தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வில்வ மரத்தில் உறைந்த வித்தகன்

Go down

 வில்வ மரத்தில் உறைந்த வித்தகன் Empty வில்வ மரத்தில் உறைந்த வித்தகன்

Post  ishwarya Sat Feb 16, 2013 12:21 pm

ஒரக்காட்டுப்பேட்டை, பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. வனப் பகுதியாக இருந்ததால் பிரானேஸ்வனம் என்றும் அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் வணிகம் செய்ய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் போன்ற ஊர்களுக்கு வணிகம் செய்யச் சென்றவர்களுக்கான வணிக மையமாக இத்த லம் அமைந்திருந்தது. இந்தக் காட்டுப் பகுதியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த வில்வ மரத்தில் சிவபெருமான் குடியிருந்து அருளாசி வழங்கி வந்தார். இதே தலத்தில் மாகாளியும் குடிகொண்டிருந்தாள். இப்பகுதியின் வழியே சென்ற வணிகர் ஒருவர் சிவனடியார் என்பதால் இந்த வில்வ மரத்தினை வணங்கி வழிபட்டு தன் பயணத்தினை தொடர்வார்.

இப்பகுதி வழியே செல்லும் வணிகர்களை மிரட்டி, அவர்களின் செல்வங்களை சில கள்வர்கள் கொள்ளையடித்து வந்தனர். இது சிவனடியாரான வணிக ருக்கும் நேர்ந்தது. வணிகம் முடித்து ஏராளமான செல்வங்களுடன் வந்த அவரிடமிருந்து கொள்ளையர்கள் அவற்றைப் பறித்துக் கொண்டனர். பெரிதும் அதிர்ச்சியடைந்த வணிகர் அந்த வில்வ மரத்து இறைவனிடம் கண்ணீர்விட்டு அழுதார். ‘‘இறைவா! என்னிடம் இருந்த செல்வம் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். இனி நான் என் செய்வேன்? நீ வாழும் இடத்திலேயே இப்படி ஒரு அநீதி நிகழ்ந்து விட்டதே!. நான் என் செல்வம் இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அதுவரை உன் காலடியே கதி. நீயே எனக்கு வழிகாட்ட வேண்டும்” என முறையிட்டார். ஊன் உறக்கம் இன்றி அங்கேயே தங்கியிருந்தார்.

அடியாரின் குறை தீர்க்க இறைவன் தயங்குவாரா என்ன? உடனே வேடன் வடிவம் கொண்டு, கொள்ளையர்களைத் தாக்கினார். அடி தாங்க முடியாத கள்வர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மாகாளியிடம் அடைக்கலம் தேடி ஓடினர். மாகாளியும் கள்வர்களுக்காகப் பரிந்து வேடன் இருக்குமிடம் வந்தாள். அங்கே சிவபெருமான் ஆவேச நடனம் ஆடிக் கொண்டிருந்தார். உடனே மாகாளியும் திருவாலங்காடு காளியைப்போல அவரை எதிர்த்து போட்டி நடனமாடினாள். முடிவில் இறைவனே வென்றார். அதன்பின்பு தன் சுய உருவைக் காட்டினார் இறைவன். இறைவனைக் கண்ட மாகாளி அவரிடம் பணிந்து, தன் பக்தர்களான கொள்ளையர்களை மன்னித்து அருளுமாறு வேண்டி நின்றாள்.

அதேவேளையில் மாகாளியுடன் வந்த கள்வர்களுக்கு நல்ல குணம் வாய்க்கப் பெற்றது. மனந் திருந்திய அவர்கள் தாங்கள் கொள்ளையடித்த செல்வங்கள் அனைத்தையும் இறைவன் முன் சமர்ப்பித்தனர். இறைவனும் மன்னித்தான். அடியவரின் துயரம் தீர்ந்தது. வணிகர் இறைவனுக்கு நன்றி கூறி, செல்வத்துடன் தன் ஊர் திரும்பினார். கெட்டவர்களின் மனதையும் திருத்தி, நல்ல குணவான்களாக மாற்றியருளியதால், இறைவனின் பெயர் குணம்தந்த நாதர் என்று வழங்கப்பட்டது. அதுவே மருவி குணந்தந்தநாதீஸ்வரர் என தற்போது அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்டதென தெரிகிறது. அன்னை திரிபுரசுந்தரியுடன் சிவபெருமான் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த வில்வ மரத்தில் உறைந்திருந்தார்.

அதனால் இத்தலம் உறைக்காட்டுப் பேட்டை என அழைக்கப்பட்டது. இதுவே மருவி ஒரக்காட்டுப் பேட்டை என இப்போது வழங்கப்படுகிறது. பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், கணவனை மதிக்காத மனைவி, மனைவியை ஏமாற்றும் கணவன், இனக் கவர்ச்சியால் தடம் புரளும் காதலர்கள் என பலரும் மனம் மாறி இத்தல ஈசனால் நற்குணங்களை பெறுகின்றனர். பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து இறைவனை மனமுருகி வழிபட்டால், சிக்கல் தீர்ந்து விடும் என்பது ஆழமான நம்பிக்கை. இவ்வாலயத்திற்கு கிழக்கு, தெற்கு என இரு நுழைவாயில்கள் உள்ளன. இதில் தெற்கு நுழைவாயில் வழியாகத்தான் எளிதில் சென்று வர முடியும்.

இதனருகேயே கருங்கல்லினால் ஆன அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. தென்புற நுழைவாயிலில் நுழைந்ததும், இடதுபுறம் விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. அதை வலம் வந்தால் தென்மேற்கில் ஆறுமுகப் பெருமான் சந்நதி. அதனையும் கடந்தால் கிழக்கு வாயில், பலிபீடம், நந்திகேஸ்வரரை தரிசிக்கலாம். அடுத்து குணம் தரும் குணநாதீஸ்வரர் காட்சி தருகின்றார். அழகிய வடிவில் தேஜஸுடன் அவர் அருள் வழங்கும் காட்சி கண்கொள்ளாதது. சுவாமியின் கருவறை பஞ்ச கோஷ்டமாக அமைந்துள்ளது. கருவறையின் பின்புறம் நந்தியுடன் சிவலிங்கம், வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான், அடுத்து அருகே கஜலட்சுமி என சந்நதிகள் அமைந்து பேரருள் புரிகின்றன.

சுவாமி சந்நதியை வலம் வந்ததும், அன்னை திரிபுரசுந்தரியின் சந்நதி காணப்படுகிறது. அன்னை எளிய வடிவில் தெற்கு வாயிலை நோக்கியவாறு அருள் வழங்குகின்றாள். ஆலயத்தின் வடகிழக்கே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் சிறப்பாக ஆலய வளாகத்திற்குள் எண் திசையிலும் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது திருவண்ணாமலை தல ஐதீகத்தினை நினைவுபடுத்துகிறது. இறைவன் வில்வ மரத்தில் தோன்றினாலும், இத்திருக்கோயிலுக்கு கொன்றை மரமே தலமரமாக விளங்குகின்றது. ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள அழகிய படிகளுடன் காணப்படும் குளமே
தலத் தீர்த்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில், பாலாற்றின் தென்கரையை அடுத்து ஒரக்காட்டுப்பேட்டை அமைந்துள்ளது. செங்கல் பட்டிலிருந்து 7 கி.மீ., மதுராந்தகத்திலிருந்து 30 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 30 கி.மீ., சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பயணம் செய்வோர் பழத்தோட்டம் நிறுத்தத்தில் இறங்கினால் 2 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum