தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய சோதனை

Go down

இதய சோதனை                          Empty இதய சோதனை

Post  birundha Sat Mar 23, 2013 3:43 pm

ஜூலுக் கலகத்தில் நான் அநேக புது அனுபவங்களைப் பெற்றேன். அது என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படியும் செய்தது. போரின் பயங்கரங்களைக் குறித்து ஜூலுக் கலகத்தில் நான் அறிந்துகொண்டதைப் போல் போயர் கலகத்தின் போது நான் தெரிந்துகொள்ளவில்லை. இது மனித வேட்டையேயன்றிப் போர் அல்ல. இது என்னுடைய அபிப்பிராயம் மாத்திரமல்ல, நான் இதைக் குறித்துப் பேச நேர்ந்த போது ஆங்கிலேயர் பலரும் இதே அபிப்பிராயத்தையே கூறினார்கள். ஒரு பாவமும் அறியாத மக்கள் வாழ்ந்த குக்கிராமங்களில், சிப்பாய்களின் துப்பாக்கிகள் பட்டாசுகள் போல் வெடித்தன என்ற செய்தியை ஒவ்வொரு நாள் காலையிலும் கேட்டுக் கொண்டு, அவர்கள் மத்தியிலும் வசித்து வருவது என்பது, பெருஞ் சோதனையாகவே இருந்தது. ஆனால், இந்த வேதனையை நான் ஒருவாறு சகித்துக்கொண்டேன். ஏனெனில் முக்கியமாகக் காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வது என்பது மாத்திரமே எங்கள் படையின் வேலை. நாங்களும் இல்லாதிருந்தால், அந்த ஜூலுக்களை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள் என்பதையும் கண்டேன். ஆகவே, இந்த வேலை என் மனத்திற்குச் சமாதானமாக இருந்தது. ஆனால், சிந்திக்கவேண்டிய வேறு விஷயங்களும் அநேகம் இருந்தன. அந் நாட்டில் மிகக் குறைவான ஜனத் தொகையைக் கொண்ட பகுதி அது. குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில் அநாகரிகர்கள் என்று சொல்லப்படும் ஜூலுக்களின் கிரால்கள் எனப்படும் கிராமங்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டோ, சும்மாவோ இந்த ஏகாந்தமான பகுதிகளில் நடந்து போகும்போதே அடிக்கடி தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன்.

பிரம்மச்சரியத்தைக் குறித்தும், அதன் விளைவுகளைப் பற்றியும் யோசித்தேன். அது சம்பந்தமான என் கருத்துக்கள் ஆழ வேர் ஊன்றின. எனது சக ஊழியர்களுடன் அதைக் குறித்து விவாதித்தேன். ஆன்ம ஞானத்தை அடைவதற்குப் பிரம்மச்சரியம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அப்பொழுது நான் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால், தனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால், நான் செய்து வருவதைப் போன்ற தொண்டுக்கு, மேலும் மேலும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதையும், குடும்ப வாழ்க்கையின் இன்பத்திலும் பிள்ளைகளைப் பெறுவதிலும் அவற்றை வளர்ப்பதிலுமே நான் ஈடுபட்டிருந்தேனாயின் என் வேலைக்கு நான் தகுதியுடையவனாகமாட்டேன் என்பதையும் உணர்ந்தேன். சுருங்கச் சொன்னால், உடலை நாடுவது அல்லது ஆன்மாவை நாடுவது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிற்காகவே நாம் வாழ முடியும். உதாரணமாக, இச் சமயம் என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்க்கும் நிலையில் இருந்திருப்பாளாயின், இப் போரின் சேவையில் நான் குதித்திருக்க முடியாது.

பிரம்மச்சரியத்தை அனுசரிக்காத குடும்ப சேவை, சமூக சேவைக்குப் பொருந்தாகதாகவே இருக்கும். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால் அது முற்றும் பொருந்துவதாக இருக்கும். இவ்வாறு சிந்தித்ததனால், முடிவான விரதம் கொண்டு விட வேண்டும் என்று ஒருவகையில் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். இவ்விரதத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு வகையான ஆனந்தத்தை உண்டாக்கியது. கற்பனா சக்தியும் சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தது. சேவை செய்வதற்கு எல்லையற்ற துறைகள் தோன்றலாயின. இவ்வாறு கடுமையான உடலுழைப்பின் நடுவிலும், மன உழைப்பின் நடுவிலும் இருந்த சமயத்தில், கலகத்தை அடக்கும் வேலை அநேகமாக முடிந்துவிட்டது என்றும், நாங்கள் சீக்கிரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விடுவோம் என்றும் ஒரு செய்தி வந்தது. இரண்டொரு நாட்களுக்குப் பிறகு நாங்கள் விடுவிக்கப்பட்டோம் பிறகு சில தினங்களில் எங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம். கொஞ்ச நாட்கள் கழித்துக் கவர்னரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தில், எங்கள் வைத்தியப் படையின் சேவைக்குப் பிரத்தியேகமாக நன்றி கூறியிருந்தார். போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும், பிரம்மச்சரிய விஷயத்தைக் குறித்து சகன்லால், மகன்லால், வெஸ்ட் முதலியவர்களிடம் பேசினேன். இந்த யோசனை அவர்களுக்கும் பிடித்திருந்தது. இவ் விரதத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அதிலிருக்கும் கஷ்டங்களையும் எடுத்துக் கூறினர்.

சிலர், இதை அனுசரிக்கத் தைரியமாக முன்வந்தார்கள். இதில் சிலர் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அறிவேன். நானும் துணிந்து இறங்கினேன். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது என்று விரதம் பூண்டேன். ஆனால் நான் மேற்கொண்ட இக் காரியம் எவ்வளவு மகத்தானது, கடுமையானது என்பதை அப்பொழுது நான் உணரவில்லை. அதிலுள்ள கஷ்டங்கள் இன்றும்கூட என் எதிரே மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த விரதத்தின் முக்கியத்துவமும் நாளுக்கு நாள் எனக்கு நன்றாகப் புலனாகிக்கொண்டு வருகிறது. பிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத்தனமாகவும் எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான். பிரம்மச்சரியத்தின் பெருமையைக் குறித்து நமது மத நூல்களில் புகழ்ந்து கூறப் பட்டிருப்பதெல்லாம் மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பதாக முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிரம்மச் சரியத்தைக் குறித்து நாளுக்கு நாள் நான் தெளிவடைந்து வருவதால் சமய நூல்கள் கூறுவதெல்லாம் சரியானவையே என்பதையும், அனுபவத்தில் கண்டு கூறப்பட்ட உண்மைகள் என்பதையும் இன்று காண்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான சக்தியையுடையதான பிரம்மச்சரியம், எளிதான காரியமும் அன்று என்பதையும் கண்டேன். அது நிச்சயமாக உடலைப்பற்றிய விஷயம் மாத்திரம் அல்ல. உடலின் அடக்கத்தோடு அது ஆரம்பமாகிறது. ஆனால், அதோடு அது முடிந்துவிடுவதில்லை. பூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கனவிலும் எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்திவிட்டால் அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகுதூரம் கடக்கவேண்டி இருக்கும். எனக்கோ சரீர அளவில் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பதிலும் கூடக் கஷ்டங்கள் அதிகம் இருந்தன. அநேகமாக அபாய எல்லையைத் தாண்டிவிட்டேன் என்று நான் இன்று சொல்லலாம். ஆயினும், இதில் மிகவும் அத்தியாவசியமான - சிந்தையை வசப்படுத்துவதில் - நான் இன்னும் முழு வெற்றியையும் அடைந்து விடவில்லை. இதில் உறுதியோ, முயற்சியோ இல்லாமலில்லை. ஆனால், விரும்பத்தகாத எண்ணங்கள் எங்கிருந்து எழுந்து வஞ்சகமாகப் படையெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுவது இன்னும் எனக்கு ஒரு பிரச்னையாகவே இருந்துவருகிறது. விரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மகான்களும் முனிவர்களும் தங்கள் அனுபவங்களை நமக்குச் சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் ஏற்றதாகவும், தவறாமல் பலிக்கக் கூடியதாகவும் உள்ள மருந்து எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

பரிபூரணத்துவம் அல்லது தவறே இழைக்காமலிருக்கும் சக்தி கடவுளின் அருளினால் மாத்திரமே கைகூடும். அதனாலேயே கடவுளை நாடிய பக்தர்களும் ஞானிகளும் தங்களுடைய தவ வலிமையினாலும் தூய்மையினாலும், சக்தி பெற்ற ராமநாமம் போன்ற
மந்திரங்களை நமக்கு அளித்திருக்கிறார்கள். அவன் அருளை நாடி அவனே கதி என்று பரிபூரணமாக அடைக்கலம் புகுந்து விட்டாலன்றிச் சிந்தையை முற்றிலும் அடக்கி விடுவது என்பது சாத்தியமே இல்லை. சிறந்த சமய நூல் ஒவ்வொன்றும் இதையே போதிக்கிறது. பூரணமான பிரம்மச்சரியத்தை அடைந்து விடுவதற்காக நான் பாடுபடும் ஒவ்வொரு கணத்திலும் இந்த உண்மையை உணர்ந்து வருகிறேன். அந்த முயற்சி, போராட்டம் ஆகியவற்றின் சரித்திரத்தில் ஒரு பகுதியை இனி வரும் அத்தியாயங்களில் கூறுகிறேன். இம்முயற்சியை எப்படித் தொடங்கினேன் என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். உற்சாகத்தின் ஆரம்ப வேகத்தில், பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது வெகு எளிதானது என்பதைக் கண்டேன். என் வாழ்க்கை முறையில் நான் செய்த முதல் மாறுதல், என் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுப்பதையும் அவளுடன் தனிமையை நாடுவதையும் விட்டு விட்டதாகும். இவ்வாறு 1900-ஆம் ஆண்டிலிருந்து, விரும்பியும் விரும்பாமலும் நான் அனுசரித்து வந்த பிரம்மச்சரியத்திற்கு, 1906-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து ஒரு விரதத்தின் மூலம் முத்திரையிட்டேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum