முடிக்க வெளியில் சென்றிருந்த கௌடபாதர் மட்டுமே எஞ்சி நின்றார். இதுதான் விதி போலும் என நினைத்த பதஞ்சலி மகரிஷி, தம் ஞானப் படைப்புகளான யோக சாஸ்திரம், மகாபாஷ்யம், ஆயுர்வேத ரகசியம் கொண்ட ஆத்திரேய சம்ஹிதை ஆகியவற்றை எல்லாம் கௌடபாதர் மூலமாக ஞாலத்திற்கு அளித்தார்.

பூமிக்கு வந்த நோக்கம் முடிந்தது என பரமன் முன்போய் நின்ற போது, திருக்காணாட்டாம்புலியூருக்கு அழைப்பு விடுத்தார், ஈசன். அத்தலம் விரைந்த பதஞ்சலி முனிவருக்கு அங்கு திருநடனம் காட்டினார். அதுகண்டு மனநிறைவடையாத பதஞ்சலிக்கு அதன் பிறகு பல இடங்களில் நடனக்காட்சி காட்டி யருளினார், பரமன். திருக்காணாட்டாம் புலியூரில் பதஞ்சலி முனிவருக்கு ஈசன் நடனக் காட்சி காட்டியருளியதால் இத்தலத்தில் சுயம்புவாய் தோன்றிய ஈசன்,
பதஞ்சலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் மூன்று தினங்கள் பதஞ்சலி முனிவர் திருமேனி தொட்டு, கருவறையில் இருக்கும் ஈசனை, சூரியன் தன் கிரணங்களால் அபிஷேகித்து வழிபடுவதால் இதை சூரியன் பூஜிக்கும் தலம் என்கிறார்கள். அரசு காரியங்கள் அனுகூலமாய் முடிக்கவும், பதவி உயர்வு பெறவும் இந்த ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அருள்கிறார், அரன். இத் தல பதஞ்சலி முனிவரைப் பணிய நாக தோஷம் நீங்குகிறது.

அன்னையின் திருநாமம் அம்புஜாட்சி. கோல்வலகை அம்மை, காணார்குழலி என்றெல்லாமும் அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு புடவை சாத்தி, வளையல் அணிவித்து வழிபட திருமண வரமும் குழந்தை வரமும் கைமேல் பலனாய் கிடைக்கின்றன. இத்தல பிராகாரத்தில் வள்ளி-தெய் வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, திருமால் ஆகியோரும் அருள்கிறார்கள். ‘விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணர்தம் கோனை’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இத்தல நாதனை பணிந்திருக்கிறார், சுந்தரர். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்துக்கு, சூர்யபுஷ்கரணி தல தீர்த்தம். எருக்கு, தலவிருட்சம். தனி சந்நதியில் சனி பகவான் அருள்வதால் சனி தோஷம் உள் ளவர்கள் இத்தலம் வந்து பணிந்து பலன் பெறுகிறார்கள்.

சோழர்கள், 16ம் நூற்றாண்டில் திருப்பணி செய்தும் நிவந்தங்கள் அளித்தும் தம் தலைமுறைக்கு புண்ணியம் சேர்த்துக் கொண்ட இத்திருத்தலத்தின் பிரமாண்டமான மதில் சுவர்கள் சிதிலம் அடைந்து மரங்கள் முளைத்து மோசமான நிலையில் இருக்கிறது. ராஜகோபுரங்கள், விமானங்கள், சந்நதி களை சீர் செய்ய சிவநேசர்கள் முன்வந்திருக்கிறார்கள். பாடல்பெற்ற பரமன் திருத்தலத்தை பொலிவாக்கும் திருப்பணியில் பங்கெடுக்க விரும்புவோர் 9840053289, 9790333377 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். புராணகாலத்தில் திருக்காணாட்டாம்முள்ளூர் என்று அழைக்கப்பட்டு இன்று திருக்காணாட்டாம்புலியூராக மறுவியுள்ள இத்தலத்தை, கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து, அழிஞ்சிமங்கலம் வழியாக 8 கி.மீ. பயணித்து அடையலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum