தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அய்யா வழி பழக்க வழக்கங்கள்

Go down

அய்யா வழி பழக்க வழக்கங்கள் Empty அய்யா வழி பழக்க வழக்கங்கள்

Post  meenu Sun Mar 24, 2013 3:16 pm




அய்யாவைகுண்டரை அன்புக்கொடி மக்கள் அய்யா என்றே அழைத்தனர். இன்றும் அவ்வாறே சொல்கின்றனர். தன்னை நாடிவந்த அன்புக்கொடி மக்களை அய்யாவைகுண்டரும் அய்யா என்றே அழைத்தார். எதிர்படுகின்ற மனிதனை அய்யாவைகுண்டரின் பிரதிபிம்பமாகவே (கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல) அன்புக்கொடி மக்கள் கருதுகின்றனர். அதனால்தான் அய்யா என்று ஆச்சாரமாக (அய்யா வாங்க, அய்யா உட்காருங்க) ஒருவருக்கொருவர் பேசிக்களிக்கின்றனர்.

அன்புக்கொடிமக்கள் எச்செயலையும் அய்யா உண்டு என்று கூறி தொடங்குவதையும் அய்யா உண்டு என்றுகூறி நிறைவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பதியின் முகப்பிலும் இல்லத்து முன் அறைகளிலும், புத்தகங்களின் முற்சொல்லிலும் அன்புக்கொடி மக்கள் அய்யாதுணை என்று பொறிப்பதைப் பார்க்க முடிகிறது.

தாரை நாமம்:

அய்யா வைகுண்டர் மரபின் சின்னம் என்று இதனைக் கூறலாம். ஞானியரின் யோகநிலையில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ மேல் (நெற்றிப்பொட்டு என்பர்) தீப ஒளி நிற்பதைப் போல (இறைவன்) வீற்றிருப்பான் என்பதன் அடையாளமே தாரைப்பூமேல் நாமம் என்ற சின்னமாகும்.

விளக்கு நேமித்தல்:

அன்புக்கொடி மக்கள் அதிகாலையிலும் அந்திவேளையிலும் திருவிளக்கேற்றி வைத்து உகப்பாட்டு என்ற வழிபாட்டு பாடல் படித்து இறைவணக்கம் செய்கின்றனர். இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது. கிருத்தவர்களின் ஜெபம் செய்தல், இசுலாமியரின் தொழுகை நடத்துதல், உயர் சாதியினரின் சாம்புராணி திரி கொளுத்தி வணங்குதல் போன்றவற்றுக்கு மாற்றாக விளக்கு நேமித்தல் உள்ளது.

திருநாமம்:

அன்புக்கொடி மக்கள் வெள்ளைநிற மண்ணை எண் ஒன்றின் வடிவில் நேராக நெற்றியில் அணிந்து கொள்வதை திருநாமம் பூசுதல் என்று சொல்லுகின்றனர். அன்புக்கொடி மக்களின் நெற்றியைத் தொட்டு பணிவிடைக்காரர்கள் திருநாமம் இடுகின்றனர். குறுக்காகப் பூசும் வீபூதிப் பூச்சு, சந்தணப்பொட்டு, குங்குமப்பொட்டு, வைணவர்களின் திருமண் அணிதல் போன்றவற்றுக்கு மாற்றாக இது உள்ளது.

பிச்சைப் பாங்கு:

அகிலத்திரட்டில் பிச்சை எடுத்தலைப் பற்றியும், பிச்சை கொடுத்தலைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் பிச்சை எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் நேமித்த பொருட்களை (பூஜையில் வைத்த) பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வர். உதாரணத்துக்கு தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஒரு தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது.

இனிமம்:

அன்புக்கொடி மக்களுக்கு பணிவிடைக்காரர்களால் வழங்கப்படும் இறைவனுக்கு நேமித்த பொருட்கள் (வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சங்கனி, தேங்காய், பூ இன்ன பிற) இனிமம் என்று சொல்லப்படுகிறது.

பணிவிடைக்காரர்:

அய்யாவழிப் பதியில் பூஜை செய்பவர்களை பணிவிடைக்காரர் என்றே அன்புக்கொடி மக்கள் அழைக்கின்றனர்.

வருங்காலம் அறிதல்:

அய்யாவழிச் சாமியார்கள் (ஆண், பெண் இருபாலாரும்) இறைவனை வணங்கி அருள்பெற்ற நிலையில் கூடியிருக்கும் அன்புக்கொடி மக்களின் கவலையைப் போக்குமுகமாக ஆறுதல் மொழி, வழிகாட்டல், எதிர்காலம் உரைத்தல் போன்றவற்றைச் சொல்வதுண்டு. இந்த நிகழ்வை அன்புக்கொடி மக்கள் கணக்கு கேட்டல் அல்லது கணக்கு பாடுதல் என்று குறிப்பிடுகின்றனர்.

திருஉளச்சீட்டு:

திருமணப் பொருத்தம் பார்க்க அன்புக்கொடி மக்கள் திருச்சரடு (தாலி) சேர்க்க திருமனசு இரங்கினால் இந்தச் சீட்டு வரவும் என்றும் திருச்சரடு சேர்க்க திருமன இரங்காவிடில் இந்த சீட்டு வரவும் என்றும் சீட்டுகள் எழுதி பணிவிடையில் வைக்கின்றனர். பணிவிடை நிறைவுக்குப் பின்னர் பணிவிடைக்காரர் எடுத்துக் கொடுக்கும் சீட்டை அய்யா வைகுண்டர் எடுத்துக் கொடுத்ததாகக் கருதி அதன்படிச் செயல்படும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது.

ஏட்டில் கயிறு போட்டு பார்த்தல்:

எதிர்கால நிகழ்வினை அறிய அகிலத்திரட்டு அம்மானை என்ற ஏட்டுப்பிரதியில் (புத்தகத்திலோ) நூல் கயிறு போட்டுப்பார்க்கும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது. கயிறு விழுந்த பக்கத்தில் உள்ள பாடல் வரிகளைக் கொண்டு எதிர்காலம் இப்படியிருக்கலாம் என்று தீர்மானிக்கின்றனர். அம்பலப்பதியில் பிரதி செவ்வாய் தோறும் ஏட்டில் கயிறு போட்டுப் பார்த்தல் நடைபெறுகிறது. முட்டப்பதியிலும் ஏட்டில் கயிறு போட்டுப்பார்க்கும் முறை உள்ளது.

குழந்தைவளர்ப்பு:

அன்புக்கொடி மக்கள் தலைமைப்பதி பள்ளியறை முன்னிலையில் தாங்கள் பெற்ற குழந்தையைக் கிடத்தி (ஆண்டவன் பாதத்தில் கிடத்துவதாகக் கருதி) கணவனும் மனைவியுமாக விரும்பிய பெயரை 5 முறை கூப்பிட்டு குழந்தைக்குப் பெயரிடும் வழக்கமும் அன்புக்கொடி மக்களிடையே உள்ளது.

அன்புக்கொடி மக்கள் பதியில் கிடைத்த உண்பானையே குழந்தைக்கு முதலில் ஊட்டுகின்றனர். சிலர் குழந்தைக்கு முதலில் அன்னம் ஊட்டுவதை பணிவிடைக்காரர் மூலம் செய்வர். குழந்தைகளுக்கு பிறந்தமுடி எடுக்கும் வைபவத்தையும் பதியில் வைத்தே நடத்தி தருமம் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்கு பதியில் வைத்து காது குத்தி கம்மல் போடுகின்றனர்.

பூப்புனித நீராட்டு:

குமரிமாவட்ட மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா எடுப்பதைச் சடங்கு என்று கூறுவர். அய்யாவழி மரபில் அவரின் 5 சீடர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதி பணிவிடைக்காரர்களில் ஒருவர் அய்யா வைகுண்டருக்கு பணிவிடை வைத்து உகப்பாட்டு படித்து ஆதியாம் வைந்தராசர் எனத்தொடங்கும் விருத்தப்பாக்களை பாடி அன்புக்கொடி மக்களின் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைபவத்தை நடத்தி வைப்பது வழக்கம்.

திருமணம்:

அன்புக்கொடி மக்கள் திருமணப் பொருத்தம் அறிய பதியில் ஏட்டில் நூல்வைத்துப் பார்த்தல், திருஉளச்சீட்டு எழுதி வைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். திருமணத்தின்போது அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை வைக்கின்றனர். மவுனிக்கலியாண என்று தொடங்கும் திருமண வாழ்த்துப் பாடல் படிக்கின்றனர். மணமக்கள் மணமேடையில் தெற்குத்திசை நோக்கி அமர்கின்றனர்.

மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை திருச்சரடு சேர்த்தல் என்று சொல்கின்றனர். தாலியில் உள்ள சுட்டியில் (லாக்கட்) தாமரை நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். மணமக்கள் மணமேடையை ஐந்துமுறை வலம் வருகின்றனர். அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற நிகழ்வுகள் கிடையாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum