தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு

Go down

காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு Empty காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு

Post  ishwarya Thu May 02, 2013 4:23 pm

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியுள்ளது என்பதையும் காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்பதையும் உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு காடுகளை கண் போல் காக்கும் கடமையினை கண்ணும் கருத்துமாக ஆற்றி வருகிறது.

அந்த வகையில், வளம் மிக்க தமிழ்நாட்டின் வன வளங்களை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் 686 கோடி ரூபாய் செலவில் 2011-2012 முதல் எனது தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 10 வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. நாட்டிற்கு அழகையும், பொலிவையும் தரக்கூடியதும், மக்களுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடியதுமான வன விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க மேலும் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2013-14 ஆம் ஆண்டில் மாநிலத்தில் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து புதிதாக நான்கு வன உயிரின சரணாலயங்களை ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி காவேரி வன உயிரின சரணாலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் புள்ளிமான் உயிரின சரணாலயம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி கோடியக்கரை வன உயிரின சரணாலயம் மற்றும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டை பசுமையாக்கும் வகையில், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டில் 1000 வருவாய் கிராமங்களில் தனியார் தரிசு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஊடு பயிர்களாக 97 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 2 கோடி மரக் கன்றுகள் நடப்படும்.

மேலும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் கடன் தொகையில் எஞ்சியுள்ள 107 கோடியே 96 லட்சம் ரூபாயினை பயன்படுத்தி, தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம் நிலை-2 பணிகளை 2013-14 மற்றும் 2014-15 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், கூட்டு வன நிர்வாக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பயன்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், ஏற்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களை பராமரிக்கும் வகையிலும், கிராம வனக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் வனங்களின் மேம்பாட்டிற்கும், வன வளங்களைப் பாதுகாக்கவும் பதின்மூன்றாவது நிதிக் குழுமம் 2010-11 ஆம் ஆண்டு முதல் 2014-15 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு 142 கோடியே 48 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கிட பரிந்துரை செய்துள்ளது. இந்த நிதியினைக் கொண்டு, நடப்பாண்டில் 35 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வன பராமரிப்பு பணிகளான உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு மேலாண்மை, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் காடு வளர்ப்பு மற்றும் கூட்டு வன மேலாண்மையினைப் பலப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இது மட்டுமல்லாமல், வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி மனித வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த யானை புகா அகழிகள் ஏற்படுத்துவது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இதற்காக முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 4 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனது தலைமையிலான அரசால் ஒதுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க 5 கோடியே 19 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக வால்பாறை பகுதியில் தடுப்பு குழிகள் அமைத்தல், எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை வளர்த்தல் போன்றவற்றிற்காக 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், காட்டு யானைகளால் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு 440 கிலோ மீட்டர் நீளத்திற்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யானை புகா அகழிகள் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வன வளத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வனப் பணியாளர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, 2011-12 ஆம் ஆண்டில் வனப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இடர்படியினை காவல்துறை பணியாளர்களுக்கு இணையாக வழங்கும் வகையில், 60 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இடர்படியை 270 ரூபாயாக உயர்த்தி எனது தலைமையிலான அரசு வழங்கியது.

இது மட்டுமல்லாமல், காவல் சிறப்பு அங்காடித் திட்டம் வனத் துறை சீருடைப் பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 2013-14 ஆம் ஆண்டில் வனத் துறை பணியாளர்களுக்கு காவல் துறை பணியாளர்களுக்கு நிகராக, 2 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் சீருடை வழங்குதல், சலவைப்படி, இடர்படி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சுமார் 5600 வனப் பணியாளர்கள் பயன் அடைவார்கள்.

மேற்காணும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் வனப் பகுதிகள் வளமாக்கப்படவும், வனப் பணியாளர்கள் வளர்ச்சியுறவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
»  மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
» கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum