தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமுருக கிருபானந்த வாரியார்

Go down

திருமுருக கிருபானந்த வாரியார் Empty திருமுருக கிருபானந்த வாரியார்

Post  ishwarya Mon Feb 04, 2013 1:11 pm

திருமுருக கிருபானந்த வாரியார்

பெற்றோரும் பிறப்பும் –

“அருள்மொழி அரசு’ என்றும் “திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.

தமிழோடு தவழ்தல் –

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் தேவாரம், நளவெண்பா, ஒüவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அதுதான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இசைப் பயணம் -

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது “இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.

சொற்பொழிவு திறன் -

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு “”இதுகாறும் இதனை அறிந்திலமே” என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள். “”வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன” என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.

சிறப்பியல்பு -

மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

தமிழ்த் திருப்பணி -

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

இயற்றிய நூல்கள் -

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

எல்லாம் இலக்கியம் -

கவிதை, கட்டுரை, கதை, காவியம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர். மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும் உபந்யாசங்களும்கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

ஆன்மீகத்தில் ஞானம் -

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

மறைவு -

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

சொற்பொழிவைக் கேட்க -

கேட்கக் கேட்கத் திகட்டாத சொற்பொழிவு நமது வாரீயாருடையது.

திருப்புகழ் அருளிய அருணகரிநாதர் பற்றி திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவைக் கேட்க இங்கு சொடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» துன்ப அனுபவம் நன்மைக்காகவே!-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» மனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum