30 August 2012
Page 1 of 1
30 August 2012
நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள் ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப் படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப் படுகிறது. கண்டகி நதியைப் பற்றி , அங்கே உலவும் ஒரு செவி வழிக் கதை இது. வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க,அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு,சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச் சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பெயரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள். சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது. முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும். 2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது 3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும். எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பதாய் ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும். வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும். நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும் பச்சை - பலம், வலிமையைத் தரும் கருப்பு - புகழ், பெருமை சேரும் புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum