தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழுக்கை

Go down

வழுக்கை                                 Empty வழுக்கை

Post  ishwarya Sat Feb 02, 2013 5:39 pm

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன் (ணீஸீணீரீமீஸீ). இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும். இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.

_ ஏ.ஆர். குமார்,
நன்றி - குமுதம் 28.8.2003

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum