தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவா இது தகுமா…?

Go down

தலைவா இது தகுமா…? Empty தலைவா இது தகுமா…?

Post  ishwarya Wed Apr 24, 2013 2:06 pm

(தனது மகளின் திருமணத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே… சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, ‘தலைவா’ என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! ‘போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், ‘உள்ளே வராதே’ என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்… கட்-அவுட் வேண்டும்… டிக்கெட் காசு வேண்டும்… நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்… உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே… தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்…… உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, ‘இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு’ என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன… மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது… நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்து விடுவீர்கள். கடந்த முறை ‘குசேலன்’ படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, ‘என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.’ என்று சொல்லி, கோடம்பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது ‘என்னாச்சு?’ என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி ‘எங்க பவர் புரியுதா?’ என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

‘பாபா’ படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க… பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை… ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! ‘பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்’ என்றும் ‘நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்’ என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்… ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு ‘எந்திர’ இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum