தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போனிக்ஸ் குடியிருப்பு

Go down

போனிக்ஸ் குடியிருப்பு Empty போனிக்ஸ் குடியிருப்பு

Post  birundha Sat Mar 23, 2013 3:47 pm

எல்லாவற்றையும் குறித்து ஸ்ரீ வெஸ்டுடன் பேசினேன். கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூல் என் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை அவருக்கு விவரித்துச் சொன்னேன். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையை ஒரு பண்ணைக்கு மாற்றிவிட வேண்டும்; அப் பண்ணையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒரே மாதிரியான ஊதியத்தை எல்லோரும் பெறவேண்டும், ஓய்வு நேரங்களில் அச்சக வேலையைக் கவனிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை அவரிடம் கூறினேன். இந்த யோசனையை ஸ்ரீ வெஸ்ட் அங்கீகரித்தார். எந்த நிறத்தினராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் மூன்று பவுன்தான் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், அச்சகத்தில் வேலை செய்யும் பத்துப் பன்னிரண்டு பேரும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளுவார்களா? எங்கோ மூலை முடுக்கிலிருக்கும் ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா? இதுவே பிரச்னையாயிற்று. ஆகையால், ஒரு யோசனை செய்தோம் புதிய திட்டத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், இப்பொழுது பெறும் சம்பளத்தையே தொடர்ந்து வாங்கிக்கொள்ளுவது, நாளா வட்டத்தில் குடியேற்றத்தின் உறுப்பினராகும் லட்சியத்தை அடைய முடிவு செய்வது என்பதே அந்த யோசனை. இந்தத் திட்டத்தையொட்டி ஊழியர்களிடம் பேசினேன். ஸ்ரீ மதன்ஜித்திற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. என் திட்டம் பைத்தியக்காரத்தனமானது என்றார். தமக்குள்ள சகலத்தையும், நான் ஈடுபட்டிருக்கும் இந்த முயற்சி நாசமாக்கிவிடும் என்றார். ஊழியர்களெல்லோரும் ஓடிப் போய் விடுவார்கள் என்றும், இந்தியன் ஒப்பீனியன் நின்று விடும் என்றும், அச்சகத்தையும் மூடிவிடவேண்டியதாகிவிடும் என்றும் கூறினார்.

அச்சகத்தில் வேலை செய்து வந்தவர்களில் என் சிற்றப்பா பிள்ளையான மதன்லால் காந்தியும் ஒருவர். என் யோசனையை ஸ்ரீ வெஸ்ட்டிடம் கூறியபோதே அவரிடமும் சொன்னேன். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர், குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்று என்னிடம் வேலை செய்ய விரும்பி வந்தவர். என்னிடம் அவருக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. ஆகவே, எந்தவித வாதமும் செய்யாமல் என் திட்டத்தை ஒப்புக்கொண்டார். அது முதல் என்னுடனேயே இருக்கிறார். இயந்திரத்தை ஓட்டுபவரான கோவிந்தசாமியும் என் திட்டத்திற்குச் சம்மதித்தார். மற்றவர்கள் இத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அச்சகத்தை எங்கே நான் கொண்டு போனாலும் அங்கே வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். இந்த விஷயங்களையெல்லாம் ஆட்களுடன் இரண்டு நாட்களில் பேசி முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, டர்பனுக்குப் பக்கத்தில் ஒரு ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கமாக இருக்கக்கூடிய நிலம் விலைக்குத் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். போனிக்ஸ் சம்பந்தமாகப் பதில் வந்தது. அந்தப் பண்ணையைப் பார்த்து வர ஸ்ரீ வெஸ்ட்டும், நானும் போனோம். ஒரு வாரத்திற்குள் இருபது ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் இனிய சிறிய நீர் ஊற்று ஒன்றும் ஆரஞ்சு செடிகளும் மாமரங்களும் இருந்தன. அந்த நிலத்திற்கு அடுத்தாற் போல எண்பது ஏக்கர் நிலப்பகுதி ஒன்றும் இருந்தது. அதில் மேலும் பல பழ மரங்களும், இடிந்துபோன ஒரு பழைய குடிசையும் இருந்தன. அந்த நிலத்தையும் வாங்கிவிட்டோம். எல்லாம் சேர்ந்து ஆயிரம் பவுன் விலையாயிற்று.

இது போன்ற என் முயற்சிகளிலெல்லாம் காலஞ்சென்ற ஸ்ரீருஸ்தம்ஜி எப்பொழுதும் எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்தத் திட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு பெரிய கிடங்கிலிருந்து எடுத்த பழைய இரும்புத் தகடுகளையும், வீடு கட்டுவதற்கான மற்றச் சாமான்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு வேலையை ஆரம்பித்தோம். போயர் யுத்தத்தில் என்னோடு வேலை செய்தவர்களான சில இந்தியத் தச்சர்களும், கொத்து வேலைக்காரர்களும் அச்சகத்திற்கு ஒரு கொட்டகை போட எனக்கு உதவி செய்தனர். 75 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள இக் கொட்டகை ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீ வெஸ்டும் மற்றவர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் தச்சர்களுடனும் கொத்து வேலைக்காரர்களுடனும் தங்கினர். அந்த இடம், இதற்கு முன்பு மனித சஞ்சாரமே இல்லாமல் இருந்த இடம். புல்லும் காடாக மண்டிப் போயிருந்தது. அங்கே பாம்புகள் ஏராளமாக இருந்ததால் வசிப்பதற்கு ஆபத்தான இடம். முதலில் எல்லோரும் கூடாரங்களில் வசித்து வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள் சாமான்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றிப் போனிக்ஸூக்குக் கொண்டு வந்துவிட்டோம். அந்த இடம் டர்பனிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. போனிக்ஸ் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டரை மைல் தூரம்.

இந்தியன் ஒப்பீனியனின் ஓர் இதழை மாத்திரமே வெளியில் மெர்க்குரி அச்சகத்தில் அச்சிடவேண்டியிருந்தது. சம்பாதிக்கும் நோக்கத்தோடு இந்தியாவிலிருந்து என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்த என் உறவினர்களையும் நண்பர்களையும் போனிக்ஸு க்கு இழுத்துவிட இப்பொழுது முயன்றேன். அவர்கள் பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் செல்வம் திரட்ட வந்தவர்களாகையால் அவர்களை இங்கே வந்துவிடும்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், சிலர் ஒப்புக் கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின் பெயரை மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன். மற்றவர்கள் திரும்பவும் வியாபாரம் செய்யப் போய்விட்டனர். மகன்லால் காந்தி மட்டும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொண்டார். தார்மிகத்துறையில் நான் செய்த சோதனைகளில் என் ஆரம்ப சக ஊழியர்களாக இருந்தவர்கள் சிலர் உண்டு. அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கியவர் இவரே. கைத்தொழில்களை இவர் தாமே கற்றுக்கொண்டார். அதனால், கைத்தொழிலாளிகளிடையே இவர்வகித்த ஸ்தானம் இணையில்லாதது. இவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல் ஆரம்பமாயிற்று. எவ்வளவோ கஷ்டங்களெல்லாம் ஏற்பட்டபோதிலும் இந்தியன் ஒப்பீனியன் அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், செய்யப்பட்ட மாறுதல்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு ஒரு தனி அத்தியாயமே அவசியமாகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum