திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
Page 1 of 1
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து ஆறாம் நாள் முருகன் சூரனை வென்ற திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. "முருகனின்'' செயல்கள் திரும்பச் செய்து காட்டப்படுதலே இத் திருவிழாக்களின் நோக்கமாகும்'' அந்த ஐதீகப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
அந்த விழா எப்படி நடைபெறுகிறது என்ற முழு விவரம் வருமாறு:- ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து ஆறு நாட்களும் திருச்செந்தூர் கோவில் உள்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை கோவில்களுக்கிடையேயுள்ள வேள்விக் கூடத்தில் (யாக சாலையில்) காலையிலும் மாலையிலும் வேள்வி நடைபெறும். சிவாச்சாரியாருள் காப்புக் கட்டியவர் பிரதான ஆசாரியார் எனப்படுவார்.
மந்திரங்கள் தடைபடாமல் உதவுபவர் சாதகாச் சாரியார் ஆவார். மற்றும் சுற்றிலுமுள்ள கும்பங்கட்குத் தூப தீப நிவேதனம் காட்டவும் சில சிவாச்சாரியார்கள் துணைச் செய்கின்றனர். ஓம குண்டம் (தீயெழுப்பும் குழி) அறுகோண வடிவில் அமைந்துள்ளது. அதனருகே பிரதான ஆச்சாரியார் சாதகாச்சாரியார் அமருமிடங்கள் அமைந்துள்ளன.
மேடையில் பெரிய கும்பங்களின் முன் மரப்பெட்டியொன்றில் செம்பு, வெள்ளி, தங்கத் தகடுகள் வைக்கப்பட்டுள்ள பெட்டி உள்ளது. இதிலுள்ள தகடுகளை சஷ்டியன்று இரவில் திருக்கோவிலார் அன்பர்களுக்கு விலைக்கு கொடுக்கின்றனர். தகட்டினை வடமொழியில் `யந்திரம்' என்பர். `முருகன்' எனும் நூலில் எட்டுவகை யந்திரங்களின் படங்கள் உள்ளன.
அவற்றில் ஏழாம் வகையைச் சேர்ந்தது இக்கோவிலில் வழங்கப்படும் யந்திரம் `சரவண பவ' எனும் ஆறெழுத்து மந்திரத்திலுள்ள எழுத்துக்களை அறுகோண முக்கோணத்தில் இடம் மாற்றியமைப்பதால் யந்திரங்களின் பெயர்கள் வேறுபடுகின்றன. சதுரடி வடிவமான தகட்டில் ஆறுகோண முக்கோணம் வரையப்பட்டு நடுவில் `ஓம்' என்னும் பிரணவம் எழுதப்படுதல் வழக்கம்.
இக்கோவிலில் வழங்கப்படும் தகட்டில் `ஓம்' என்பது அறுகோண முக்கோணத்தைச் சுற்றி எழுதப்படு கிறது. அறுகோணத்தைச் சுற்றிலும் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும். தனிப்பட்டவர்களும் தாங்கள் கொண்டு வரும் தகடுகளைப் பூசையில் வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இதற்கு என கோவில் நிர்வாகத்தினர் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பெரிய கும்பங்களுக்குப் பின்புறமுள்ள மேடையில் செந்தில் நாயகர், வள்ளி, தெய்வானையம்மை திருமேனிகள் வைக்கப்படுகின்றன. பிள்ளையாரை வழிபட்டுப்பின் காலையில் சூரிய குடம்பத்திற்கு (மாலையாயின் சந்திர கும்பம்) பூசை செய்கின்றனர். வருண கும்பத்தில் புனித ஆறுகளின் நீரினைப் பாவனையாக வரச் செய்து அக்கும்பத்தினுள் மாவிலையிட்டு வேள்விக் கூடத்தைத் தூய்மை செய்கின்றனர்.
இதனைத் "தலசுத்தி'' என்பர். அடுத்துப் பஞ்ச கவ்வியம் (ஆனைந்து எனப்படும் காராம் பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் ஆகியவை) கலந்த குடும்பத்திற்குப் பூஜை செய்து அக்கும்பத்திலுள்ள பொருட்களைச் சுற்றிலும் தெளிக்கின்றனர். இதைச் "சூக்கும சுத்தி'' என்பர். கண்ணுக்கு தெரியாத அழுக்கினை இது போக்கும் என்கின்றனர்.
பின்பு பிரதான ஆச்சாரியாரும், சாதகாச்சாரியாரும் மந்திரங்களைக் கூறி நியாசம் செய்கின்றனர். தம்முள் முருகப் பெருமானை எழுந்தருளச் செய்த பின் கும்பங்களில் தருப்பைப் புல் முடிச்சினால் பிரதான ஆச்சாரியார் தொட்டு, முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரை மந்திரங்களால் எழுந்தருளச் செய்கிறார். இதனை "ஆவாகனம்'' என்பர். வேள்வித் தீயினை எழுப்பப் பல வகை மரங்களின் சுள்ளிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவை மருத்துவப் பயன்படைத்தவை. சிருக்கினால் (அகப்பை) நெய்யை ஊற்றி வேள்வித் தீயைப் பெருக்குகின்றனர். சாதகாச்சாரியார், பொருட்களை எடுத்துச் சிருக்கில் வைக்கப் பிரதான ஆசாரியார் வேள்வித் தீயிலிடுகிறார். நவ தானியங்கள் படைக்கப்படுகின்றன.
நவ தானியங்களில் கோதுமை சூரியனுக்கும், வெண் கடுகு சந்திரனுக்கும், துவரை செவ்வாய்க்கும், பாசிப் பயிறு புதனுக்கும், கடலை வியாழனுக்கும், வெள்ளை மொச்சை சுக்கிரனுக்கும், எள் சனிக்கும் உளுந்து ராகுவுக்கும், காணம் கேதுவுக்கும் உரிய தென்பர். கந்த சஷ்டியாக சாலையில் கீழ்வரும் மருத்துவப் பொருட்கள் படைக்கப்படுகின்றன :
பச்சை, மஞ்சள், முட்டா மஞ்சள், விறலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், வெற்றி வேர், விலாமிச்சை வேர், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், குங்கிலியம், சத்துமா, யவை (நெல்) மஞ்கிலரிசி, காட்டுக் கோதுமை, நெல் வகை, கோஷ்டம், பூலாங்கிழங்கு, தாமரைக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, புல்லரிசி, தாளிசப் பத்திரி, இஞ்சி, பச்சிலை, சடாமஞ்சில், அவல், நெல் பொரி, பொரிகடலை, சர்க்கரை, பேரீச்சம்பழம், கற்கண்டு, முந்திரிப்பழம், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலம், கிராம்பு, சாதிக்காய், சாதிப் பத்திரி, பப்படப் புல், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, கஸ்தூரி, கோரோசனை.
அடுத்து, மா, பலா, வாழை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், நெல்லி, மாதுளை, விளா, எலுமிச்சை, நாவல், கொய்யா, அன்னாசி முதலிய பழங்கள் இடப்படுகின்றன. திருமுழக்குக்குரிய பொருட்கள் இடப்பட்ட பின் மலர்களிடப்படுகின்றன. வெண்சோறு, சர்க்கரைப் பொங்கல், சிறுபயற்றம் பொங்கல், புளியோதரை, தேங்காய்ச் சோறு, தயிர்ச்சோறு ஆகிய நிவேதனங்களைப் படைத்த பின் வடை, அப்பம், அதிரசம், எள்ளுருண்டை, தேங்குழல் ஆகியன படைக்கப்படுகின்றன.
அப்போது பஞ்ச வாத்தியம் முழங்கப்படும். பூராணகுதி (வேள்வி நிறைவு) செய்யும்போது நாதசுரம் முழங்குகிறது. ஒரு வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டுள்ள தேங்காய், வெற்றிலை, பாக்கு, வெற்றிவேர், விலாமிச்சை வேர், புணுகு, சவ்வாது, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, பொரி, தங்கத்தகடு, ஏலம், கிராம்பு, கத்தூரி, கோரோசனை ஆகியவற்றைப் பட்டினால் சுற்றி வேள்வித் தீயிலிட்டு வேள்வியை நிறைவு செய்வர்.
தம்ப வழிபாடு முடிந்த பின் வேள்விக் கூடத்திலுள்ள பிம்பங் கட்குத் திருமுழுக்கு நடைபெறும். உச்சிக் காலம் முடிந்த பின் வேள்விக் கூடத்திலுள்ள திருமேனிக்கட்குப் பதினாறு தீபாராதனைகள் நிகழ்கின்றன. அருச்சனை, கட்டியம், பஞ்சாங்கம் படித்தல், நால் வேதம், ஓதுதல், பஞ்ச புராணம், திருப்புகழ் பாடுதல் நடைபெறுகின்றன.
தீபாராதனை முடிந்த பின்னர் செந்தில் நாயகர், வள்ளி, தெய்வானை திருமேனிகளைச் சிறிய தங்கச் சப்பரத்தில் வைத்து அலங்கரித்து நண்பகல் 12 மணிக்கு முதல் கற்றாலையில் தெய்வ யானையம்மை கோவில் முன்பிருந்து எழுந்தருளச் செய்கின்றனர். அடியார்கள் வீரவாள் வகுப்பும் வேல் வகுப்பும் பாடி முன்னே செல்லச் சப்பரம் சண்முக விலாச மேடையை வந்தடையும்.
அங்கு தீபாராதனை நடத்தப்படும். இரவில் இத்திருமேனிகளைத் திரவாவடுதுறை ஆதீனச் சட்டி மண்டபத்தில் வைத்துத் திருமுழுக் காட்டித் தங்கத் தேரில் கிரி வீதி வலம் வரச் செய்கின்றனர். இவ்வாறு ஐந்து நாட்கள் நடைபெறும். ஆறாவது நாள் மக்கள் வெள்ளத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
அன்று மாலை நான்கு மணியளவில் கடற்கரையில் சூரனை வெல்லும் திருவிழாத் தொடங்குகிறது. முதலில் யானைமுகாசுரனுடன் போர் தொடங்குகிறது. யானை முகன் வலமிடமாகச் சுவாமியைச் சுற்றி வருகிறான். தலையில் பட்டுக் கட்டிய பட்டர் வேலால் அச்சூரன் நெற்றியில் குத்தி வீழ்த்துகிறார். அதே உடலில் சிங்க முகாசுரன் தலை பொருத்தப்படுகிறது.
முற்றுகைப் போராட்டம் முன் போல் நடைபெறுகிறது. பட்டர் சிங்க முகம் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துகிறார். அடுத்து, சூரபன்மன் தலை அதே உடலில் பொருத்தப்படுகிறது. முன்போலவே முற்றுகையிட்டு சூரன் வீழ்த்தப்படுவான். நான்காதாக மாமரமும் சேவலும் அவ்வுடலில் பொருத்தப்படுகின்றன. மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறக்கிறது.
ஒரே உடலில் தலைகளைப் பொருத்துவது ஒரே உடலில் மாயை, கன்மம், ஆணவம், பொருந்தியுள்ளதைக் காட்டுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. சூரனை வென்ற பின் கடற்கரையிலுள்ள சந்தோஷ மண்டபம் என்னும் மேடையில் செந்தில் நாயகரை அமர்த்தி வழிபடுகின்றனர். அப்போது கடல் அலைகளோடு போட்டியிடுவது போல் மனிதர் தலைகள் பேரளவில் காணப்படும்.
இரவில் 108 மகாதேவர் முன்பு செயந்தி நாதரை அமர்த்தி வேள்விக் கூடத்தில் இதுநாள் வரை கும்பங்களில் வைத்திருந்த நீரை (பெரிய கும்பங்களை) எடுத்து வருவர் அப்போது சுவாமிக்கு முன் கண்ணாடி பிடிக்கப்படும். கண்ணாடியில் தெரியும் நிழலுக்கு அபிடேகம் செய்வதாகப் பாவித்து கண்ணாடி முன் நீரினை ஊற்றுவர்.
இதனைச் "சாயாபிடேகம்'' என்பர். இதன் பின் பூஜையில் வைத்திருந்த தகடுகளை வலக்கை மணிக்கட்டில் (ரக்சாபந்தனம்) கட்டி விடுகின்றனர். தகட்டு விற்பனை தொடங்குகிறது. சூரபத்மனை வென்ற இடமாதலின் திருச்செந்தூருக்கு சென்று நோன்பு (உண்ணாவிரதம்) நோற்பதையே மக்கள் சிறப்பாகக் கருதுகின்றனர்.
கந்த சஷ்டி விரதம் நோற்பவர் இக்கோவிலின் எல்லையைத் தாண்டி ஆறு நாட்களும் செல்லுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்வார்கள். கோவிலுக்கு வடக்கெல்லையாக வள்ளியம்மன் குகையும், தெற்கெல்லையாக நாழிக் கிணறும், மேற்கு எல்லையாகத் தூண்டுகை விநாயகர் கோவிலும், கிழக்கே கடலும் கொள்ளப்படுகின்றன. இவ்விடம் கடற்காற்று நிறைந்த இடமாதலால் நோய் நீக்கம் பெற வாய்ப்பு கிடைக்கிறது.
இதனால் சஷ்டி விரதம் நோற்பவர் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெருகி வருகிறது. ஐப்பசி மாதம் அமாவாசையன்று மாலையிலேயே சஷ்டி விரத நோன்பைத் தொடங்குகின்றனர். ஆறு நாட்களும் உமிழ் நீர் கூட விழுங்காது இருப்பவரும் உண்டு.
"இவ்வாறு செய்ய இயலாதவர்கள் நண்பகலில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதமாதலின் பழச்சாறு பருகுதல் அறவே கூடாது'' என்கிறார் தண்டபாணி தேசிகர். ஆனால் நடைமுறையில் நோன்பிருப்பவரைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. உமிழ் நீரும் விழுங்காது உண்ணா நோன்பிருப்பவர்.
2. உண்ணா நோன்புடன் வாய் பேசா நோன்புமிருப்பவர்.
3. பழச்சாறு மட்டும் பருகுபவர்.
4. பிற்பகலில் 1 மணிக்கு மட்டும் பச்சரிச் சோறு உண்பவர்.
5. திருமால் கோவிலில் வழங்கும் துளசியும் தண்ணீரும் மட்டும் அருந்துபவர்.
இவ்வகையினரில் நான்காம் வகையினர் எண்ணிக்கையே அதிகமாகும். சஷ்டிக்கு அடுத்த நாள் சிவனடியாரோடு உணவருந்துதல் சிறப்பு என்கிறது கந்த புராணம். நோய் நீக்கம் கருதிப் பலரும், பிள்ளைப் பேறு கருதிச் சிலரும் ஆன்மாவின் தூய்மை மட்டும் கருதி சிலரும் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.
திருமணமாகிப் பல ஆண்டுகள் கழிந்ததும் பிள்ளைப் பேறில்லாத பலர் இந்நோன்பிலிருந்து ஆண் மகவு பெற்ற செய்தியை ஆய்வாளர் நேரில் அறிந்துள்ளார். சூரனை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வ யானையை திருமணம் செய்து கொடுத்தான். இக்கருத்து ஏறு தழுவிய வீரனுக்கு மகள் கொடையளித்தல் போலுள்ளது.
சஷ்டிக்கு மறுநாள் தெய்வ யானையம்மை (காலை 6 மணிக்கு) ஊருக்கு மேற்கே தெப்பக்குளம் அருகிலுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை வரை அங்குத் தங்கியிருக்கிறார். இதனை அம்மன் தவமிருக்கிறார் என்கின்றனர். மாலையில் பூமாலை மாற்றுவதற்காக குமரவிடங்கன் எழுந்தருளுவார், தெற்குத் தேர் வீதியின் மேற்குக் கோடியில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
சிவாச்சாரியார் மூலம் தோல் மாலையை அம்மனுக்கு கொடுத்தனுப்புவார் குமரவிடங்கர். மேலக்கோபுர வாயில் முன்புள்ள திருமண மண்டபத்தில் தெய்வானை திருமணம் இரவில் நடைபெறும். திருமண நிகழ்ச்சிகள் ஐந்து நாட்கள் தொடரும் எட்டாம் திருநாளன்று ஊர்வலம் 9, 10, 11-ம் நாட்களில் ஊஞ்சல் காட்சி, 12-ஆம் நாள் மாலை மஞ்சள் நீராட்டு (வெந்நீரில் மஞ்சள் பொடியைக் கலந்து) நடைபெறும்.
தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றில் நடைபெற்ற தாயினும் இங்கு நடைபெறக் காரணம் என்னப சஷ்டி விழாவினைச் சூரன் போரோடு முடிக்க விரும்பாதவர் திருமண நிகழ்ச்சியோடு முடிக்கக் கருதியிருக்கலாம். "தெய்வானை இவ்வூர்ச் செகந்நாதரைப் (மூலவருக்கு இடப்புறமுள்ள லிங்கம்) பூஜை செய்து முருகனை அடைந்தார்'' தெய்வயானைக்காக எழுந்தருளிய செகந்நாதரை மூலவர் பூஜை செய்கிறார் எனக்குறிப்பிடுகிறது திருச்செந்தூர் தலபுராணம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விரதம்
» கந்த சஷ்டி கவசம் விளக்கம்
» கந்த சஷ்டி விழா
» கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
» கந்த சஷ்டி விரதம்
» கந்த சஷ்டி கவசம் விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum