தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் பாவமும் தோஷமும் போக்கும் பஞ்சவர்ணேஸ்வரர்

Go down

பாலியல் பாவமும் தோஷமும் போக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் Empty பாலியல் பாவமும் தோஷமும் போக்கும் பஞ்சவர்ணேஸ்வரர்

Post  meenu Fri Mar 08, 2013 1:14 pm


ரிஷிகளில் மிகவும் சிறந்த விற்பன்னர் என தேவர்களாலும் போற்றப்படும் உரோம மகரிஷி, ஒரு முறை பாண்டவர்கள் தங்கி இருந்த காட்டுப் பகுதிக்கு வந்தார். அவரைக் கண்ட பாண்டவர்களின் தாயார் குந்தி மாதா, ‘எனது மக்கள் படும் துயரங்களைத் துடைக்கும் உபாயம் ஓதுங்கள்’ என அவரது திருவடியில் விழுந்து அழுது மன்றாடினார். குந்தி தேவி தனது திருமணத்திற்கு முன்பே கருவுற்று, கர்ணன் என்ற பிள்ளையை பெற்று, அவமானம் வருமே என அஞ்சி ஆற்றில் அப்பிள்ளையை விட்ட தோஷம், அவள் வயிற்றில் பிறந்த மற்றவர்களையும் வாட்டுகிறது. திருமண வைபவம் வரும் முன் கருவுறுதல் என்பது மிக பெரிய பாவமும், தோஷமும் ஆகும் என்பதை விளக்கி, தஞ்சையை அடுத்த நல்லூர் தலத்தில் உள்ள நின்ற கல்யாண சுந்தரேஸ்வர பெருமானை பூஜிக்குமாறு உபதேசித்தருளினர்.

“மாங்கல்ய மேந்துமுன் மங்கையொருத்தி
காமச் சுகங் காண் பாளாயின் குலச்
சேத முண்டாம்- பேணி பெற்ற பிள்ளையர்
எத்துணை வித்தை கற்று
அறநெறி நிற்பினும் வாட்டும் விதியதனை
விடுக்க சுந்தரேஸ்வரர் கல்யாண
பேரெடுத்து நிற்க ஆராதித்து கடைத்தேறு”

என்றார் உரோம மகரிஷி.

தாலி கழுத்தில் ஏறுமுன் காம சுகம்

எவ்வகையாலும் அனுபவித்தல் கொடிய தோஷம் என்பதை உணர வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஒழுக்கம் உயிரினும் உயர்ந்தது என உணர்ந்த குந்தி மாதா திருநல்லூர் உறை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலை தன் பாவமும், தோஷமும் நீங்க வந்து அடைந்தார். தோஷம் போக வேண்டுமெனில் நீராட வேண்டும் என்றுணர்ந்த குந்திமாதா, உரோம மகரிஷியை தியானிக்க, அவரும் எழுந்தருளி, ஏழுகடல்களில் ஒரே நேரத்தில் நீராடல், நற்பலனைத் தரும் என்றார். இது எங்ஙனம் சாத்தியம் என அன்னை மனச்சோர்வு அடைய, பதஞ்சலி எனும் சித்தர், ஏழு கடல்களையும் ஒன்றாக்கி, அங்கு ஒரு நீர் நிலையை தோற்றுவித்தார். இதுவே ஏழ்கடல் தீர்த்த மென்றானது.

“விந்திய மாமலை கீழே விளங்கு
நீராடல் பொய்கை பதஞ்சலி
யெம்மாலாக்கப் பெற்றதே
பாண்டு தம் குலமுய்ய, அறமுய்ய
கண்ணனவதாரமுய்ய படைத்த கடல்
ஏழு தீர்த்தந் தன்னில் குந்திதேவி
நீராடி, பிரானைப் பூஜித்து பாப
தோஷமுந் நீங்கப் பெற்றனளே”

-என்று போற்றுகின்றார் குதம்பை சித்தர். விந்திய மலைக்கு தென்புறம் உள்ள பல புண்ணிய தீர்த்தங்களுள் மிகவும் அற்புதமானதும், தேவர்கள் கொண்டாடுவதுமே இந்த ஏழுகடல் தீர்த்தம். அகல்யா போன்ற ரிஷி பத்தினிகள் நீராடிய பொய்கை இது என்கின்றார் கொங்கணச் சித்தர். இதில் நீராடி, சிவபிரானை குந்திமாதா பூஜித்த அழகு சிற்பம், இன்னும் இத்திருக்கோயிலில் இருப்பதைக் காணலாம். யார் ஒருவர் திருமணம் முன் சிறு தவறு செய்திருந்தாலும், திருந்தி இனி இது போல் செய்ய மாட்டேன் என சபதம் ஏந்தி, இத் திருக்குளத்தில் நீராடி, கல்யாண சுந்தரேஸ்வரரை தொழுதால் கண்டிப்பாக பெரிய பாவதோஷங்களிலிருந்து விடுபட்டு, சிறப்பாக வாழலாம் என்பது பலருடைய அனுபவம்.

(குந்தி தேவிக்கு, பின்னாளில் பஞ்ச பாண்டவர்களாக ஐந்து பிள்ளைகள் பிறக்கப்போகிறார்கள் என்பதன் சாட்சியாக இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரராகவும் விளங்குகிறார். ஒவ்வொரு நாளும், இரண்டரை மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு வண்ணம் என்று பல வண்ணம் காட்டும் சிவலிங்கத் திருமேனி இந்த பஞ்சவர்ணேஸ்வரருடையது. குந்தி தேவிக்கு இங்கே ஒரு சிற்பமும் உண்டு.) சிவபெருமான்-பார்வதி பிராட்டியார் திருமண வைபோகம், ஒரு முறை திருகயிலாயத்தில் நடைபெற, எல்லா தேவர்கள், கணங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வடபுறக் கயிலாயத்தில் குவிய, பூமி பாரம் வடபுறம் சாய, புவியை சமன் செய்ய அகஸ்திய பெருமான் தென்திசை வந்தார்.

அவர் நேரே ஏழுகடல் தீர்த்தத்தில் நீராடி, சிவ-பார்வதி திருமண வைபோகத்தை காணாது போக நேரிட்டதே என நொந்து ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பிறகு கோயிலின் பிரதான லிங்கத்தின் பின்புறம் இதனை ஸ்தாபித்தார். இதில் என்ன விசேஷம் என்றால், ஆவுடையார் ஒன்று, லிங்கம் இரண்டு! இது போன்ற அமைப்பு இம்மண்ணில் தோன்றியது முதலில் இங்குதான். அகத்திய பெருமான் பூசை முடிக்கையில், கயிலாய திருமணக் காட்சியை இங்கு இருந்தவாறே எந்த இடர்பாடும், இடிபாடுமின்றி தரிசனம் செய்தார். சிவபெருமானும்-பார்வதி தேவியும் இந்தக் கோயிலில் நேரில் திருமணக் கோலத்தில் அகஸ்தியர் முன் தோன்றினர். இன்றும் சிவன்-பார்வதி அமர்ந்த கோலத்தில் கருவறையில் காட்சி தருகின்றனர்.

“சிவ சக்தி மணக் கோலங் கண்டார்
ஆராதனை செய்தார் தம் மக்கள்
மணங்கழியாது அகலார் வையம்
விட்டே-பிணி வகை
யாதாயினும் தொல்லையின்றி யகலுமன்றோ”

-எனப் பேசுகின்றார் காளஞ்சி நாதர் எனும் சித்தர். இந்த கல்யாண சுந்தரேஸ்வரரை ஆராதிப்பவர் தமது குழந்தைகள் திருமணம் முடிந்த பின்னரே தான் சுவர்க்கமடைவரே அல்லால், எவ்வளவு பெரிய கொடு நோய்களாலும் அவரை தீண்டி அழிக்கலாகாது என பேசுகின்றார். இந்த சிவன்-பார்வதி திருமண வைபோகத்தில் பிரம்ம தேவரும், மகா விஷ்ணுவும் கலந்து கொண்டனர். புரோகிதராக பிரம்ம தேவரே நின்று கல்யாண சடங்குகளை கயிலாயத்தில் செய்தார். இதனை அப்படியே அகஸ்தியர் கண்டு ஆராதித்து, இன்புற்றார். இந்த பரவச நிலையை ஒவ்வொரு பக்தருமடைய இன்றும் கருவறையில் பிரம்மன் நின்ற கோலத்தில், திருமணச் சடங்குகளை செய்வது போல காட்சி தருகின்றார். உலகளந்த பிரான், மகா விஷ்ணுவும் காட்சி தருகின்றார்.

பிரம்மா-விஷ்ணு-சிவன் என்ற மும்மூர்த்திகளும் காட்சி தரும் கருவறை கொண்டது அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில். சிவபெருமானின் இடப்புறம் இருக்கும் மகாவிஷ்ணு சகல யோக, க்ஷேமங்களையும் பக்தருக்கு தர வல்லவர். பிரம்மனுக்கு தனி கோயில் இல்லை என்று பேசிய சிவபெருமானின் கோயிலிலேயே இடங் கொடுத்து கோயில் தந்த வள்ளல் உறையும் இக் கோயிலில் வைஷ்ணவ சம்பிரதாயப்படி சடாரி சாத்தி, தீர்த்தம் தரப்படுவதும் அகஸ்தியர் செய்த ஏற்பாடுதான்.

“தோஷ மகலும் சத்தியமே
காமத்தால் வந்த தோஷ மகலுந்
திண்ணமே”

-என்ற அகத்தியர்,

“அயனுக்கு மாங்கு மாலுக்கும்
தங்க இடமது தந்த சுந்தரன்
தீர்த்தனிவன் ஏழு கடல் நீரை
அடக்கி பக்தர் குறை போக்குவன்
கலியில் தனமுங்காமமுமே
யேற்றங் காணும்- காம தோஷங்
கறுகி தனதான்ய சம்பத்து
கூட்டி கண்டார் வணங்க வாழ்த்தி
வாழ்விப்பன் இக் கல்யாண சுந்தரனே”

என்றும் கூறுகின்றார். காமத்தால் ஏற்படும் பழி, பாவங்களை கழிப்பவர், தனம், தான்யம் போன்ற சம்பத்துக்களை கவுரவத்துடன் தருபவர். இந்த கல்யாண சுந்தரேஸ்வனை தொழுவீர், பெறுவீர் அனைத்து மேன்மைகளையும். இதற்கு பஞ்ச பாண்டவர்களின் வாழ்வே சாட்சி. இத்தலம், கும்பகோணம்-தஞ்சை ரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. வலங்கைமான்-பாபநாசம் சாலையில் பாபநாசத்துக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவு.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum