தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்தபுராணம் யுத்தகாண்டம் கதைச் சுருக்கம்

Go down

கந்தபுராணம் யுத்தகாண்டம் கதைச் சுருக்கம் Empty கந்தபுராணம் யுத்தகாண்டம் கதைச் சுருக்கம்

Post  amma Sat Jan 12, 2013 6:09 pm


கந்தபுராணம் யுத்தகாண்டம் கதைச் சுருக்கம்

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத் மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி "நான்'' என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி "எனது'' என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன்.

தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.

சூரபத்மனின் வரலாறு:

பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப் பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை'' என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமை களைப் பெற எண்ணி சுக்கிலாச் சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான். சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டு வரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினி முராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்டவச்சிரவாகு ஆகிய நாங்கு புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000மூவாயிரம் பேரும்) பிறந்தனர்.

இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான். அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.

ஆறுமுகன் அவதாரம்:...

தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்'' (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.)

அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின.

அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி'' எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்'' எனப்பெறுகின்றது.

வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:...

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதி தேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்முகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

அந்த நவமணிகள் மீது இறைவன்னின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்தி களாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் ஆனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

அன்னை வழங்கிய சக்திவேல்:...

அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினர். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி செல்கையில்; விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான்

அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிகின்றான். வீரவாகுதேவர் முதலானோர் மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன் ஒரு சிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிட மிருந்து பெற்றவன். தாரகனின் நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று மலையுருவானது.

அந்தமலையாக தனது மாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம் பெறுதல்:.....

மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளப்புகின்றது.

முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினர். அங்கு பராசர முனிவரின் புதல்வர்களும் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்று வீழ்ந்து வணங்கு கின்றனர்.

வீரவாகுதேவர் தூது செல்லல்:....

முருகப் பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.

முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமாப அது நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.

சூரனின் ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிகின்றார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திர வாகு, ஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.

திருச்செந்தூரில் ஆறுமுகக் கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரவாகுதேவர் திருச்செந்தூர் திரும்ன்பிவந்து முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான். முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.

கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்ல வேண்டும்.''நம் தேரைக் கொண்டுவா'' என்று கட்டளையிட்டார்.

தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், " நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்'' என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள். நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றி யெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள்.

அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந் தார்கள். பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள்.

அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது. வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை.

இலங்கை வழியாகப் எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள். தேவதச்சனை அழைத்து "உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து'' என்று எம்பெருமான் ஆணை யிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்ட பங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.

எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர் களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம். (கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார்.

எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.) சூரனின் இராசதானியாக விளங்கிய வீர மகேந்திரபுரி இவ் ஆலயம் இருக்கும் இடத்திற்கு தேற்கு திசையில் இருந்தமையால் அதனை நோக்கியே வாயில் உள்ளதாக ஐதீகம்.

சூரபத்மன் இலங்கைக்கு தெற்காக அப்போது இருந்ததாக கூறப்படும் குமரிக் கண்டம் அல்லது லமுரிப்யாக் கண்டதில் (இப்போது இக் கண்ண்டம் கடலினில் மூழ்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்) இராசதானி அமைத்து ஆண்டுவந்ததாக கூறுவாருமுளர். ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.

பானுகோபன் வதைப் படலம்:.....

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான். பானூகோபன் மாயயால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன்.

சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன் தானே போருக்குச் சென்று முருகனை யும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான்.

தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பிவைக்கின்றான். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.

சிங்கமுகன் வதை:..........

பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன் போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம் என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக் கடனுக்காக போர்புரியச் செல்கின்றான்.

இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.

சூரன் சங்காரம்:...

சூரன்அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான்.

அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

முருகன் சூரனின் ஆண வத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான். சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான்.

அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும்தேரை அழைத்து முருகனின்படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு செறது. முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார்.

இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. கடைசியாக சூரன் தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான்.

முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான்.

இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது.

ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

கந்த புராணக் கதையைச் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்'' என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள். முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.

வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும்.

இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர். சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்.

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும். இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;

பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம். முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன! மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று;

தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளிவலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்றுசெம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.

பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன். கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது. சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்.

முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum