தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்தணி முருகன் கோவில்

Go down

திருத்தணி முருகன் கோவில் Empty திருத்தணி முருகன் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:18 pm

திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. விஜய நகர அரசனான பிரபுட தேவராஜன் காலத்தில் இருந்த அருணகிரி நாதர் முருகனின் அடியார்களில் ஒருவராவார். இத்தலத்தைப் போற்றி 63 திருப்பாடல்களைப் பாடினார். ஆகவே இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது.

திருத்தணி நகரம் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இத்தலத்திற்குக் கிழக்கே திருவாலங்காடு. மேற்கே விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கர், தெற்கே காஞ்சீபுரம், வடக்கே திருக்காளத்தி, திருப்பதி ஆகிய தலங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. "சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது `மடம் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.


முருகனுக்கு இணையான தெய்வமோ, திருத்தணிகைக்குச் சமமான தலமோ இல்லை என்றே சொல்ல வேண்டும். கச்சியப்ப சிவாசாரியார், தமது கந்தபுராணத்தில் `மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கைநதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும் மலைகளில் சிறந்து ஓங்கி வளர்வது திருத்தணியே என்றும்

"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் இருப்பது போல முருகன் திருத்தணி மலையை மிகவும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றான்''

என்றும் இதனைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். முருகப் பெருமானை இங்கு தேவேந்திரன் கழுநீர் மலர்கொண்டு பூஜித்ததாக ஸ்தலவரலாறு கூறுகிறது. முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

சிறப்புகள்::

ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்த கோடிகள் பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர்.

நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர், பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டும் முருகன் திருநாமங்களைக் சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும் போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். இத்தலத்தில் சிவபெருமான் முருகப்பெருமானைத் தியானித்து பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார்.

குழந்தை முருகன் பிரணவத்தின் பொருளை விளக்கிய திறனைக் கேட்ட சிவபெருமான் "மக்கள் மெய்தீண்டல் உடன்கின்பம், மற்றவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு'' என்றபடி பெருமுழக்கம் செய்து சிரித்து மகிழ்ந்தருளினார். அதனால் இவருக்கு வீர அட்டகாசர் என்ற பெயர் ஏற்பட்டது.

திருத்தணியில் முருகனை வழிபட்டு, தாரகாசுரனால் கவரப்பட்ட தமது சங்கு, சக்கரம் முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம் மலையின் மேல் கோயிலுக்கு மேற்கேயுள்ளது. இங்கு முருகனை வழிபட்டு ராவணனை வெல்லும் ஆற்றலையும் அருட்படைகளையும் ராமர் பெற்றார்.

ராவணனை வென்ற பின் வந்து மீண்டும் முருகனைப் பூஜித்து, சிவஞானம் பெற்றார். ராவணனை வென்று விஜயம் பெற்று வந்ததனால், இங்குள்ள ராமபிரானுக்கு விஜயராகவப் பெருமாள் என்றும் அன்னையின் பெயர் விஜயவல்லித் தாயார் என்றும் வழக்குகிறது. இந்த கோவில் ஆறுமுக சுவாமி கோவிலுக்குத் தெற்கில் உள்ளது.

பிரம்மதேவர் திருத்தணி முருகப்பெருமானைப் பூஜித்து படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார். சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப் பெற்றார். கலைமகளும் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இது "பிரமசுனை'' என வழங்கப்படுகிறது.

வழிபடும் முறைகள்::

திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும்.

மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும். மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும்.

தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.

சந்நிதிகளில் திருநீறு குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்படுவதுடன் இங்கு திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் சிறப்பாக வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளும் பக்தர்கள் நோய்கள் பலவும் தீரப்பெறுவர்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல நேரடி பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு நேரடி ரெயில் வசதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணி கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum