தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளின் படிப்பு

Go down

குழந்தைகளின் படிப்பு Empty குழந்தைகளின் படிப்பு

Post  birundha Sat Mar 23, 2013 2:51 pm

1897 ஜனவரியில், டர்பனில் நான் இறங்கியபோது என்னுடன் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து வயதான மகன் ஒருவன், ஒன்பது வயதும், ஐந்து வயதும் உள்ள என் புத்திரர்கள் இருவர் இவர்களை எங்கே படிக்க வைப்பது. ஐரோப்பியக் குழந்தைகளுக்கு என்று இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு நான் அவர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் என் குழந்தைகளுக்குச் சலுகை அளித்து, விதிவிலக்குப் பெற்றால்தான் அங்கே சேர்த்துக் கொள்ளுவார்கள். வேறு எந்த இந்தியரின் குழந்தைகளையும் இப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இந்தியக் குழந்தைகளுக்கென்று, கிறிஸ்தவப் பாதிரிகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் கல்வி எனக்குப் பிடிக்கவில்லையாகையால் என் குழந்தைகளை அங்கே அனுப்ப நான் தயாராக இல்லை. இதற்கு ஒரு காரணம் அங்கே ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களும் போதிக்கப்பட்டு வந்ததாகும். இல்லாவிட்டால், பிழையான தமிழ் அல்லது ஹிந்தியில் போதிப்பார்கள். இதையும் கஷ்டத்தின் பேரில்தான் ஏற்பாடு செய்யவேண்டி இருந்திருக்கும். இதையும் மற்ற அசௌகரியங்களையும் சமாளித்துக் கொண்டு போக என்னால் முடியாது. இதற்கு மத்தியில் இக் குழந்தைகளுக்கு நானே போதிப்பது என்று சொந்த முயற்சியும் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் சொல்லிக்கொடுப்பது என்றால் ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக இருக்க முடியாது. தக்க குஜராத்தி உபாத்தியாயரும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஆகையால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். என் மேற்பார்வையில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை என்று விளம்பரம் செய்தேன். இந்த உபாத்தியாயர் ஒழுங்காக ஏதாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டு வரவேண்டும். மற்றப்படிப்பு விஷயங்களைப் பொறுத்த மட்டும், எனக்கு ஒழிந்தபோது அப்போதைக்கப்போது நான் சொல்லிக் கொடுப்பதோடு குழந்தைகள் திருப்தியடைய வேண்டியதே என்று முடிவு செய்தேன். ஆகவே ஓர் ஆங்கில மாதை, மாதம் ஏழு பவுன் சம்பளத்தில், குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்த்தினேன். இந்த ஏற்பாடு கொஞ்ச காலம் நடந்து வந்தது. ஆனால், எனக்கு இது திருப்திகரமாக இல்லை, நான் எப்பொழுதும் குழந்தைகளுடன், தாய்மொழியிலேயே பேசிப் பழகி வந்தேன். இதனால், அவர்களுக்குக் கொஞ்சம் குஜராத்தி தெரியவந்தது. குழந்தைகளைத் திரும்ப இந்தியாவிற்கு அனுப்பிவிடுவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், சிறு குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவே கூடாது என்று அந்த நாளிலிருந்தே நான் கருதிவந்தேன்.

ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது. ஆகையால் என் குழந்தைகளை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். என் சகோதரியின் மகனையும் என் மூத்த மகனையும், இந்தியாவில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்குக் கொஞ்சக்காலம் அனுப்பினேன். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்களைத் திருப்பி அழைததுக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. பிறகு என் மூத்த மகன், வயதடைந்த வெகு காலத்திற்குப் பிறகு என்னிடம் மனஸ்தாபம் கண்டு, இந்தியாவுக்குப் போய்விட்டான். அங்கே அகமதாபாத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். ஆனால் என் மருமகனோ, என்னால் கொடுக்க முடிந்த கல்வியோடு திருப்தியடைந்து என்னுடனேயே இருந்துவிட்டான் என்று ஞாபகம். நல்ல வாலிபப் பருவத்தில் அவன் துரதிருஷ்டவசமாகச் சிறிது காலம் நோயுற்றிருந்து இறந்து போய்விட்டான். என் குமாரர்களில் மற்ற மூவரும் பொதுப் பள்ளிக்கூடத்திற்குப் போய் படித்ததே இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு இருந்தவர்களின் குழந்தைகளுக்கென்று நான் ஆரம்பித்துச் சிறிது காலம் நடத்திக் கொண்டிருந்த வசதிக் குறைவான பள்ளிக்கூடங்களில் இவர்கள் சிறிது காலம் ஒழுங்காகப் படித்து வந்தனர்.

இந்தப் பரிசோதனைகளெல்லாம் அரைகுறையானவைகளே. நான் விரும்பிய அளவு, குழந்தைகளுக்காக என் நேரத்தைச் செலவிட என்னால் முடியவில்லை. அவர்கள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்த என்னால் முடியாது போனதும் தவிர்க்கமுடியாத வேறு காரணங்களும், அவர்களுக்கு நான் அளிக்க விரும்பிய இலக்கியக் கல்வியை அளிக்க முடியாதபடி செய்துவிட்டன. இவ்விஷயத்தில் என்மீது என் குமாரர்கள் குறைகூறியிருக்கின்றனர். எம்.ஏ. அல்லது பி.ஏ. படித்தவரையோ அல்லது மெட்ரிகலேஷனாவது படித்தவர்களையோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பள்ளிக்கூடப் படிப்பு இல்லாததன் கஷ்டத்தை அவர்கள் உணருவதாகத் தோன்றுகிறது.

அது எப்படியானாலும் என் அபிப்பிராயம் வேறு, எப்படியாவது அவர்களைப் பொதுப் பள்ளிக்கூடத்தில் பிடிவாதமாகப் படிக்கவைத்திருந்ததேனாயின், அனுபவம் என்ற பள்ளிக்கூடத்தில் மாத்திரம் கிடைக்கக்கூடியதான, பெற்றோருடன் இருப்பதால் அடைவதான கல்வி, அவர்களுக்கு இல்லாது போயிருக்கும் அவர்களைப்பற்றி நான் இன்று கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கிறேன், இப்படி இருக்கமுடியாமலும் போயிருக்கும். என்னை விட்டுபிரிந்து, இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ அவர்கள் பெற்றிருக்கக்கூடிய இயற்கையல்லா கல்வி, இன்று வாழ்க்கையில் அவர்கள் காட்டி வரும் எளிமையையும், சேவா உணர்ச்சியையும் அவர்களுக்குப் போதித்தே இராது. மேலும் அவர்களுடைய செயற்கை வாழ்க்கை முறை எனது பொது வேலைக்குப் பெரிய இடையூறாகவும் இருந்திருக்கும். ஆகையால் என் திருப்திக்கு ஏற்ற வகையிலோ, அவர்கள் திருப்தியடையும் வகையிலோ, அவர்களுக்கு இலக்கியக் கல்வியை அளிக்க என்னால் முடியாது போயிற்று. ஆனாலும், என்னுடைய சக்திக்கு எட்டிய மட்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமையை நான் செய்யாமல் இருந்துவிடவில்லை என்று நான் வருந்தவே இல்லை.

இன்று என் மூத்த மகனிடம் விரும்பத்தகாத குணங்களை நான் காண்கிறேன் கட்டுத் திட்டமும் ஒழுங்கும் அற்ற என் இளவயதின் எதிரொலியே அப்பகுதி, அரைகுறையான அறிவும், சுகபோகப் பற்றும் நிரம்பியிருந்த காலம் என்று கருதுகிறேன். அந்த காலமும் என் மூத்த மகனுக்கு நன்றாகப் புத்தி தெரிந்த காலமும் ஒன்றாக இருந்தன. அது நான் அனுபவம் இன்மையிலும், இன்ப நுகர்ச்சியிலும் திளைத்த காலம் என்று கருத இயற்கையாகவே அவன் மறுத்துவிட்டான். இதற்கு நேர்மாறாக அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிக சிறந்த காலம் என்றும், பின்னால் எனக்கு ஏற்பட்ட மாறுதல்கள், அறிவுத்தெளிவு என்று தவறாகக் கூறப்படும் மதிமயக்கத்தினால் ஏற்பட்டவை என்று அவன் கருதிவிட்டான். அவன் அப்படியே எண்ணியிருக்கட்டும். என் வாழ்க்கையின் ஆரம்ப காலம், நான் புத்தித்தெளிவு பெற்றிருந்த காலம் என்றும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்ட பிந்திய காலமே மாயையும், அகந்தையும் நிறைந்த காலம் என்றும், அவன் ஏன் எண்ணக்கூடாது? அடிக்கடி நண்பர்கள் என்னைக் கீழ்வரும் பல கேள்விகளைக் கேட்டு மடக்கப் பார்த்திருக்கின்றனர். உங்கள் குழந்தைகளுக்குக் கலாசாலைப் படிப்பு அளித்திருந்தால் அதனால் என்ன தீமை விளைந்திருக்கும்? இவ்விதம் அவர்களுடைய சிறகுகளைத் துண்டித்துவிடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? படித்துப் பட்டம் பெற்று, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துறைகளை அவர்கள் மேற் கொள்ளுவதற்கு நீங்கள் ஏன் குறுக்கே நின்றிருக்க வேண்டும்?

இந்த விதமான கேள்விகளில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ மாணவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். கல்வியைக் குறித்து எனக்குள்ள கொள்கைகளை நானாகவோ, மற்றவர்களின் மூலமோ வேறு குழந்தைகளிடமும் அனுசரித்து, அதன் பலனையும் கவனித்திருக்கிறேன். என் புத்திரர்களின் வயதினரான மற்றும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும். மனிதனுக்கு மனிதன் ஒப்பிட்டுப் பார்த்தால், என் புதல்வர்களைவிட அவர்கள் எந்த விதத்திலும் மேலானவர்கள் என்றோ, அவர்களிடமிருந்து என் புதல்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய எதுவும் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை.

ஆனால் என்னுடைய சோதனைகளின் முடிவான பலன் காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர் கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர் பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்பதியடைந்து விடுபவனாக இருந்திருந்தால் அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியவரும்போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்ற யார் தான் கூறமாட்டார்கள்? இந்திய இளைஞர்களை, அவர்களுடைய அடிமைத் தனத்தின் கோட்டைகளில் இருந்து - அதாவது அவர்களுடைய பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்து வெளியேறிவிடுமாறு 1920 இல் நான் அழைத்தேன். அடிமை விலங்குகளுடன் இலக்கியக் கல்வி கற்கப் போவதைவிட சுதந்திரம் பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாமல் இருந்து, கல்லுடைத்து வாழ்வதே எவ்வளவோ மேல் என்று அப்பொழுது அவர்களுக்குச் சொன்னேன். எந்த ஆதாரத்துடன் நான் இந்தப் புத்திமதியைக் கூறினேன் என்பதை இளைஞர்கள் இப்பொழுது கண்டு கொள்ளலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum