தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாராயண ஹேமசந்திரர்

Go down

நாராயண ஹேமசந்திரர் Empty நாராயண ஹேமசந்திரர்

Post  birundha Fri Mar 22, 2013 10:21 pm

நாராயண ஹேமசந்திரர் இங்கிலாந்துக்கு வந்தார். அவர் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டிருந்தேன். தேசிய சங்கத்தைச் சேர்ந்த குமாரிமானிங் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். எல்லோருடனும் கலந்து பழகும் குணம் எனக்கு இல்லை என்பது குமாரி மானிங்குக்குத் தெரியும். நான் அவர் வீட்டுக்குப் போனால் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பேன். என்னிடம் யாராவது பேசினால் மட்டும் அதற்கு பதில் சொல்வேன். நாராயண ஹேமச்சந்திரரை அப்பெண்மணி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கோ ஆங்கிலம் தெரியாது. அவருடைய உடைகளும் விசித்திரமாக இருந்தன. அவருடைய கால்சட்டை விகாரமானது. பார்ஸி மோஸ்தரில் இருந்த அவருடைய பழுப்புநிறச் சட்டை, கசங்கிப்போய், அழுக்காக இருந்தது. கழுத்தில் "டையோ, காலரோ" இல்லை. குஞ்சம் வைத்த கம்பளித் தொப்பியைத் தலையில் வைத்திருந்தார். நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டிருந்தார்.

அவர் ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருப்பார். வட்டமான அவர் முகம் முழுவதிலும் அம்மைத் தழும்புகள். அவர் மூக்கு, கூரியதென்றோ சப்பையானதென்றோ சொல்ல முடியாது. எப்பொழுதும் தமது தாடியைக் கையினால் உருவிவிட்டுக் கொண்டே இருந்தார். நாகரிகமானவர்கள் கூடியுள்ள இடத்தில் இத்தகைய விசித்திரத் தோற்றத்தோடும், வேடிக்கையான உடையோடும் இருப்பவர் மீதே எல்லோருடைய கவனமும் செல்லும்.

உங்களை குறித்து நான் நிரம்பக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். நீங்கள் எழுதிய நூல்கள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கு அன்பு கூர்ந்து வருவீர்களாயின் மகிழ்ச்சியடைவேன் என்றேன். நாராயண ஹேமசந்திரரின் குரல், கொஞ்சம் கம்மலாக இருக்கும். சிரித்த முகத்துடன் அவர் ஞவருகிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று கேட்டார். ஸ்டோர் வீதியில் என்றேன். அப்படியானால் நாம் பக்கத்தில்தான் இருக்கிறோம். நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்னால் முடிந்த எதையும் கற்றுக் கொடுக்க எனக்கு மகிழ்ச்சியே. என்னால் முடிந்த வரை முயல்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் இடத்திற்கே வருகிறேன்.

வேண்டியதில்லை. உங்கள் இடத்திற்கே நான் வருகிறேன். என்னுடன் மொழி பெயர்ப்புப் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் கொண்டு வருகிறேன். இவ்விதம் ஏற்பாடு செய்து கொண்டோம். சீக்கிரத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். நாராயண ஹேமசந்திரருக்கு இலக்கணம் என்பதே தெரியாது. குதிரை என்பது வினைச்சொல் என்பார். ஓடு- என்பது பெயர்ச்சொல் என்பார். இப்படிப்பட்ட வேடிக்கையான பல சம்பவங்கள் எனக்கு நினைவு இருக்கின்றன. ஆனால், தம்முடைய இத்தகைய அறியாமைக்காக அவர் கவலைப்படுவதே இல்லை. இலக்கணத்தில் எனக்கு இருந்த சிறிது அறிவும் அவர் விஷயத்தில் பயன்படவில்லை. இலக்கணத்தைக் குறித்துத் தமக்கிருந்த அறியாமை, வெட்கப்பட வேண்டியது என்று அவர் கருதியதே இல்லை என்பது நிச்சயம்.

அவர் கொஞ்சமேனும் கவலைப்படாமல் என்னிடம், உங்களைப் போல் நான் பள்ளிக் கூடத்திற்குப் போனதே இல்லை. என் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு இலக்கணம் அவசியம் என்று நான் உணர்ந்ததும் இல்லை. அது சரி, உங்களுக்கு வங்காளி மொழி தெரியுமா ? எனக்கு அது தெரியும், நான் வங்காளத்தில் பிரயாணம் செய்திருக்கிறேன். மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் நூல்களைக் குஜராத்தி பேசும் உலகத்துக்கு அளித்தவனே நான்தான். மற்றும் பல மொழிகளில் இருக்கும் பொக்கிஷங்களை யெல்லாம் குஜராத்தியில் மொழிபெயர்க்க நான் விரும்புகிறேன். மூலத்திற்கு நேரான மொழிப்பெயர்ப்பை நான் செய்வதில்லை என்பது உங்களுக்கு தெரியும். மூலத்தின் கருத்தைக் கொண்டு வருவதோடு நான் திருப்தியடைந்து விடுகிறேன். என்னைவிட அறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில் இன்னும் அரிய வேலைகளைச் செய்யலாம். ஆனால், இலக்கணத்தின் உதவி இல்லாமலேயே நான் இதுவரை செய்திருப்பதில் திருப்தியடைகிறேன். எனக்கு மராத்தி, ஹிந்தி, வங்காளி ஆகிய மொழிகள் தெரியும் இப்பொழுது ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். ஏராளமான சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என் ஆசை இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணுகிறீர்களா ? இல்லவே இல்லை. பிரான்ஸுக்குப் போய்ப் பிரெஞ்சு மொழி கற்க விரும்புகிறேன். அம்மொழியில் இலக்கியச் செல்வம் ஏராளம் என்று கேள்விப்படுகிறேன். சாத்தியமானால் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மன் மொழியையும் கற்பேன் என்று சொன்னார்.

இவ்விதம் அவர் விடாமல் பேசிக்கொண்டே போவார். பிற மொழிகளைக் கற்பதிலும், வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்வதிலும் அவருக்கு இருந்த ஆசைக்கு எல்லையே இல்லை. அப்படியானால் நீங்கள் அமெரிக்காவுக்கும் போவீர்கள் அல்லவா?

நிச்சயமாகப் போவேன். புதிய உலகத்தைப் பார்க்காமல் நான் எப்படி இந்தியாவுக்குத் திரும்பிவிட முடியும்? ஆனால், இதற்கெல்லாம் பணத்திற்கு என்ன செய்வீர்கள்? எனக்குப் பணம் எதற்காக ? உங்களைப்போல நான் நாசூக்கானவன் அல்ல. எனக்குக் குறைந்த அளவு சாப்பாடும், குறைந்த அளவு உடையும் போதும். என் புத்தகங்களின் விற்பனையிலிருந்தும் என் நண்பர்களிடம் இருந்தும் கிடைப்பதே இதற்குப் போதுமானது. நான் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பு வண்டியிலேயே பிரயாணம் செய்கிறேன். அமெரிக்காவுக்குப் போகும் போதும் கப்பலில் கடைசி வகுப்பிலேயே நான் போவேன்.

நாராயண ஹேமசந்திரரின் எளிய வாழ்க்கை அவருக்கே உரியது. அந்த எளிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் இருந்தது அவருடைய கபடமற்ற தன்மையும். கர்வம் என்பதே அவரிடம் கொஞ்சமேனும் இல்லை. ஆனால், நூலாசிரியர் என்பதில் மாத்திரம் தம்முடைய திறமையைப்பற்றிக் கொஞ்சம் அதிகப்படியாகவே அவர் எண்ணிக்கொண்டிருந்தார். நாங்கள் தினந்தோறும் சந்திப்போம். எங்கள் இருவருடைய எண்ணங்களும். செயல்களும் அநேக விஷயங்களில் ஒரேமாதிரி இருந்தன. நாங்கள் இருவரும் சேர்ந்து, மத்தியான வேளைகளில் சாப்பிடுவோம். வாரத்திற்கு 17 ஷில்லிங் செலவில் வாழ்ந்து நானே சமைத்துக்கொண்ட சமயம் அது. சில சமயங்களில் அவர் இருந்த இடத்திற்கு நான் போவேன். சில சமயங்களில் அவர் நான் இருந்த இடத்திற்கு வருவார். ஆங்கில தோரணையில் நான் சமையல் செய்துவந்தேன். இந்திய முறைச் சமையல் தவிர வேறு எதுவுமே அவருக்குப் பிடிக்காது. பருப்பு இல்லாமல் அவருக்குச் சரிப்படாது. காரட் முதலியவைகளைக் கொண்டு நான் சூப் தயாரிப்பேன். எனக்கு இப்படியும் ருசி கெட்டுப் போய்விட்டதே என்று அவர் பரிதாபப்படுவார். ஒருநாள் இந்தியக் காராமணியை எங்கோ தேடிப்பிடித்துச் சமைத்து அதைக் கொண்டு வந்தார். நான் மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டேன். அதிலிருந்து ஒருவருக்கொருவர் கொடுப்பதும் வாங்கிக் கொள்ளுவதுமான முறை ஆரம்பமாயிற்று. நான் சமைத்ததை அவருக்குக் கொண்டு போய் கொடுப்பேன், அவர் சமைத்ததை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்.

அச்சமயத்தில் கார்டினல் மானிங்கின் பெயர் எங்கும் பிரசித்தமாக இருந்தது. ஜான் பர்ன்ஸ், கார்டினல் மானிங் ஆகிய இருவரின் முயற்சியினால் துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் சீக்கிரத்தில் முடிவுற்றது. கார்டினலின் எளிய வாழ்க்கையைக் குறித்து டிஸ்ரேலி பாராட்டிக் கூறியிருக்கிறார் என்று நாராயண ஹேமசந்திரரிடம் சொன்னேன். ஞஅப்படியானால் அந்த முனிவரை நான் பார்க்க வேண்டும் என்றார்ஞ அவர். அவரோ மிகப் பெரிய மனிதர். அப்படியிருக்க அவரை எப்படிப் பார்க்க முடியும் என்று எதிர் பார்க்கிறீர்கள் ? என்றேன்.

ஏன் பார்க்க முடியாது ? எப்படிப் பார்ப்பது என்பது எனக்குத் தெரியும். எனக்காக என் பெயரில் அவருக்கு நீங்கள் எழுத வேண்டும். நான் ஒரு நூலாசிரியர் என்றும், அவருடைய ஜீவகாருண்ய சேவைகளுக்காக அவரை நேரில் கண்டு வாழ்த்துக்கூற விரும்புகிறேன் என்று எழுதுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாததனால் எனக்கு மொழிபெயர்ப்பாளராக உங்களையும் உடன் அழைத்து வரவேண்டியிருக்கிறது என்றும் எழுதுங்கள் என்றார்.

அப்படியே நான் கடிதம் எழுதினேன். இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் சந்திப்பதற்கு நேரத்தைக் குறிப்பிட்டு, கார்டினல் மானிங்கிடமிருந்து கடிதம் வந்தது. ஆகவே, நாங்கள் இருவரும் கார்டினலிடம் போனோம். யாரையாவது பார்க்கப் போகும்போது உடுத்துக் கொள்ளும் சம்பிரதாய உடையை அணிந்துகொண்டு நான் போனேன். ஆனால், நாராயண ஹேமசந்திரரோ, எப்பொழுதும்போல் அதே சட்டையையும் கால் சட்டையையும் போட்டுக் கொண்டே வந்தார். இதை குறித்து நான் கேலிசெய்த போது அவர் கூறியதாவது.

நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள் மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை அவருடைய உள்ளத்தைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். கார்டினலின் மாளிகைக்குள் சென்றோம். நாங்கள் போய் உட்கார்ந்ததும், மெலிந்த உயரமான கிழக் கனவான் ஒருவர் வந்து எங்களுடன் கை குலுக்கினார். நாராயண ஹேமசந்திரர் பின் வருமாறு தமது வாழ்த்தைத் கூறினார். உங்கள் நேரத்தை அதிகம் வீணாக்க நான் விரும்பவில்லை. உங்கள் பெருமையைக் குறித்து நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். வேலை நிறுத்தம் செய்திருந்தவர்களுக்கு நீங்கள் செய்த சிறந்த சேவைக்காக உங்களிடம் வந்து, நன்றி தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உலகத்திலுள்ள மகான்களையெல்லாம் தரிசிப்பது என் வழக்கம். இதனாலேயே தங்களுக்கு நான் இந்தத் தொந்தரவைக் கொடுத்துவிட்டேன்.

குஜராத்தியில் அவர் சொன்னதை நான் மேற்கண்டவாறு மொழிபெயர்த்துச் சொன்னேன். ஞநீங்கள் வந்ததற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். லண்டன் வாழ்க்கை உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றும், இங்குள்ள மக்களுடன் நீங்கள் பழகுவீர்கள் என்றும் நம்புகிறேன். ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவானாகஞ என்றார் கார்டினல். இவ்வாறு கூறிவிட்டுக் கார்டினல் எழுந்து நின்று எங்களுக்கு விடையளித்தார். ஒரு நாள் நாராயண ஹேமசந்திரர் வேட்டி கட்டி, ஒரு சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு, என் இருப்பிடத்திற்கு வந்தார். அச்சமயம் இருந்த வீட்டு அம்மாள் புதியவர். நாராயண ஹேமசந்திரரை அவருக்குத் தெரியாது. இந்த நிலையில் அவர்தான் ஹேமசந்திரருக்குக் கதவைத் திறந்து விட்டார். அவர் பயந்து போய், என்னிடம் ஓடோடி வந்து, ஞபைத்தியம்போல் இருக்கும் ஒருவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் * என்றார். நான் கதவண்டை போனேன். நாராயண ஹேமசந்திரரைப் பார்த்து, வியப்படைந்தேன். அவருடைய கோலத்தைக் கண்டு திடுக்கிட்டும் போனேன். ஆனால் அவருடைய முகத்திலோ வழக்கமாக இருக்கும் புன்னகையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

தெருவிலுள்ள சிறுவர்கள் உங்களைத் தொடர்ந்து வந்து உங்கள் துணிகளைக் கிழிக்க முற்படவில்லையா ? என்று அவரைக் கேட்டேன். ஆம் குழந்தைகள் என் பின்னால் ஓடி வந்தனர். அவர்களை நான் பொருட்படுத்தவில்லை. பிறகு சும்மா இருந்துவிட்டார்கள் என்றார். நாராயண ஹேமசந்திரர், லண்டனில் சில மாதங்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு பாரிஸூக்குச் சென்றார். பிரெஞ்சு மொழி படிக்கவும், பிரெஞ்சு நூல்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார். அவருடைய மொழி பெயர்ப்பைத் திருத்துவதற்குப் போதுமான அளவுக்கு எனக்குப் பிரெஞ்சு மொழி தெரியும். ஆகவே, அதைப் படித்துப் பார்க்க அவர் என்னிடம் கொடுத்தார். அது சாராம்சமேயன்றி மொழிபெயர்ப்பன்று.

கடைசியாக அமெரிக்கா போவது என்ற தமது உறுதியையும் அவர் நிறைவேற்றி விட்டார். அதிகக் கஷ்டப்பட்டே கப்பலில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் அவருக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நாள் வேட்டியும் உள் சட்டையும் மாத்திரம் அணிந்து கொண்டு, அவர் வெளியே வந்து விடவே, ஆபாசமான உடை அணிந்திருந்த குற்றத்திற்காக அவரைக் கைது செய்து வழக்குத் தொடுத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலையடைந்தார் என்றே எனக்கு ஞாபகம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum