தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்

Go down

 ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்  Empty ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:06 pm

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு. தற்போது ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி
வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.

நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார்.
‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி. விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். ‘மகாபலி! வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே’ என்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார். மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக்
கொடுத்தார் மகாபலி.

‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார். ‘உலகையை அளக்கும் பரந்தாமனே.
உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் தெருக்கள்தோறும் மக்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ
கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள் நடத்தி உற்சாகம் அடைகிறார்கள். மகாபலிபோல வேடமிட்டு வருபவர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum