தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு

Go down

மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு Empty மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு

Post  meenu Mon Mar 11, 2013 5:39 pm

கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை. அவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை. சில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை.

தமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும் இல்லாத ஒரு நிலை.

இந்த நிலையில் இருப்பவர்களின் மூளை சிந்திக்கும் திறனற்றது என்று தான் இதுவரை மருத்துவ உலகம் நம்பி வந்தது. ஆனால் அப்படிப்பட்டவர்களின் மூளை சிந்திக்கிறது, செயற்படுகிறது என்பதுடன், தான் இருக்கும் சூழலை அந்த மூளை புரிந்துகொள்கிறது, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது பதிலும் அளிக்கிறது என்கிற அதிசய கண்டுபிடிப்பு ஒன்றை பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவ பேராசிரியர் அட்ரியன் ஓவென் நிரூபித்திருக்கிறார்.

நரம்பியல் துறையில் மைல்கல்

மருத்துவ உலகில், குறிப்பாக நரம்பியல் துறையில் இது ஒரு மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. நரம்பியல் துறையின் மருத்துவ புத்தகங்கள் மாற்றி எழுதப்படவேண்டிய அளவுக்கு இது முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ஸ்காட் ரட்லி என்கிற கேனடா நாட்டைச்சேர்ந்தவர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கியபோது அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலகாலம் கோமா நிலையில் இருந்தார். பின்னர் அவர் கோமா நிலையிலிருந்து மீண்டாலும், அவர் நடைபிணமாகவே வாழ்ந்து வந்தார். அவரது கண்ணிமைகள் திறந்திருந்தாலும் அவரால் பார்க்கமுடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது அவரது விரல்கள் அசைவதாகவும், அவர் தனது கண்களை அசைத்து தம்மிடம் பேச முயல்வதாகவும் அவரது பெற்றோர் கூறினாலும் மருத்துவர்கள் அதை நம்பவில்லை. மருத்துவ பரிசோதனைகளிலும் அவரது மூளை சிந்திப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது.

இந்த பின்னணியில் பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் மருத்துவ பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இவரை பரிசோதித்தார். அவர் நடத்திய மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் ஸ்காட் ரட்லியின் மூளை செயலற்றதல்ல என்றும், சிந்திக்கும் திறன் கொண்ட, கேட்கும் கேள்விகளை உள்வாங்கி அதற்கு பதிலளிக்கும் திறன்கொண்டது என்றும் பேராசிரியர் நிரூபித்திருக்கிறார்.

இந்த பரிசோதனையின் ஒருபகுதியாக, ரட்லியிடம் அவருக்கு தற்போது உடலில் வலி இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று பதில் கூறும் அவரது மூளைச்செயற்பாட்டை ஸ்கேன் காட்டியது. இது மிக முக்கிய கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கும் பேராசிரியர் ஓவன், இனிமேல் இந்த நிலையில் இருக்கும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு கொடுப்பது, உடை மாற்றுவது, அவர்களை குளிப்பாட்டுவது என்று அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார்.

நினைவாற்றலும் தொடர்கிறது

இதே போல இத்தகையவர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, சேதமடைந்த மூளையின் நினைவாற்றலும் தொடர்வதையும் இன்னொரு நோயாளியின் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

கேனடாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிரஹாம் என்கிற நோயாளியின் மூளை பாதிக்கப்பட்டு அவர் நடைபிணமான பிறகு அவரது சகோதரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை அவரது மூளை நினைவில் வைத்திருந்தது என்பதையும் அவரிடம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

இந்த பரிசோதனைகள் எல்லாமே, வெஜிடேடிவ் ஸ்டேடஸ் என்கிற நடைபிண நிலையில் இருக்கும் மனிதர்களின் மூளை சிந்திக்கும் திறனுடன் இருப்பதை நிரூபிப்பதாக தெரிவித்திருக்கும் பேராசிரியர் ஓவென், இந்த பரிசோதனை முடிவுகள் இத்தகைய நிலையில் இருக்க நேரும் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதுடன் அவர்களை பராமரிக்க நேரும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் நம்புகிறார்.

உடல் நடைபிணமாக இருக்க நேர்ந்தாலும் அவர்களின் மூளையின் சிந்திக்கும் செயற்படும் திறன் அவர்களையும் வாழ வைக்க உதவும் என்பதே அவரது நம்பிக்கை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum