தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம்

Go down

காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம் Empty காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம்

Post  meenu Thu Mar 21, 2013 1:26 pm

ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றாலத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கி விடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது.

இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கவில்லை.

டெல்டா மாவட்டத்தில் குறுவைப் பயிர் கேள்விக்குறியாகிவிட்டது.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில், 15 தடவை மட்டுமே மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாள் திறக்கப்பட்டது.

அதுகூட கடுமையான வெள்ளப் பெருக்கால்தான் உபரி தண்ணீரால் திறக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்ற சமயங்களில் காலதாமதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையைத் திறக்கக் குறைந்த அளவு 75 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது.

21 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்புதான் உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

தமிழகம், காவிரியில் 740 டி.எம்.சி.யில் 562 டி.எம்.சி.யை உரிமை கொண்டாடியது. இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று 1991 ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது, நடுவர்மன்றம்.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடக மாநிலம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டது. எந்தெந்த மாதங்களில் எவ்வளவு டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மாதவாரியாக எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிய நடுவர் மன்றத்தினுடைய ஆணை: ஜூன் 10.16 டி.எம்.சி; ஜூலை 42.76; ஆகஸ்ட் 54.72; செப்டம்பர் 29.36; அக்டோபர் 30.17; நவம்பர் 16.05; டிசம்பர் 10.37; ஜனவரி 02.51; பிப்ரவரி 02.17; மார்ச் 02.40; ஏப்ரல் 02.32; மே 2.01; மொத்தம் 205 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் கர்நாடகம் மதிக்கவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் சமஷ்டி அமைப்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டது கர்நாடகம்

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது 11 டி.எம்.சி.நீரைத் தமிழகத்திற்கு திறந்துவிட நடுவர் மன்றம் ஆணையிட்டும் அந்த ஆணையை நிறைவேற்றாமல், தேவ கௌடாவுக்கு நெருங்கியவரும், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கே.அலெக் என்பவரின் தலைமையிலான குழு நடுவர் மன்ற உத்தரவைச் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் 11 டி.எம்.சி. அளிக்க வேண்டியதில்லை; 6 டி.எம்.சி. அளித்தால் போதும் என்று தமிழகத்தின் நலனை மறுக்கும் வகையில் நரசிம்மராவ் அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்.

பிற்காலத்தில் தேவ கௌடா பிரதமராக இருந்தபொழுது இவருக்கு மத்திய அரசின் திட்ட அமலாக்க அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் விடவில்லை என்பது மட்டுமல்ல, 11 லட்சத்து 10,000 ஏக்கருக்கு மேல் தொடர்ந்து புதிய பாசன நிலங்களின் பரப்பைக் கர்நாடகம் விரிவு படுத்தியது.சுமார் 20 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன நிலங்களைக் கூடுதலாக்கியது. இது நடுவர் மன்ற உத்தரவை மீறிய நடவடிக்கையாகும்.

17 ஆண்டுகளுக்குப்பின் 568 அமர்வுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். இறுதித் தீர்ப்பு தமிழர்களை ஏமாற்றியும், வஞ்சித்தும் விட்டது. 419 டி.எம்.சி. தண்ணீர் எனக்கூறுவது, ஏமாற்றுகின்ற பாணியாகத் தெரிகிறது. இடைக்கால நிவாரணமாகக் கொடுக்கப்பட்ட 205 டி.எம்.சி.க்கு சுமார் இரண்டு மடங்காக, அதாவது 450 டி.எம்.சி.யாவது நமக்கு கிடைத்திருக்க வேண்டும்.

இந்த நீரையும் பிலிகுண்டிலிருந்து கணக்கிடுவது நியாயமற்றது. மேட்டூர் அணையிலிருந்துதான் கணக்கிடப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பின்படி காவிரியின் மொத்த நீர் அளவு 740 டி.எம்.சி.யில் தமிழகம் கேட்டதோ 562 டி.எம்.சி. ஆனால், கிடைத்தது என்னவோ 419 டி.எம்.சி., கர்நாடகம் கேட்டது 465 டி.எம்.சி. ஆனால், கிடைத்தது 270 டி.எம்.சி., கேரளம் கேட்டது 99.8 டி.எம்.சி. கிடைத்தது 30 டி.எம்.சி., புதுச்சேரி கேட்டது 6.2 டி.எம்.சி. கிடைத்தது 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்பு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. அது மட்டுமல்ல.

இதுபோன்ற தீர்ப்புகள், உத்தரவுகள், பேச்சுவார்த்தைகள் என வாய்ச்சொல்லிலும் எழுத்துகளிலும் மட்டும் இருந்தால் போதாது. அது உயிரோட்டமாக நலன் பயக்கும் செயல்பாடுகளாக மாற வேண்டும்.

28.5.2012 அன்று தில்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேசிக்கொண்டு இருந்தபோது,விவாதத்தின்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி இரு தரப்பும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மத்திய அரசின் பிரதிநிதிகள் வெளியேறியது விசித்திரமாக இருக்கிறது.

எப்பொழுதும் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்குத் திருப்தி தராமல் கவலையைத் தருகிற முடிவுகளாகத்தான் இதுவரை நடந்துள்ளன. உலக வெப்பமடைதல், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள், பருவகால மாற்றங்கள் எதிர்பாராத கேடுகளை உருவாக்கி வருகின்றன. கடும் வறட்சி, ஒரு சில நாட்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்து வரலாறு காணாத வெள்ளச் சேதம் போன்றவை அதிகரித்து வருகின்றன. இச்சூழல்களை மனதில் கொண்டு நதிநீர் பிரச்னைகளை ஆய்வு செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண்மையை இன்னும் அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

மழைக்காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைக் காவிரி கொள்ளிடத்தில் பல இடங்களில் கதவணைகள் கட்டித் தேக்க முடியும் என்பதைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணைக்கு கீழ் 1. செக்கனூர், 2. நெடுஞ்சிப்பேட்டை, 3. கோனேரிப்பட்டி, 4. ஊராட்சிக்கோட்டை ஆகிய இடங்களில் கதவணைகள், மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ளன. இக்கதவணைகளில் ஓரளவு தண்ணீரைத் தேக்க முடியும்.இவை ஒவ்வொன்றிலிருந்தும் 20 முதல் 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

இதைப் போன்று அக்ரஹாரம், சமயசங்கிலி, பாரூர், ஊஞ்சலூர், மரவாபாளையம், நன்னியூர், மாயலூர், லாலாபேட்டை, பேட்டைவாய்த்தலை, திருப்பராயத்துறை, முத்தரசநல்லூர், வெங்கூர் ஆகிய இடங்களில் மேலும் 12 கதவணைகள் கட்ட முடியும். ஆக, மொத்தத்தில் காவிரியிலும், கொள்ளிடத்திலும் சேர்த்து மொத்தமாக 23 கதவணைகளைக் கட்டி உபரி நீரைத் தேக்க முடியும்.இந்த நீரிலிருந்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக உயர்த்தலாம்.

கதவணைகள் ஒவ்வொன்றும் பாலமாக இருந்தால் காவிரியின் இருகரையிலும் உள்ள மக்களின் போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும்.

இன்றைக்குக் கர்நாடகத்தில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் பாதுகாப்பில்லாத பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்காலத் தீர்ப்பு 1991 இல் வந்தபோது, தமிழர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். கன்னட வெறியர்கள் 1991 இல் ஏற்பட்ட கலவரத்தில் தமிழர்களுடைய வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. கிட்டத்தட்ட ரூ.300 கோடி மதிப்பிலான தமிழர்களுடைய சொத்து அழிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் உடுப்பி உணவகங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்களைக் கன்னட சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குக் காவிரிப் பிரச்னையால் எந்த வம்பும் பிரச்னையும் தமிழ் மக்களால் ஏற்பட்டதில்லை. ஆனால், கர்நாடகத்தில் காவிரிப் பிரச்னை வந்தால் உடனே தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். காவிரிப் பிரச்னையிலும், முல்லைப் பெரியாற்றிலும், பாலாறிலும் ஏனைய அண்டை மாநில நதிநீர்ப் பிரச்னைகளிலும் தமிழகத்தின் உரிமை பறிபோகின்றது. ஆனால், இந்தப் பிரச்னைகளில் கேரளமானாலும், கர்நாடகமானாலும், ஆந்திரமானாலும் நியாயமான தீர்வுக்கு இடங்கொடுப்பதில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

உலக அளவில் ஹெல்சின் கோட்பாட்டின்படி நதிநீர்ப் பிரச்னைகள் தீர்வு காணப்பட்டுள்ளது. வெவ்வேறு நாடுகளில் நிலவும் நதிநீர்ப் பிரச்னைகளை மேசையின் இருபுறமும் உட்கார்ந்து பேசித் தீர்வு கண்டுள்ளனர். பன்னாட்டு அளவில் ஆப்பிரிக்காவில் நைல் நதி, தென் கிழக்கு ஆசியாவில் பாயும் மிகாங் நதிப் பிரச்னை குறித்து தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஐக்கிய நாடுகள் பேசித் தீர்த்தன. அமெரிக்காவில் டெலிவெர், ஆஸ்திரியாவுக்கும் துருக்கிக்கும் டான்பு நதி, ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் ரைன் நதி, ஆப்பிரிக்காவில் நைஜர், செனகல் நதிநீர்ப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தையால் தீர்வு காணப்பட்டன. கங்கை நதிப் பிரச்னை இந்தியாவுக்குத் தலைவலியாக இருந்தது. நேபாளத்துடனும் வங்கதேசத்துடனும் பேசி சமரசம் ஏற்பட்டது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஜீனாப் நதி, ஜீலம் நதிப் பிரச்னையிலும் மற்றும் கிஷன் கங்கா பிரச்னையிலும் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. அதேபோன்று இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் நாடுகளுக்கிடையே பாயும் ஜோர்டன் நதிப் பிரச்னை, துருக்கி, சிரியா, ஈராக் வழியாகப் பாயும் யுப்ரடீஸ் பிரச்னை, ஆப்பிரிக்காவில் அஸ்வான் நதிப் பிரச்னை, கொலம்பியாவில் கொலம்பியா நதிநீர்ப் பிரச்னை எனப் பல நதிநீர்ப் பிரச்னைகள் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டது.

ஆனால், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர்ப் பிரச்னைகள் தீர்க்கப்பட முடியவில்லை என்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. குறிப்பாக, தமிழகம் தொடர்பான நதிநீர்ப் பிரச்னைகளில் எல்லாம் மத்திய அரசு நடுநிலையுடன் பிரச்னையை அணுக மறுப்பதாலும், அண்டை மாநிலங்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சற்றும் இல்லாமல், பிரச்னையை அரசியலாக்கிக் குளிர்காய்வதாலும் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தொடர்கின்றன.

காவிரி வெறும் தண்ணீர்ப் பிரச்னை மட்டுமல்ல; தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், மரபு ரீதியாக கலந்து பின்னிப் பிணைந்தது. தமிழகத்துக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால், நதிநீர்வாரியச் சட்டத்தைக் காவிரிப் பிரச்னையில் நடைமுறைப்படுத்தி, அதன் அடிப்படையில் காவிரி நதிநீர் வாரியம் அமைத்தால், எடுக்கின்ற நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக அமைந்துவிடும். ஆனால், இந்தச் சட்டத்தைப் பற்றி இதுவரை பொறுப்பில் இருந்தவர்கள் யாரும் பேசவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

“நடந்தாய் வாழி காவிரி’ என்கிற சிலப்பதிகார வரியைக் கொண்டாடுகிறோம். அந்தக் காவிரித் தாய்க்கே சோதனை. யாரிடம் முறையிடுவது?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum