தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராம சரித மானஸும், ஸ்ரீராம நவமியும்…!

Go down

ராம சரித மானஸும், ஸ்ரீராம நவமியும்…! Empty ராம சரித மானஸும், ஸ்ரீராம நவமியும்…!

Post  ishwarya Fri May 10, 2013 11:53 am

ராம காதைகளின் மூல நூல் வால்மீகி ராமாயணம். அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அதைப் பின்பற்றி, பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், பிற நாட்டு மொழிகளிலும்கூட ராமாயணம் எழுதப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஹிந்தி மொழி ராமாயணத்துக்கு “ராம சரித மானஸ்’ என்று பெயர். இதை எழுதியவர் துளசிதாசர். இவர் அந்த மகா காவியத்தை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர் அவரது மனைவி ரத்னாவளி. குறிப்பாக அவள் துளசிதாசர் மீது வீசிய கடுஞ்சொற்கள்தான் காரணமாக அமைந்தன என்றால் வியப்பாக இல்லை..? அந்தச் சம்பவத்தை இங்கு காண்போம்.

துளசிதாசருக்கு தனது மனைவியிடம் அளவு கடந்த அன்பு. எப்போதும் அவளருகிலேயே இருந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்; அவ்வாறே நடந்தும் வந்தார்.

ஒரு சமயம் ரத்னாவளி தனது பிறந்த வீட்டுக்குப் பயணமானாள். அவளைப் பிரிய மனம் இல்லாதிருந்த துளசிதாசரும் அவள் பின்னாலேயே கிளம்பிவிட்டார்.

அவர் இவ்வாறு தன் முந்தானையைப் பற்றிக் கொண்டதுபோல் பின் தொடர்வதை ரத்னாவளி விரும்பவில்லை. அவளுக்கு அது கூச்சமாக இருந்தது. அந்தக் கூச்சம், கணவர் மீதான கடும் கோபமாக உருவெடுத்தது. துளசி தாசரை குற்றம் சாட்டிப் பேசினார்; ஏசினார். அதன் சாரம் இவ்வாறு இருந்தது:

“”இப்படிக் கூடக்கூடப் பின்தொடர்ந்து வருகிறீர்களே… உங்களுக்கே இந்த அதீதமான ஆசை சரியில்லை என்று தோன்றவில்லையா? இப்படி நடந்து கொள்வதற்கு வெட்கமாக இல்லையா? அழிந்துபோகும் என்னுடைய உடல் மீது இப்படி வைக்கும் பற்றையும் பாசத்தையும், பகவான் ஸ்ரீராமன் மீது வைத்தால் எத்தனை நல்லதாகப் போகும்? போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்குமே..?” என்று கடிந்து கொண்டாள்.

மனைவி ரத்னாவளியின் இந்தச் சொல்லம்புகள் துளசிதாசரின் நெஞ்சுக்குள் ஆழமாக ஊடுருவிப் பாய்ந்தன. அவர் மிகவும் வேதனை அடைந்தார். அவரது ஆன்மா விழித்துக் கொண்டது. அடுத்த கணம் முதல் அவர் பகவான் ஸ்ரீராமனை கருத்தொருமித்து நேசிக்கத் தொடங்கினார். ஸ்ரீராமனை பற்றி ஒரு மாபெரும் காவியத்தைப் படைக்க உறுதி எடுத்துக் கொண்டார்; அன்றைய தினமே தனது படைப்புப் பணிக்குப் பிள்ளையார் கழியும் போட்டுவிட்டார்.

அந்தப் புண்ணிய தினம் பகவான் ஸ்ரீராமனின் அவதார தினம்…

”ஸ்ரீராம நவமி’ தினம். குறிப்பாக 1574, மார்ச் 30ஆம் நாள். அதாவது சைத்ர மாத நவமி திதி!

அன்று தொடங்கி, இரவு பகலாக அதே சிந்தனையில் லயித்து, 2 வருடம் 7 மாதம் 23 நாளில் அவர் அந்த மகா காவியத்தை எழுதி நிறைவு செய்தார். அப்படி அவர் உருவாக்கிய ஹிந்தி மொழி ராமாயணம்தான், “ராம சரித மானஸ்’ என்ற மகா காவியம்! இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் இந்தக் காவியம், ஹிந்தி மொழியின் மாபெரும் இலக்கியப் படைப்பாகும். மேலும் உலகின் மற்ற மொழி படைப்புகளுடன் ஒப்பிடும்போது இது தலைசிறந்து விளங்கும் மாகாவியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

“தோஹா, செளபாயி, சந்த், சௌரடா, சப்பய்’ ஆகிய யாப்புகளில் இயற்றப்பட்டுள்ளது இக்காவியம். இலக்கண விதிகளில் பிங்கள யாப்பிலக்கண வழிமுறைகளை ஆதாரமாகக் கொண்ட ராம சரித மானஸில் “நவரசங்களும்’ இடம் பெற்று விளங்குகின்றன. கவர்ச்சிகரமான மொழி நடை கையாளப்பட்டுள்ளது. இதில் துளசிதாசர் 17 ஆயிரம் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்.

இந்த மகா காவியத்தில் தர்மம், பக்தி, வேதாந்தம், ஞானம், யோகம், பலவிதமான சிந்தனைகள், நம்பிக்கைகள், சமுதாயத் தொடர்புகள், இகலோகம், பரலோகம், கலாசாரம் போன்ற பலவிதமான தத்துவங்களின் ஒருங்கிணைப்பையும், தீர்வையும் காணமுடிகிறது.

இந்த நூலின் ஒவ்வொரு செளபாயியிலும், மற்றும் “சந்த்’களின் ஒவ்வொரு வரியிலும் “சீதாராம்’ அதாவது “ச, த, ர, ம’ என்ற இந்நான்கு எழுத்துக்கள் இயல்பாகவே வந்து விழுந்து காவியத்தை அழகு படுத்தியுள்ளன.

இப்படி அமைவதென்பது இறையருள் ஒன்றின் மூலமாக மட்டுமே நடைபெறக்கூடியதாகும். எனவே, இறையருள் பெற்று ஸ்ரீ துளசிதாசரால் படைக்கப்பட்ட மகா காவியமான “ஸ்ரீராம சரித மானஸ்’ படிப்போருக்கும் இறையருளை வாரி வழங்கும் என்பது திண்ணம்.

நாளது 14ம் தேதி, “ஸ்ரீராம நவமி.’ அந்தப் புண்ணிய தினத்திலிருந்து “ஸ்ரீராம சரித மானஸ்’ புனித நூலைப் பாராயணம் செய்யத் தொடங்குவோம்! ஸ்ரீசீதா ராமனின் திருவருளைப் பெறுவோம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum