தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிப்பாணி ஜோதிடம் 1-12

Go down

புலிப்பாணி ஜோதிடம் 1-12  Empty புலிப்பாணி ஜோதிடம் 1-12

Post  meenu Wed Feb 06, 2013 11:46 am


புலிப்பாணி ஜோதிடம் 300


புலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

இந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும்.



ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு


அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு
சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு
சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு
நீதியெனு மூலகுரு முதலாயுள்ள
நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு
வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக
வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே

ஆதியென்றும் பராபரை என்றும் அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியாளின் திருவடிக்கமலங்கள் எனக்குக் காப்பாக அமையும். என்றென்றும் எவ்வெவர்க்கும் அன்பு வடிவாக இயங்கி ஆதரித்திடும் மனத்திற்குகந்த இன்பம் அருளும் மனோன்மணியான வடிவுடை நாயகியின் செந்தாள் மலர்க்கமலம் எனக்குக் காப்பாக அமையும். மற்றும் சோதிவடிவாக இலங்கி மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் நுகர்வாய் அமைந்த ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் ஐம்புல நுகர்வுகளுக்கு உரிமை கொண்ட தெய்வங்கள், எனக்குக் காப்பாக அமைவதுடன் ஓங்காரத்துட் பொருளைத் தன்னுருவிலேயே கொண்ட வேலமுகத்தானும் அவனது விருப்பினுக்குரிய அருட்பெருங் கடலான திருமுருகனும் எனக்கு [என்கவிக்கு] காப்பாக அமைவதுடன் நீதியினையே என்றும் பொருளாய்க் கொண்டு இலங்குகின்ற பிரகஸ்பதி முதலாக உள்ள சித்தர்களில் என் குருவாகிய போகரது திருவடிகளும் எனக்குக் காப்பாக அமைவதுடன் என்றென்றும் தங்கள் அருள் நோக்கால் ஆதி முதல் என்னை ஆதரிக்கும் சான்றோர் தமது திருவடிக்கமலங்களைச் சிரசில் சூடி நீதியான முறையில் சோதிடத்தின் வண்மையினை நான் உரைப்பேன். கேட்டுப் பயனடையுங்கள்.

(இனி வாழ்த்தாவது தான் எடுத்துக் கொண்ட முயற்சி இனிது முடிதற் பொருட்டு ஏற்புடைக் கடவுளையோ வழிபடு கடவுளையோ வாழ்த்துவதாம்) இது அகலவுரை.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 2 - சக்தி வழிபாடு





சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.


சக்தி என்றும் கருனை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். [அவர் என்றென்றும் என் துணையிருப்பார்.]

இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார். [எ-று]

ஜோதிடம் பயில்பவரும், சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும். அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி விளக்குகிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்



தானென்ற சூரியனுக்காட்சி சிங்கத்
தன்மையுள்ள மேஷமது உச்சமாகும்
தானென்ற துலாமதுவும் நீசமாகும்
தனியான தனுவுட னே மீனம் நட்பாம்
மானென்ற மற்றேழு ராசிதானும்
வரும் பகையா மென்றுனக்கு சாற்றினோம்யாம்
கோனென்ற போகருட கடாட்சத்தாலே
குணமான புலிப்பானி குறித்திட்டேனே.

நவக்கிரகநாயகனான தன்னேரில்லாத சூரியதேவனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகவும், மேஷம் உச்சவீடாகவும், துலாம் நீச்ச வீடாகவும் அமைவதுடன் தனித்தன்மை பெற்ற தனுசுடன் மீனம் நட்பு வீடாகும். தன்னிகரில்லாத குரு நாதரான போகரது கருணையினாலே இவை நீங்கிய மற்ற ஏழு வீடுகளும் பகையாம் என்று கூறினேன். [எ-று]

இப்பாடலில் சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/sun_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


ஆட்சி உச்சம் பகை நீச்சம் சந்திரன்

பாரப்பா சந்திரனுக் காட்சிநண்டு
பாங்கான விடைய துவே உச்சமாகும்
வீரப்பா வீருச்சிகமும் நீசமாகும்
விருது பெற்றதனுமீனம் கன்னி`நட்பு
ஆரப்பா அறிவார்கள் மற்றாறு ராசி
அருளில்லாப் பகையதுவே யாகும்பாரு
கூறப்பா கிரகம் நின்ற நிலையைப் பார்த்து
குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேனே.

நவநாயகர்களில் சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகம், அருமையான ரிஷபராசி உச்ச வீடாகும். போர்க்குணம் கொண்ட விருச்சிகம் நீச்ச வீடாகும். மற்றபடி தனுசு, மீனம், கன்னி நட்பாகும். ஏனைய ஆறு ராசிகளும் [மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம்] பகையதுவேயாகும் கிரகங்கள் நின்ற நிலையை நன்கு கவனித்துப் பார்த்துப் பலன் குறிப்பறிந்து கூறவேண்டும். [எ-று]

இப்பாடலில் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.

http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/moon_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும்
கெணிதமுட னாட்சியது வாகும்பாரு
நாளப்பா மகரமது உச்சமாகும்
நலமில்லா நீசமது கடகமாகும்
தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம்
தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம்
பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று
பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே


செவ்வாய் கிரகத்திற்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடாகும். சனி வீடான மகரம் உச்ச வீடாகும். கடகராசி நீச்ச வீடாக அமைந்து துர்ப்பலன் தரும். தனுசு, மீனம், ரிஷபம் ஆகியவற்றினோடு கன்னியும், மிதுனமும் நட்பு வீடுகளாகும். துலாமும் சிம்மமும் பகைவீடாம் என்று பண்பாகப் போகர் எனக்குச் சொன்னதை உரைத்திட்டேன். [எ-று]

இப்பாடலில் செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/mars_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


தானென்ற புதனுக்கு மிதுனமாட்சி

தன்மையுள்ள கன்னியது மாட்சி உச்சம்
மானென்ற மீனமது நீசமாகும்
மனிதரிலாம் கடகமது பகையாமென்று
வானென்ற மற்றேழு ராசிதானும்
வகையான நட்பென்று வாழ்த்தினோம்யாம்
நானென்ற போகருட கடாக்ஷத்தாலே
நவக்கிரக நிலையறிவாய் நன்மைதானே


தன்னிகரற்ற புதபகவானுக்கு ஆட்சி வீடு மிதுனம் என்றும், தன்மையுள்ள கன்னியது ஆட்சி வீடும், உச்ச வீடென்றும் மீனராசி நீச்ச வீடென்றும் மற்றும், கடகம், சிம்மம் பகை வீடென்றும் ஏனைய மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் எமது குருநாதரான போகரது அருளினாலே நட்பாம் என்ற வாழ்த்தினோம் எனினும் நவக்கிரக நிலையறிந்து பலன் கூறல் நன்மை பயக்கும். [எ-று]

இப்பாடலில் புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/mercury_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு
உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும்
காமென்ற கற்கடகம் உச்சமாகும்
கனமில்லா மகரமது நீச்ச வீடாம்
போமென்ற விருச்சிகமும் பகையதாகும்
புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம்
நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே
நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே.


ஓம் என்ற பிரணவப் பொருளை விளக்கும் வியாழனுக்கு தனுசும்,மீனமும் ஆட்சி வீடென்றும் கர்க்கடகம் உச்ச வீடென்றும் உச்ச வீட்டிற்கு ஏழாவதான இராசி மகரமானது நீச்சமென்றும் விருச்சிக ராசி பகையென்றும் மற்றைய இராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் நட்பு வீடுகளாமென போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/jupiter_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


கேளப்பா சுக்கிரனுக் கெருதுகோலும்
கெணிதமுட னாட்சியது உச்சம்மீனம்
வாளப்பா கோதையவள் நீச்சமாவாள்
வகையில்லா சிங்கமுடன் விருச்சிகந்தாள்
ஆளப்பா பகையதுவே யாகும் ஆறும்
அளவில்லா நட்பென்றே யறைந்தவாறு
மாளப்பா பகையதுவே யாகும் ஆறும்
மார்க்கமுடன் புலிப்பாணி யறிவித்தேனே.


சுக்கிர பகவானுக்கு ரிஷபமும், துலாமும் எண்ணிக் கூறி விடில் ஆட்சி வீடென்றும் மீனம் உச்ச வீடென்றும், கன்னி ராசி நீச்ச வீடென்றும் சிம்மமும் விருச்சிகமும் பகை வீடென்றும் ஏனைய இராசிகளான மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் நட்பு வீடென்றும் இதுவே நன்மார்க்கம்[வழி] என்றும் புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/venus_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்


தேனென்ற சனி தனக்கு மகரம்கும்பம்
தெகிட்டாத ஆட்சியது உச்சம்கோலாம்
மானென்ற மேஷமது நீசம்மற்ற
மற்கடக சிம்மமொடு விருச்சிகந்தான்
ஊனென்ற வீண்பகையாம் மற்றோரைந்தும்
உள்ளபடி நட்பாகு முடவனுக்கே
கோனென்ற குருவருளாம் கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி கூறினேனே.


தேனைப் போன்ற இனிமையான பலன்களை வாரி வழங்கும் சனி பகவானுக்கு மகரமும் கும்பமும் ஆட்சி வீடாகும். துலாம்ராசி உச்ச வீடாகும். அவ்விராசிக்கு ஏழாவதான மேஷராசி நீச்ச வீடாகும். மற்றும் கர்க்கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய இராசிகள் பகை வீடென்றும் ஏனைய மீனம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ஐந்தும் நட்பு வீடுகளாம் என்றும் குருவாகிய போகரது கருணையாலே புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/saturn_house.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்



பாரப்பா ராகுடனே கேதுவுக்கும்
பாங்கான வீடதுவே கும்பமாட்சி
வீரப்பா விருச்சிகமும் கடகம் உச்சம்
வீறுடைய ரிஷபமது நீச்சம்சிம்மம்
காரப்பா பகையாகும் மற்றேழ்நட்பாம்
காண்பதுவும் மூன்றுபதி னொன்றாம் சொல்வார்
ஆரப்பா போகருட கடாட்சத்தாலே
அப்பனே புலிப்பாணி அறிவித்தனே.


நன்றாக ஆராய்ந்து பார்ப்போமானால் இராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் நன்மையளிக்கும் ஆட்சி வீடு கும்பம் என்றும் முறையே இராகுவிற்கு உச்ச வீடு விருச்சிகம் என்றும் கேதுவுக்கு கர்க்கடகம் உச்ச வீடென்றும் ரிஷபம் நீச்ச வீடென்றும் சிம்மம் பகையென்றும் ஏனைய மற்றைய மேஷம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஏழு இராசிகளும் நட்பென்றே போகருடைய கருணையால் புலிப்பாணி அறிவித்தேன். [எ-று]

இப்பாடலில் ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/rahu_house.jpg
ராகு

http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/ketu_house.jpg
கேது
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 11 - முதற் பாவம்


சீர்மலிமுதற்பாகத்தின் பலன் றான்
சித்தி தங்கிலேச மெய்சொரூபம்
பேர் மலிவயதும் பகர்தனுத்தானம்
பெருநிதிகீர்த்தி மூர்த்திகளும்
ஏர்மலிசு பந்தோஷநிறமும்
மிலக்கணமுபாங்கமே முதலாம்
தார்மலிபோகர் தாளிணைவணங்கிச்
சாற்றினே புலிப்பாணிதானே


பெருமைக்குரிய மாலையணிந்த என் குருநாதர் போகமுனிவரின் தாளிணை பணிந்து முதற் பாவகத்தின் மூலம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிய பெயர்களைக் கூறுவேன் கேட்பீராக, ஒரு ஜாதகனின் வடிவத்தையும் அறிவு நலனையும், வயதையும், தன சம்பந்தமான விஷயங்களையும், கிடைக்கும் பெருநிதியையும். புகழையும்,அடையும் பேறுகளையும், ஏற்படக்கூடிய இன்பங்களையும், நிறத்தையும் குண விசேடங்களையும் நன்கு கூறலாம். [எ-று]

இப்பாடலில் முதற் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 12 - இரண்டாம் பாவம்


தானமிகு ரெண்டிடத்தின் பெயரைக்கேளு
தனம்குடும்ப மொளிசெறிநேத் திரமும் வித்தை
ஈனமிலாச் செல்வமுடன் சாஸ்திரவாக்கு
இரும்பொன்னும் முபதேச மியம்புகேள்வி
மானமிகு சவுபாக்கியங் கமனம் புத்தி
மற்றுமுள்ள நவரெத்தின வகையின் பேதம்
ஊனமிலா யிவை பார்த்து முணர்ந்துமென்று
உரைத்திட்டேன் புலிப்பாணி உறுதியாமே.


சிறப்பு மிகுந்த இரண்டாம் பாவகத்தால் அடையும் பலன்களின் பெயர்களாவன: இத்தானம் தனஸ்தானம் என்றும் குடும்பஸ்தானம் என்றும் ஒளிமிகுந்த நேத்திர ஸ்தானம் என்றும் கல்வி மற்றும் வித்தை ஸ்தானம் என்றும் கல்வி மற்றும் வித்தை ஸ்தானம் என்றும் மற்றும் செல்வம், சாத்திர அறிவு, வாக்கு, சிறப்புமிகு பொன் சேர்க்கை, உபதேசம், கேள்வி, மற்றும் சுக ஸ்தானம் என்றும் , மனம் , புத்தி மற்றும் நவமணிகளின் குற்றங்களையும் குறைகளையும் அறிந்துரைக்கும் குற்றமில்லாத தானமென்றும் உறுதியாகப் புலிப்பாணி உரைத்தேன் [எ-று]

இப்பாடலில் இரண்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum