தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள்

Go down

கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள் Empty கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள்

Post  ishwarya Sat Feb 16, 2013 4:31 pm

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களைப்பற்றி தெரியும்; அதென்ன கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள். ஆம்! ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஆனந்தநாத சுவாமிகளின் உற்சவ விக்ரகத்தின் கரங்கள் மட்டும் கருமையாக இருக்கின்றன. என்ன விவரம்? ஜனகாபுரி என போற்றப்பட்ட விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் ஆனந்தநாத சுவாமிகள் அவதரித்தார். சிறு வயது முதல் திருமாலின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட அவர், தனது 7 வயது முதல் 21 முறை பாத யாத்திரையாக திருப்பதி சென்று திருவேங்கடமுடையானை தரிசித்தார். ஒவ் வொரு முறை செல்லும்போதும் வழியில் தீர்த்தக் குளமும் மண்டபமும் பக்தர்கள் நலனுக்காகக் கட்டிக் கொடுத்தார்.

இவரது பக்தியில் மகிழ்ந்த பரந் தாமன் திருப்பதியில் உள்ள கோணேஸ்ரீ புஷ்கரணி தீர்த்தக் குளக்கரையில் இருந்த அரச மரத்தடியில் ஸ்ரீதேவி-பூதேவி சகிதமாக, சிறு விக்ரக வடிவில் காட்சி தந்தார். இப்படி தனக்குக் கிடைத்த பரமனுக்கு முறையாக திருவாராதனம் செய்ய வேண்டுமே, தனக்கு அந்த வழிமுறைகள் தெரியாதே என வருந்தினார், ஆனந்தநாத சுவாமிகள். உடனே திருமாலை பிரார்த்திக்க, திருமாலே குருமுகமாய் எழுந்தருளி, திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் மூன்றையும் அருளிச் செய்து, சுவாமிகளுக்கு ஆச்சாரியனாக விளங்கினார்.

ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நீர் வளமிக்க பம்பா நதிக்கரையில் சுவாமிகள் நியமனப் பிரகாரம் வாமன அவதாரம் நிகழ்ந்த இடமாக கருதப்படும் குமளங் காட்டில் சந்நதி ஏற்படுத்தினார். தினந்தோறும் அருகில் உள்ள பம்பா நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து திருவாராதனம் செய்து வந்தார். இக்கோ யில் கைங்கர்யத்திற்காக தன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் வாரி வாரிக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந் தார். பிறகு பெருமாளை நினைத்து, திருப்பணி வேலையில் ஈடுபட்டவர்களுக்கு மண்ணை அள்ளி கொடுக்க, அது அவரவர் செய்த உழைப்பிற்கேற்ற ஊதியமாக, காசுகளாக மாறிவிடும். அவ்வாறு மண்ணை அள்ளி, அள்ளிக் கொடுத்ததால் அவரது கரங்கள் கருமையாயின. அந்தக் கரங்களை இன்றும் சேவித்து மகிழலாம்.

திருக்கோயிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் சந்நதி. அடுத்து பலிபீடம், கொடிமரம். கடந்தால் கருடாழ்வார் சந்நதி. பிராகாரத்தில் அலர்மேல்மங்கைத் தாயார் கிழக்கு நோக்கி அற்புத தரிசனம் தருகிறார். கோபுர வாயிலை அடுத்து உட்பிராகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கடந்து சென்றால் நெடிதுயர்ந்த திருமேனியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவை சாதிக்கிறார். அருகிலேயே ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி, பரம தேசிகர் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார்.
ஆனந்தநாத சுவாமிகளுடன் பேசுவதால் மூலவருக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீரங்கத்தைப் போலவே இங்கும் தெற்கு நோக்கி அற்புத தரிசனம் அளிக்கிறார், பெருமாள்.

நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கல்லால் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் எழுந்தருளி யுள்ளனர். ஆலயத்தை வலம் வரும்போது ஆனந்தநாத சுவாமிகளுக்கு பெருமாள் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்த உபதேச மண்டபத்தை தரிசிக்கலாம். அடுத்து ஆண்டாள் சந்நதியும் பிராகார முடிவில் ஆனந்தநாத சுவாமிகளின் சந்நதியும் உள்ளன. பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளாலும் பெரு மாளை வணங்கிய நிலையில் கருத்த வண்ணமுடைய கைகளோடு உற்சவர் மற்றும் மூலவரின் அற்புத தரிசனம் பெற்று மகிழலாம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருக்குமளம் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் வைகானஸ ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி யில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், புரட்டாசி சனிக்கிழமைகள், திருவோணம் பத்து நாட்கள், பங்குனி உத்திர பத்து நாட்கள் பிரம்மோற்சவம், தேர் புறப்பாடு, தாயாருக்கு கார்த்திகை பஞ்சமி மற்றும் வைகாசி சதய நட்சத்திரத்தன்றும் ஆனந்த நாத சுவாமிகள் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட் டும் 10 நாட்கள் சாற்றுமுறை உற்சவமும் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன. புதுச்சேரி-விழுப்புரம் பாதையில் மதகடிப்பட்டு வந்து, அங்கிருந்து திருக்கனூர் செல்லும் பாதையில் பி.எஸ்.பாளையம் அடைந்து, அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருக்குமளம் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum