தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்திகை தீபத் திருநாள்

Go down

கார்த்திகை தீபத் திருநாள் Empty கார்த்திகை தீபத் திருநாள்

Post  meenu Fri Mar 08, 2013 6:05 pm

கார்த்திகைத் தீபத் திருவிழா பண்டைக் காலந்தொட்டு நம்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர், ‘கார்த்திகை திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு’ என்று கார்த்திகைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். ‘கார் நாற்பது’ என்ற நூலிலும் கார்த்திகை தீபம் பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ‘தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்று கார்த்திகை விளக்கு பற்றி பாடி மகிழ்கிறார்.
தமிழர்களிடையே வழங்கும் பழமொழிகளிலும் கார்த்திகை தீபம் ஒளி பரப்புகிறது. ‘குன்றில் இட்ட விளக்குபோல்’ என்று சாதாரணமாகத் தமிழ் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. திருவண்ணாமலையில் ஏற்றி வைக்கும் ஜோதி சொரூபமான மகாதீப தரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பழமொழியாக இருக்கலாம் என்பார்கள். ‘மலை விளக்கு’ என்பதும் அண்ணாமலைக் கார்த்திகைத் தீபத்தைக் குறித்தே.

சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் ஜோதிப் பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்து மலையாய் குளிர்ந்த நாளே கார்த்திகை பௌர்ணமி தினம். எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பர். இந்நாளில் அன்னாபிஷேகம் செய்வது மிக விசேஷம். இந்நாளில் ஈசனின் பன்னிரு ஜோதிர் லிங்க வடிவங்களை தரிசிப்பது மகத்தான பலன் தரும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டிய கருத்தை வலியுறுத்தி சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி தேவிக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார். இந்நாளில் லிங்காஷ்டகம் சொல்வதும் கேட்பதும் தீராத வினை தீர்த்து நீங்காத செல்வமும் நிலைத்த ஆயுளும் தரும்.

கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியில் (பிருந்தாவன துவாதசி) துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசி தளத்திற்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசி மணிமாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசி பூஜை நடத்துவதும் சிறப்பானதே. இதனால் லட்சுமி தேவி இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள். இந்நாளில் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.

இந்த கார்த்திகைத் திருநாளில், மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை இதழ்களால் அர்ச்சித்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூடப் பெறலாம். இதே நாளில், பெருமாள் கோயிலில் விஷ்ணு சந்நதிக்கு எதிரே அமர்ந்துகொண்டு பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் நம்மை வந்து சேரும். கார்த்திகை மாத சுத்த பஞ்சமி திருநாள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய தினமாகும். இந்நாளில் காவிரியாற்றிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்கின்றன சாஸ்திரங்கள்.

நவகிரக நாயகர்கள் பிரம்மாவின் சொற்படி கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரு வாரங்கள் நோன்பு நோற்று சாப விமோசனம் பெற்றனராம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு மட்டுமாவது உணவு உண்ணாமல் உபவாசமிருந்து, சிவாலயம் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் சிவசக்தியின் பேரருளால் நீங்கி நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெருகும். இம்மாதத்தில் விளக்கு தானம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை சோம வார (திங்கட்கிழமை) விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல மேன்மைகளையும் பெறுவர். இவ்விரதத்தை 12 வருடங்களாகக் கடைப்பிடித்து நாரதர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

திருவிசநல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்காதேவி பிராவகித்தது கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை உள்ளதால் ஏராளமானோர் இதில் நீராடுவர். ‘பாஞ்ச ராத்ர தீபம்’ என்ற பெயரால் வைணவ ஆலயங்களில் தீபத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாள் விழாவின்போது கோயிலுக்கு முன் பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பார்கள். ஜோதி வடிவாய் தோன்றிய சொக்க நாதனை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை, பௌர்ணமி விழாவில் ஸ்ரீரங்கம் ஐந்தாவது வீதியிலிருந்து ஆன நாடான் வீதிக்குச் செல்லும் வழியில் தெற்குக் கோபுர வாசல் அருகே பெருமாள் எழுந்தருளுவார்.

அப்போது அவர் எதிரே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது அரையர்கள் பாசுரங்கள் பாடி வழிபடுபவர். அப்போது மார்கழி திருநாள் விவரத்தை கடிதமாக எழுதி (ஸ்ரீமுகம்) பெருமாளிடம் சமர்ப்பிப்பர். திருப்பதியில் வெங்கடேசப் பெருமாள் வீதி உலா வந்து சிறப்பு மண்டபத்தில் அமர்ந்து ஆராதனைகளையும் நிவேதனங்களையும் ஏற்றுக்கொண்டு பின் கோயிலுக்கு எதிரே நுழைவாயிலுக்கு அருகில் சொக்கப்பனை கொளுத்துவதைக் காண்பார். காஞ்சிபுரம் தீபப் பிரகாசர் கோயிலில் மகா விஷ்ணு ஜோதி வடிவில் காட்சி தருகிறார். விளக்கொளிப் பெருமாள் என்ற திருநாமம் கொண்ட இவரது கோயிலில் தீபங்கள் ஏற்றி கார்த்திகையைக் கொண்டாடுகின்றனர்.

விராலி மலை முருகன் கோயிலில் உற்சவர்கள் வீதி உலா வரும்போது நாரதரும் தனி உற்சவராகப் பவனி வருகிறார். தன்னைப் பிரிந்த மகாலட்சுமியுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்ற தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள ‘குப்த கங்கை’ தீர்த்தத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, கீழ்க்கரையில் எழுந்தருளி, ஆசி வழங்குகின்றனர். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், மனச்சஞ்சலம் எல்லாம் விலகும். போதைப் பொருள் பயன்படுத்தும் வழக்கமும் ஒழியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum