தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலக்காட்டு மாரியம்மன் கோவில்

Go down

பாலக்காட்டு மாரியம்மன் கோவில்  Empty பாலக்காட்டு மாரியம்மன் கோவில்

Post  ishwarya Wed May 22, 2013 6:00 pm

அமைதி தவழும் அழகு கிராமம் பூனாம் பாளையம். இங்கு அமர்ந்து அருள் பாலிக்கிறாள் அன்னை அருள்மிகு பாலக்காட்டு மாரியம்மன். அழகிய ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலில் சுதை வேலைபாடுகளுடன் கூடிய வண்ண முகப்பு. உள்ளே நுழைந்தால் பெரிய மண்டபம்.

சூலமும் பலிபீடமும் இடையில் இருக்க, கருவறையின் நுழைவாயிலின் இரு புறமும் துவார சக்தியின் திருமேனிகள். உள்ளே- கருவறையில் அன்னை பாலக்காட்டு மாரியம்மன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் சாந்தம் தவழும் முகத்தைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அத்தனை பரவசம். அன்னைக்கு நான்கு கைகள். இடது கைகளில் கத்தியும், உடுக்கையும் உள்ளன.

வலது கைகளில் மழுவும், அட்சய பாத்திரமும் உள்ளன. அன்னையின் கருவறையின் வலது புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. தனிக் கோவிலில் அமர்ந்து விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிர நாயகர்கள் தனிமண்டபத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். அன்னைக்கு எதிரே ஆலய முகப்பின் வலது புறம் கருப்பண்ண சாமியின் சன்னதி உள்ளது.

சன்னதிக்கு இடது புறம் கண்ணபிரானின் பஜனை மடம் உள்ளது. எனவே இந்த ஊரை மும்மூர்த்தி தலம் என்றும் அழைக்கின்றனர். இந்த ஊரின் பழைய பெயர் புது அய்யனார் பாளையம் என்பது. இது மெல்ல மருவி பூனாம் பாளையமாக மாறி விட்டது. ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு. தீர்த்தம் ஆலயத்தின் பின்புறம் உள்ள தெப்பக்குளம்.

இதன் பெயர் சின்னக் குளம். இங்கு காலை ஒரு வேளை மட்டுமே பூஜை நடைபெறுகிறது. இங்கு பூஜைக்கு வெண் பொங்கல் படையல் செய்வது சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆலயத்தின் தல வரலாறு என்ன?

ஒரு நாள் கோவில் காரியக்காரர், முக்கியஸ்தர்கள் மூன்று பேர்களுடைய கனவில் அம்மன் தோன்றி, 'நான் பாலக்காட்டு மாரியம்மன் வந்துள்ளேன். உங்கள் ஊர் குளத்திற்கு அருகில் அமர்ந்துள்ளேன். என்ன பரிபாலனம் செய்க' எனக் கூறவே மூவரும் கோவில் பூசாரியிடம் சென்றுள்ளனர். அவரும் அன்னையின் சிலையை வைத்து பூஜைகள் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

பின் அதே குளத்தின் கரையில் கூரையில் ஒரு கொட்டகை வேய்ந்து, அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் படிப்படியாக கட்டிடம் கட்டப்பட்டு கோபுரம் கட்டப்பட்டு முறையாக பூஜைகள் செய்து வருகின்றனர். இந்த அம்மன் சுமார் 155 ஆண்டுகளுக்கு முன் கேரளாவிலிருந்து கோயம்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் இந்த ஊரை வந்து அடைந்துள்ளது.

கேரளாவில் உள்ள பாலக்காட்டிலிருந்து வந்த அம்மன் இது என்பதால் அதே பெயரே அம்மனுக்கும் நிலைத்து விட்டது. சுமார் 15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கு கடந்த 15.09.05-ல் குடமுழுக்குத் திருவிழா நடத்தியுள்ளனர். இந்த பாலக்காட்டு மாரியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதமும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் இரவு கரகம் பாலித்து 11 நாட்கள் கொலுவில் வைப்பார்கள்.

மூன்றாம் நாள் கரகம் ஊர்வலம் வந்து அம்மனுக்கு ஊர் மக்கள் பூஜை செய்வார்கள். பிறகு 10 வது நாள் மண்டு கருப்பு பூஜை நடைபெறும். 11 வது நாள் வெகு விமரிசையாக திருவிழா நடத்தி, மேளதாள வாண வேடிக்கையுடன் அம்மன் கரகம் ஊரை சுற்றி வலம் வந்து ஓடை என்ற கிணற்றில் விடப்படும்.

மாரியம்மன் தெப்பக் குளத்தில் வீட்டுக்கு விலக்கான பெண்கள் குளித்த போது ஊர் பெரிய மனிதர்கள் 'இது தீர்த்தம் எனவே, நீங்கள் இதில் குளிக்கக் கூடாது' எனத் தடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்குப் பிறகு அந்தத் தீர்த்தம் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டதாம். உடனே, ஊர் பெரியவர்கள் கூடி அம்மனிடம் வேண்டி கேட்டபோது, 'என் போன்ற பெண்கள் வீட்டுக்கு விலக்கான நாட்களில் குளிப்பதை தடுத்தால் அவர்கள் எங்கு சென்று குளிப்பார்கள்?.

எனவே, அவர்கள் குளிப்பதை தடுக்கக் கூடாது' என அம்மன் அருள் வாக்கு கூறியதாம். பிறகு வழக்கம் போல் எல்லாப் பெண்களும் அந்தக் குளத்தில் குளிக்க ரத்த நிறமாகிய தீர்த்தம் படிப்படியாக நிறம் மாறி தூய நீராக மாறிவிட்டதாம். சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாள் அன்று கோவில் பூசாரி கோவிலுக்கு பூஜை செய்ய வரும்போது கிராமத்தார் வாங்கிக்கொடுத்த எண்ணெயை எடுத்துவர மறந்துவிட்டார்.

கோவிலில் பூஜை செய்ய ஆரம்பிக்கும் போதுதான் எண்ணெய் எடுத்து வராததை உணர்ந்தார். மீண்டும் வீட்டிற்கு சென்று எடுத்துவர காலதாமதம் ஆகும் என்பதால் கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை எண்ணெய் கலயத்தில் எடுத்து அதில் சூடம் ஏற்றி தன் தவறை மன்னித்தருளுமாறு அம்மனிடம் வேண்டி அந்த தண்ணீரை அகல் விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றியுள்ளார்.

அந்த தீபம் பிரகாசமாக ஒளிவிட்டுள்ளது. மேலும் சாமிக்கு முன்னால் ஏந்திச்செல்லும் எண்ணெய் பந்தத்திலும் அந்த தண் ணீரை எண்ணெய் போல் ஊற்றியவுடன் பந்தம் பிரகாசமாக ஒளிவிட்டதாகவும் பெரியோர்கள் கூறுகிறார்கள். இந்தக் குளத்தில் எந்தக் காலத்திலும் தண்ணீர் வற்றியதே கிடையாது என பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர். இந்த திருக்குளத்தைச் சுற்றி மேயும் பன்றிகள் தப்பித் தவறி கூட இந்த குளத்தில் இறங்குவது கிடையாது.

இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள் சுற்றுப்புற ஊர்களிலும் நகரங்களிலும் வெகு பிரசித்தம். பூச்சி மாரியம்மன் என்கிற தட்டியங்கா மாரியம்மன் திரு விழா ஒவ்வொரு தமிழ் வருடமும் தை மாதம் 2-ம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும். அன்று இரவு இந்தக் கோவிலில் ஊர் பொதுமக்கள் கூடி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

அடுத்து வரும் சனிக்கிழமை இரவு அம்மனுக்கு கன்னிப்பெண்கள் பொங்கல் வைத்து பூஜைசெய்வார்கள். இதற்கு நிலாப்பொங்கல் என்று பெயர். பின்னர் ஊர் பட்டையதாரர்கள் முன்னிலையில் பூ பிடித்து போட்டு இரண்டு கன்னிப்பெண்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் தான் அம்மனை விழா முடியும்வரை சுமந்து வருவார்கள்.

மறு நாள் இரவு அம்மனை தாத்தா, பாட்டியாக புது பச்சை களிமண்ணில் உருவம் அமைத்து அலங்காரம் செய்து இரண்டு கன்னிப்பெண்களும் சுமந்து வருவார்கள். அம்ம னுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக அங்கப்பிரதட்சனம் செய்து வருவார்கள். பெண்கள் கும்மியடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அம்மனை கொண்டு வந்து கோவிலில் கொலு வைப்பார்கள்.

மறுநாள் திங்கட்கிழமை அம்மனுக்கு பூஜைகள் அலங்கா ரங்கள் செய்து அம்மனை ரதத்தில் ஏற்றி ஊர்வலம் புறப்படும். ரதத்தில் உள்ள அம்மனுக்கு முன்னால் வழிநெடுக மாவிளக்கு ஆராதனை அபிஷேகம் நடைபெறும். அம்மனுக்கு முன்னால் பக்தர்கள் கும்மியடித்து விளையாடி வருவார்கள். ரதம் திருவீதி வலம் வந்து பாலக்காட்டு மாரியம்மன் கோவில் முன்பாக நிறுத்தி கிராமத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

பின்னர் அந்திசாயும் வேளையில், சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் கோவில் தெப்பக் குளத்தில் அம்மன் குடிவிடப்படும். புதிய தட்டில் தீபம் ஏற்றி அப்படியே குளத்தில் மிதக்க விடுவார்கள். இந்த ஜோதியை பொதுமக்கள் அனைவரும் வணங்கி தரிசித்து அம்மன் அருளை பெற்று செல்வார்கள். இது இவ்வூரில் உள்ள கோவில் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

திருச்சியிலிருந்து இந்த தலம் சென்றுவர நிறைய பேருந்து வசதி உள்ளது. தன்னை வணங்கி வேண்டும் பக்தர்களின் காவல் தெய்வமாய் இந்த அருள்மிகு பாலக்காட்டு மாரியம்மன் விளங்குகிறாள் என்பது நிஜமே! திருச்சி-துறையூர் சாலையில் உள்ள மண்ணச்ச நல்லூரிலி ருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பூனாம் பாளையம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum