தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேல்முருகனின் வேறு கோலங்கள்

Go down

வேல்முருகனின் வேறு கோலங்கள் Empty வேல்முருகனின் வேறு கோலங்கள்

Post  birundha Thu Apr 25, 2013 6:01 pm


தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் என்றாலே `வேல் ஏந்தி, மயிலேறி நிற்கும் காட்சி' தான் நம் கண் முன்னே கம்பீரமாகத் தோன்றும். வலக்கரத்தில் வேலும், இடக்கரத்தில் சேவற்கொடியும் கொண்ட தோற்றங்கள் தவிர வேறு கோலங்களில் கந்தன் தன் பக்தர்களுக்கு அருளுவதும் உண்டு.

கோல் ஏந்திய முருகன், தண்டாயுதம் எனும் கோல் பிடித்து, தனியாக நின்றருளும் `பழநி ஆண்டவர்' என்னும் ஞான தண்டாயுத பாணி சுவாமி எங்கும் பிரசித்தி பெற்றவர். வேல் ஏந்திய முருகன் இராமனைப் போல் வில் தாங்கி, சில திருக்கோவில்களில் தோற்றம் தருகிறார்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், மூல ஸ்தானத்தில் முருகன் வில்லேந்தியபடி வள்ளி தெய்வானை உடனிருக்க அருள்கிறார். பூம்புகார் அருகில் உள்ள சாயா வனம் எனும் தேவாரப் பாடல் பெற்ற பதியில், மூன்றடி உயரத்தில் கோதண்டம் (வில்) ஏந்திய கையனாக முருகன் சிலை உள்ளது.

திருவிடைக்கழி என்னும் சேந்தனாரின் திருவிசைப்பா பாடல் பெற்ற பதியில், முருகன் இடை வளைந்து, வில்லும் வேலும் ஏந்திய இரண்யாசுர (சூரபத்மன் மகன்) சம்ஹார மூர்த்தியாகக் காட்சி தருகிறார். நெய்வேலி நகரில் உள்ள வில்லுடையான் பட்டு (முன்பு அத்திப்பட்டு என்று அழைக்கப்பட்டது) எனும் திருக்கோவிலில் வில்லேந்திய முருகன் வள்ளி தெய்வானையுடன் நிற்கிறார்.

குடந்தை அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் தூண் சிற்பமாக, வேல் ஏந்திய முருகன் மயில் மீது கால் வைத்து நிற்கிறார். திருச்செந்தூரில் திருவிழா நாட்களில் உற்சவர் குமரவிடங்கப் பெருமான், வில்லும் அம்பும், வேலும் வஜ்ராயுதமும் நான்கு கரங்களில் ஏந்திய வண்ணம் வீதி உலா வருகிறார்.

சங்கு சக்கர முருகன் தனது மாமன் திருமாலைப் போலவே, வலக்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் தாங்கியவராக ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்துள்ள காட்சி வேறெங்கும் காணமுடியாத அபூர்வக் காட்சியாகும்.

இவ்வாறு வித்தியாசமான கோலத்தில் வள்ளி தெய்வானை உடனிருக்க அருள் சுரக்கும் ஆறுமுகன் எங்கிருக்கிறார்? குடந்தை சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் நாச்சியார்கோவில் செல்லும் வழியில் உள்ள ஊர் அரிசிற்கரைப் புத்தூர் எனும் அழகாபுத்தூர்.

இவ்வூரில் மூவரின் தேவாரப் பாடல் பெற்ற படிக்காசுநாதர் சிவாலயத்தின் வடமேற்குப் பகுதியில் தனிச் சன்னதியில் விளங்குகிறார். சங்கு சக்கர முருகனுக்கு கல்யாண சுப்பிரமணிய சுவாமி என்று பெயர், திருமணம் ஆகாதவர்களும் பல்லாண்டாய் புத்திரப்பேறு இல்லாதவர்களும், அமாவாசை அன்று வழிபட்டால் கைமேல் பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது. எந்தக் கோலத்தில் இருந்தாலும் கந்தன் கருணைத் தெய்வம் அல்லவா? டாக்டர் தமிழரசன், தஞ்சாவூர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum