தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரணத்தின் வாயிலருகில்

Go down

மரணத்தின் வாயிலருகில் Empty மரணத்தின் வாயிலருகில்

Post  birundha Sat Mar 23, 2013 4:13 pm

படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடம்பையே அநேகமாக நாசப்படுத்திக் கொண்டுவிட்டேன். அந்த நாட்களில் நிலக்கடலை வெண்ணெயும் எலுமிச்சம் பழமுமே என் முக்கியமான உணவு. அந்த வெண்ணெயையே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், அதனால் உடம்புக்குத் தீமை உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அதை நான் அளவுக்கு மிஞ்சியே சாப்பிட்டுவிட்டேன். இதனால் எனக்கு இலேசாகச் சீதபேதி ஏற்பட்டது. அதை நான் அதிகமாகப் பொருட்படுத்தாமலேயே அன்று மாலை ஆசிரமத்திற்குச் சென்றேன். அடிக்கடி ஆசிரமத்திற்கு நான் போய்வருவது வழக்கம். அந்த நாட்களில் நான் மருந்து எதுவும் சாப்பிடுவதில்லை. ஒரு வேளை பட்டினி போட்டுவிட்டால் உடம்பு குணமாகிவிடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை சாப்பிடாமல் இருந்ததால் உண்மையில் உடம்பு குணமாகியிருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால், முழுவதும் குணமடைந்துவிடவேண்டுமானால் நீடித்து உபவாசம் இருந்து வர வேண்டும். ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தாலும் பழ ரசத்தைத் தவிர வேறு எதுவுமே சாப்பிடக்கூடாது என்பதை அறிவேன். அன்று ஏதோ பண்டிகை நாள்.

மத்தியானம் நான் எதுவும் சாப்பிடப் போவதில்லை என்று கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன். ஆனால், சாப்பிடும் ஆசையை அவள் தூண்டி விட்டாள். அதற்குப் பலியாகிவிட்டேன். பாலையோ, பாலினால் ஆனவைகளையோ சாப்பிடுவதில்லை என்று நான் விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப் பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காகக் கோதுமைத் தித்திப்புப் பலகாரம் செய்திருந்தாள். ஒரு கிண்ணம் நிறைய பயிற்றங் கஞ்சியையும் வைத்திருந்தாள். இவைகளை உண்பதில் எனக்கு அதிகப் பிரியம் உண்டு. அவைகளைச் சாப்பிட்டேன். கஸ்தூரிபாயைத் திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும் அளவு சாப்பிட்டால் கஷ்டப்பட வேண்டி வராது என்றும் நம்பினேன். ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டேன். இதுவே எமனுக்குப் போதுமான அழைப்பாகி விட்டது. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது. அன்று மாலையே நான் நதியாத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. சபர்மதி ஸ்டேஷனுக்குப் பத்து பர்லாங்கு தூரம்தான். என்றாலும், அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே அங்கே நடந்து சென்றேன் ஸ்ரீ வல்லபாய், அகமதாபாத்தில் வந்து என்னோடு சேர்ந்துகொண்டார். நான் உடல் குணமின்றி இருப்பதைக் கண்டார். என்றாலும், வலி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை நான் அவருக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை.

இரவு பத்து மணிக்கு நதியாத் போய்ச் சேர்ந்தோம். எங்கள் தலைமை ஸ்தானமாக நாங்கள் கொண்டிருந்த ஹிந்து அனாதசிரமம் ரெயிலடியிலிருந்து அரை மைல் தூரம்தான். ஆனால், அது எனக்குப் பத்துமைல் தூரம்போல இருந்தது. எப்படியோ சமாளித்துக்கொண்டு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன். ஆனால், வயிற்றிலிருந்த கடுப்பு வலி அதிகரித்துக் கொண்டே போயிற்று. வழக்கமாகப் போகும் கக்கூசு, தூரத்தில் இருந்ததால், பக்கத்து அறையிலேயே ஒரு மலச்சட்டி கொண்டுவந்து வைக்கும்படி கூறினேன். இதைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தபோதிலும் வேறு வழியில்லை. ஸ்ரீ பூல்சந்திரர், ஒரு மலச்சட்டியைத் தேடிக் கொண்டுவந்து வைத்தார். நண்பர்கள் எல்லோரும் அதிகக் கவலையுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னிடம் முழு அன்பையும் காட்டி என்னைக் கவனித்துக் கொண்டனர். ஆனால், எனக்கிருந்த வேதனையை அவர்களால் போக்கிவிட முடியாது. என்னுடைய பிடிவாதம் வேறு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபடி செய்து விட்டது. வைத்திய உதவி எதையும் பெற நான் மறுத்து விட்டேன். நான் மருந்தும் சாப்பிடுவதில்லை.

நான் செய்து விட்ட தவறுக்குத் தண்டனையை அனுபவிக்கவே விரும்பினேன். ஆகையால், அவர்கள் எதுவுமே செய்ய இயலாதவர்களாகப் பிரமித்து நின்றனர். இருபத்துநான்கு மணி நேரத்தில் முப்பது, நாற்பது தடவை பேதியாகி விட்டது. ஆரம்பத்தில் பழரசமும் சாப்பிடாமல் பட்டினி இருந்தேன். பசியே இல்லாது போயிற்று என் உடல் இரும்புபோலப் பலமானது என்று நீண்டகாலமாக நான் எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதோ இவ்வுடல் வெறும் களிமண் பிண்டம்போல் ஆகிவிட்டதைக் கண்டேன். நோயை எதிர்க்கும் சக்தியையெல்லாம் அது இழந்துவிட்டது. டாக்டர் கனுகா வந்து மருந்து சாப்பிடுமாறு வேண்டினார். மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதாகச் சொன்னார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதைப் பற்றி அக்காலத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது பரிகாசத்திற்குரிய ஒன்றே. ஊசியினால் குத்தி ஏற்றும் மருந்து ஏதோ பிராணியின் நிணநீராகவே இருக்க வேண்டும் என்று நம்பினேன். ஊசியினால் குத்தி எனக்கு ஏற்றுவதாக டாக்டர் சொன்ன மருந்து, ஏதோ மூலிகையின் சத்து என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இதைக் காலங்கடந்தே நான் அறிந்துகொண்டதால் அதனால் பலனில்லாது போயிற்று. தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தது. நான் முற்றும் களைத்துப்போனேன். களைப்பின் காரணமாக ஜு ரமும் பிதற்றலும் ஏற்பட்டன. நண்பர்கள் மேலும் பீதியடைந்து விட்டனர். வேறு பல வைத்தியர்களையும் அழைத்து வந்தார்கள். ஆனால், வைத்தியர்களுடைய யோசனைகளையெல்லாம் கேட்க மாட்டேன் என்று இருக்கும் நோயாளிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

சேத் அம்பாலால் தமது உத்தம பத்தினியுடன் நதியாத்திற்கு வந்து என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார். அகமதாபாத்தில் இருக்கும் தமது மீர்ஜாப்பூர் பங்களாவுக்கு என்னை மிகவும் ஜாக்கிரதையாகக் கொண்டுபோனார். இந்த நோயின்போது நான் பெற்ற அன்பு நிறைந்த தன்னலமற்ற தொண்டைப் போன்று வேறு யாரும் பெற்றிருக்க முடியாது. ஆனால், ஒரு வகையான உள் ஜு ரம் மாத்திரம் இருந்து கொண்டே வந்தது. இதனால், நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. நோய் நீண்டகாலம் நீடித்து இருந்து வரும், அநேகமாக மரணத்திலேயே முடிந்துவிடக்கூடும் என்று எண்ணினேன். அம்பாலால் சேத்தின் வீட்டில் என்மீது சொரியப்பட்ட அன்பிற்கும் கவனத்திற்கும் எல்லையே இல்லை. என்றாலும், என் மனம் அமைதியே இல்லாதிருந்தது. என்னை ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் விடும்படிஅவரை வற்புறுத்தினேன். என் வற்புறுத்தலுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று. ஆசிரமத்தில் இவ்விதம் நான் வலியால் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கையில், ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும், படைக்கு ஆள் திரட்டுவது இனி அவசியமில்லை என்று கமிஷனர் சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றும் ஸ்ரீ வல்லபபாய் செய்தி கொண்டுவந்தார். படைக்கு ஆள் திரட்டுவதைக் குறித்து நான் மேற்கொண்டும் கவலைப்பட வேண்டியதில்லை என்பது எனக்கு அதிக ஆறுதலை அளித்தது. அப்பொழுது நான் நீர்சிகிச்சை செய்து கொண்டு வந்தேன்.

அதில் எனக்குக் கொஞ்சம் சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு தேறும்படி செய்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. வைத்தியர்கள் பலர் எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி வந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் அனுசரிக்க எனக்கு விருப்பமில்லை. பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் கெடாமல் மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு, மூன்று வைத்தியர்கள் யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத்திலிருந்தும் மேற்கோள்களைக் காட்டினர். அவர்களில் ஒருவர், முட்டைகளைச் சாப்பிடும்படி பலமாகச் சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள் எல்லோருக்கும், முடியாது என்ற ஒரே பதிலையே நான் கூறி வந்தேன். ஆகாரத்தைப்பற்றிய விஷயம், எனக்குச் சாத்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்யவேண்டியது அன்று. என் வாழ்க்கையின் போக்கு, வெளி ஆதாரங்களை மேற் கொண்டும் நம்பியிராத கொள்கைகளின் வழியை அனுசரித்தது. அதனுடன் பின்னியிருப்பது எனது உணவு விஷயம். அக்கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற வகையில் நான் வற்புறுத்தி வந்திருக்கும் ஒரு கொள்கையை என் விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்?

என் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்ந்த நோய் இதுதான். இந்நோய், என் கொள்கைகளைப் பரிசீலனை செய்து சோதிக்கும் வாய்ப்பை இவ்வாறு எனக்கு அளித்தது. ஒரு நாள் இரவு நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டேன். மரணத்தின் வாயிலில் நிற்கிறேன் என்றே எனக்குத் தோன்றியது. அனுசூயா பென்னுக்குச் சொல்லி அனுப்பினேன். அவர் ஆசிரமத்திற்குப் பறந்தோடி வந்தார். வல்லபாய், டாக்டர்.கனுகாவுடன் வந்து சேர்ந்தார். டாக்டர், என் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, உங்கள் நாடியெல்லாம் நன்றாகவே இருக்கிறது. அபாயம் எதுவும் இல்லவே இல்லை. பலவீனம் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஆயாசம் இது என்றார் ஆனால், எனக்கு மட்டும் நம்பிக்கை உண்டாகவில்லை. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. சாவு வராமலேயே பொழுது விடிந்துவிட்டது. ஆனால், முடிவு சமீபித்துவிட்டது என்ற உணர்ச்சி மாத்திரம் விடாமல் எனக்கு இருந்தது. ஆகவே ஆசிரமவாசிகளைக் கீதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பதிலேயே விழித்திருக்கும் நேரம் முழுவதையும் கழித்து வந்தேன். என்னால் படிக்க முடியாது. பிறரிடம் பேசும் விருப்பமும் எனக்கு இல்லை. கொஞ்சமும் பேசினாலும் மூளைக்குக் களைப்பாயிருந்தது.

வாழ்வதற்காகவே வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்கு என்றுமே இல்லையாகையால், வாழ்வில் எல்லாச் சுவையும் போய் விட்டது. ஒன்றும் செய்யமுடியாமல் நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் வேலை வாங்கிக்கொண்டு உடல் மெள்ளத் தேய்ந்து கொண்டே போவதைக் காணும் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த துன்பமாகவே இருந்தது. இவ்விதம் சதா சாவை எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர், ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார். கிரான்ட் வைத்தியக் கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து முடித்துவிட்டார். ஆனால், இன்னும் பட்டம் பெறவில்லை. அவர் பிரம்ம சமாஜத்தில் ஓர் அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத் தெரிந்தது. ஸ்ரீ கேல்கர் என்பது அவர் பெயர். சுயேச்சையான, பிடிவாதப் போக்குள்ளவர் அவர். பனிக்கட்டிச் சிகிச்சையில் அவருக்கு அதிக நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம் பரீட்சிக்க விரும்பினார். அவருக்குப் பனிக்கட்டி டாக்டர் என்று பெயர் வைத்தோம். தேர்ந்த டாக்டர்களுக்கும் தெரியாது போன சில விஷயங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அவருக்குத் திடமான நம்பிக்கை உண்டு.

தமது சிகிச்சையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னையும் தொத்திக் கொள்ளும்படி செய்ய முடியாது போனது, எங்கள் இருவருக்குமே பரிதாபகரமான விஷயமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு வரையில், அவருடைய சிகிச்சை முறையை நான் நம்புகிறேன். ஆனால், அவர் அவசரப்பட்டே சில முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்று அஞ்சுகிறேன். அவர் கண்டுபிடித்திருப்பவைகளின் குணாதிசயங்கள் எதுவாக இருந்தாலும், என் உடலில் அவற்றைப் பரிசோதிக்க அவரை நான் அனுமதித்தேன். உடலுக்கு வெளியில் செய்யும் சிகிச்சையைப் பற்றி எனக்கு ஆட்சேபமில்லை. உடம்பு முழுவதற்கும் பனிக்கட்டி வைத்துக்கட்டுவதே அவருடைய சிகிச்சை அவருடைய சிகிச்சையினால் என் உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர் சொல்லிக்கொண்டதை அங்கீகரிக்க என்னால் முடியாவிட்டாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும் என்னுள் அது நிச்சயமாக உண்டாக்கியது. இயற்கையாகவே மனநிலை உடம்பிலும் பிரதிபலித்தது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெல்ல நடக்கவும் தொடங்கினேன். அப்பொழுது அவர் என் ஆகாரத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய யோசனை கூறினார். அவர் கூறியதாவது: நீங்கள் பச்சை முட்டைகளைச் சாப்பிட்டால் அதிகச் சக்தியைப் பெற்றுச் சீக்கிரமாகப் பழைய பலத்தை அடைவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். முட்டைகள், பாலைப் போலத் தீங்கில்லாதவை. நிச்சயமாக முட்டை புலால் ரகத்தைச் சேர்ந்ததல்ல. முட்டைகள் எல்லாமே குஞ்சு பொரிக்கக் கூடியவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்விதம் குஞ்சு பொரிக்காதவைகளாக்கப்பட்ட முட்டைகளும் விற்கின்றன. என்றாலும், குஞ்சு பொரிக்காதவைகள் ஆக்கப்பட்டுவிட்ட முட்டைகளைச் சாப்பிடவும் நான் தயாராயில்லை. ஆனால், என் உடல் நிலையில் ஏற்பட்ட அபிவிருத்தி, பொதுக் காரியங்களில் நான் சிரத்தை கொள்ளுவதற்குப் போதுமானதாக இருந்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum