தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிராமங்களுக்குள் பிரவேசம்

Go down

கிராமங்களுக்குள் பிரவேசம் Empty கிராமங்களுக்குள் பிரவேசம்

Post  birundha Sat Mar 23, 2013 4:19 pm

சாத்தியமான வரையில் ஓர் ஆண், ஒரு பெண் இவர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் வைத்தோம். இந்தத் தொண்டர்களே வைத்திய உதவி செய்து, சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கிராமப் பெண்களிடையே பெண்கள் மூலம் சேவை செய்ய வேண்டும். மிகவும் சாதாரணமானதே வைத்திய உதவி. விளக்கெண்ணெய், கொயினா,கந்தகக் களிம்பு ஆகியவையே தொண்டர்களிடம் கொடுத்த மருந்துகள். ஒரு நோயாளிக்கு அழலை படித்திருந்தாலோ, மலச்சிக்கல் இருப்பதாக அவர் கூறினாலோ, அவருக்கு விளக்கெண்ணெய் கொடுக்க வேண்டும். ஜு ரம் இருந்தால் முதலில் விளக்கெண்ணெய் கொடுத்துவிட்டுப் பிறகு கொயினா கொடுக்க வேண்டும். கட்டிச் சிரங்கோ, சொறி சிரங்கோ இருந்தால், பாதிக்கப் பட்டிருந்த இடத்தில் நன்றாக அலம்பிவிட்டுக் கந்தகக் களிம்பைத் தடவ வேண்டும். மருந்தை வீட்டுக்கு கொண்டு போக நோயாளி யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நோய் சிக்கலானதாக இருந்தால், டாக்டர் தேவ், வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒவ்வொரு முக்கியமான கிராமத்திற்கும் போய் வருவார். இந்த எளிய வைத்திய உதவியை ஏராளமான மக்கள் பெற்று வந்தனர். கிராம மக்களுக்கு இருந்த நோய்கள் மிகச் சிலவே. நிபுணர்களின் உதவியின்றிச் சாதாரணமான சிகிச்சையினாலேயே குணமாகிவிடக் கூடியவை அவை. இதை நினைவில் வைத்துக் கொண்டால் எங்களுடைய வேலைத் திட்டம் விசித்திரமாகத் தோன்றுவதற்கில்லை.

மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இதனால் அற்புதமான வகையில் நன்மை ஏற்பட்டது. சுகாதாரத்தைப் போதிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது. எதையும் தாங்களே செய்து கொள்ள மக்கள் தயாராயில்லை. வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்கூட, தங்கள் குப்பைகளைத் தாங்களே கூட்டி எடுத்துச் சுத்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், டாக்டர் தேவ் எளிதில் உற்சாகம் இழந்துவிடக்கூடியவர் அன்று. மற்றக் கிராமங்களுக்கெல்லாம் உதராணமாகும் வகையில் ஒரு கிராமத்தை அதிகச் சுத்தமாக வைத்திருப்பதில் அவரும் தொண்டர்களும் தங்கள் முழுச் சக்தியையும் உபயோகித்தனர். சாலைகளையும் வீட்டு வாசல்களையும் பெருக்கி சுத்தம் செய்தனர். கிணறுகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்குப் பக்கத்திலிருந்த குண்டு குழிகளையெல்லாம் மண் போட்டுச் சமப்படுத்தினார்கள். இவ்வேலைகளைச் செய்யத் தங்களுக்குள்ளே தொண்டர்களைத் திரட்டிக் கொள்ளுமாறு அன்போடு கிராமவாசிகளைத் தூண்டினர். சில கிராமங்களில் ஜனங்கள் வெட்கமடைந்து, தாங்களும் இவ்வேலையில் ஈடுபட்டு விடும்படி செய்தனர். மற்றக் கிராமங்களிலோ, மக்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள்.

என் மோட்டார் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுவதற்கான சாலைகளைக்கூடப் போட்டுவிட்டார்கள்! இவ்விதமான இனிய அனுபவங்களுடன் மக்களின் அசிரத்தையினால் உண்டான கசப்பான அனுபவங்களும் இல்லாது போகவில்லை. இத்தகைய வேலைகளைச் செய்வது தங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதென்று கிராமவாசிகளில் சிலர் கூறிவிட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஓர் அனுபவத்தைக் குறித்து இங்கே குறிப்பிடுவது மிகையாகாது. இதைப்பற்றி இதற்கு முன் நான் பல கூட்டங்களிலும் சொல்லி இருக்கிறேன். பீதிகர்வா என்பது ஒரு சிறிய கிராமம்; அங்கே எங்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்திலுள்ள இன்னும் சிறிய ஒரு கிராமத்திற்கு நான் போயிருந்தபோது, சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டேன். அப் பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி என் மனைவியிடம் சொன்னேன். அவள் அவர்களோடு பேசினாள். அதில் ஒரு பெண் என் மனைவியைத் தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள்: வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள்.

எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை ஒன்றுதான்; இதை எப்படித் துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும். இந்தக் குடிசையிலிருந்த இந்த நிலைமை அபூர்வமானது அன்று. இந்தியக் கிராமங்கள் பலவற்றில் இதே போன்ற நிலைமையைக் காணலாம். இந்தியாவில் எண்ணற்ற குடிசைகளில் மக்கள், எந்த விதமான தட்டுமுட்டுச் சாமான்களோ, மாற்றிக் கட்டிக் கொள்ளுவதற்கு வேறு துணியோ இல்லாமல் தங்கள் மானத்தை மறைப்பதற்கு வெறும் கந்தையுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.வேறோர் அனுபவத்தையும் இங்கே குறிப்பிடுகிறேன். சம்பாரணில் மூங்கிலுக்கும் நாணலுக்கும் குறைவே இல்லை. பீதிகர்வாவில் பள்ளிக்கூடத்திற்கு மூங்கிலையும் நாணலையுமே கொண்டே குடிசை போட்டிருந்தார்கள். யாரோ ஒருவர்-பக்கத்துத் தோட்ட முதலாளியின் ஆளாக இருக்கக்கூடும்-ஒரு நாள் இரவு குடிசைக்குத் தீ வைத்து விட்டார். எரிந்து போன குடிசைக்குப்பதிலாக மூங்கிலையும் நாணலையுமே கொண்டு மற்றோர் குடிசை கட்டுவது உசிதமன்று என்று கருதப்பட்டது. ஸ்ரீசோமனும், கஸ்தூரிபாயுமே அப்பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செங்கல் கட்டிடமே கட்டி விடுவதென்று ஸ்ரீ சோமன் முடிவு செய்தார். உழைப்பில் அவர் காட்டிய உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டதால், பலர் அவருடன் ஒத்துழைத்தார்கள். சீக்கிரத்திலேயே ஒரு செங்கல் வீடு தயாராகி விட்டது. இக்கட்டிடம் கொளுத்தப்பட்டுவிடும் என்ற பயமே பிறகு இல்லை. இவ்விதம் தொண்டர்கள், தங்கள் பள்ளிக்கூடங்கள், சுகாதார வேலை, வைத்திய உதவி ஆகியவைகளினால் கிராம மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றனர். அவர்களிடையே இத்தொண்டர்களுக்கு நல்ல செல்வாக்கும் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆக்க வேலையை நிரந்தரமான அடிப்படையில் அமைத்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்பதை வருத்தத்துடன் நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். தொண்டர்கள் எல்லோரும் அங்கே கொஞ்ச காலத்திற்கே ஊழியம் செய்ய வந்தார்கள். ஊதியமின்றி நிரந்தரமாக அங்கிருந்து வேலை செய்யப் பீகாரிலிருந்து தொண்டர்கள் கிடைக்கவில்லை. சம்பாரணில் என் வேலை முடிந்ததுமே, இதற்கு மத்தியில் எனக்காக உருவாகி வந்த வெளி வேலை, என்னை இழுத்துக்கொண்டு போய் விட்டது. என்றாலும், சம்பாரணில் சில மாதங்கள் செய்த வேலை ஆழ வேர்கொண்டு விட்டதால், அதன் பயனை இன்று கூட ஏதாவது ஒருவகையில் அங்கே காணலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum