தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாமன்னராய் வாழவைப்பாள் மூகாம்பிகை

Go down

 மாமன்னராய் வாழவைப்பாள் மூகாம்பிகை Empty மாமன்னராய் வாழவைப்பாள் மூகாம்பிகை

Post  ishwarya Sat Feb 16, 2013 12:56 pm

உலகிலேயே தொன்மையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் உட்பிரிவுதான் கொடசாத்ரி என்ற புனிதமான மலை. ரிஷிகளும் சித்தர்களும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கும் புண்ணியத் தலம் இது. இங்கு உற்பத்தியாகும் நதியே சௌபர்ணிகா நதி. இதன் கரையில் கருடபகவான் தவம் செய்து தனது குலத்தில் நிலவியிருந்த பலவிதமான சாபங்களையும் தோஷங்களையும் நீக்கிக்கொண்டான். கருடனின் பெயர் சுபர்ணன் என்பதினால், இந்த ஆறு சுபர்ணிகா என்று வழங்கலாயிற்று. ஆக, ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருத்துமேயானால், இந்த சுபர்ணிகா தீர்த்தத்தில் நீராடி தூய மனத்தினராய் இறைவழிபாடு செய்தால் பேரானந்தம் கிட்டும். அக்கினி தீர்த்தமும் உண்டு. இதில் சூரியனால் எழும் தோஷமும் சனியினால் தோன்றும் பீடையும் கழிய நீராடல் நலம் என்கிறது, நாடி.

‘‘தேவருங்கூடி பீடை கழிய அக்கினிச்
சௌபர்ணிகத்து நீராடி நிற்பரே -
பொய்யுரை யன்றுயன்று - ஊமையருந்
செவிடரும் பைசாச பிணக்கு பூண்
டோரும் விமோசனங் காணலாமே’’

-என்கிறார் கோலர் என்னும் சித்தர். இவர் தவம் செய்து நின்றதாலேயே இவ்வூருக்கு கொல்லூர் எனப் பெயர் வழங்கலாயிற்று. ஒருமுறை கௌமாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கோரத் தவம் செய்தான். சிவபெருமான் இவன் முன் தோன்றி வேண்டுவன கேள் என அருள, அதைக் கண்ட தேவர்கள் நடுநடுங்கி பிரம்ம தேவனை தஞ்சமடைய, பிரம்மன் தனது துணைவியாம் வாக்தேவியை அழைத்து அந்த கொடிய அரக்கனை ஊமையாக்கி, வரம் ஏதும் சிவனிடம் பெற இயலாது தடுத்தான். மூகன் என்றால் ஊமையான அசுரன் என்பதாம். வெகுண்ட அசுரன் தேவர்களைத் துன்புறுத்த, எல்லா இறைவனும் சக்திகளும் ஒன்றாகி அன்னை கொல்லூர் தேவியாக தோன்றி மூகாசூரனை வதம் செய்தாள். இவரே அன்னை மூகாம்பிகை. பரமேஸ்வரன் தனது வலது காலால், பெருவிரல் அடிப்பாகத்தை கொண்டு ஸ்ரீசக்ரம் வரைந்தான். இதனை கோலர் எனுஞ் சித்தர்,

‘‘தென்னாடுடைசிவனும் முன்னங்
கால் வலத்து திருச்சக்ரமது
பொறிப்ப, பலமீந்தோம் பூசைபல
புரிந்தே - சுவர்ண வரை கொண்ட
சுயம்பாய் நின்ற லிங்கமே உத்பல மாம்’’

-என்றார். ஆக இந்த உத்பவ லிங்கத்திற்கு உயிர் தந்தவர் கோலமகரிஷி. இந்த லிங்கத்தில், தங்கத்தால் உயர்ந்த, விரிந்த ஒரு கோடு உண்டு. இடப்புறமான இந்த கோட்டில் மகா சரஸ்வதி, மகாலட்சுமி, மகாசக்தி உள்ளிட்ட அனைத்து பெண் தெய்வங்களும் தமது சக்திகளைத் தாங்கி நிற்க, வலப்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தெய்வங்களும் தேவர்களும் சக்தி பீடமாக இன்றும் இருக்கின்றனர். பாரத யுத்தத்திற்கு தேவையான அஸ்திரங்களை அர்ஜுனன் திரட்டினார். பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்துபெற எத்தனிக்கையில், சிவபெருமான் என அறியாது அர்ஜுனன் சிவனை அடிக்க, அது ஒரு வடுவாக இங்குள்ள உத்பவ லிங்கத்தில் இன்றும் உள்ளது. அருகில் கோபாதம் என்ற பசுவின் பாதமும் உண்டு.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை கொல்லூர் தேவி. மகாலட்சுமி, மகா சரஸ்வதி, மகாசக்தி ஆகிய மூன்று மாதாக்களின் சங்கமம் இந்த பராசக்தி. ஆகவே, இவரை மூகாம்பிகை தேவி என்று ஆதிசங்கரர் அழைக்க, இதுவே இன்றும் புகழுடன் வழங்கலாயிற்று. பத்மாசனத்தில் அமர்ந்துள்ள தேவி மூகாம்பிகை சிவபெருமானைப் போல மூன்று கண்களை உடையவள். ஸ்ரீசக்ரத்தின் மேல் சேவை சாதிக்கின்றாள்.

ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் பீடை, சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் பெண் தேவதை. மகிஷாசுரமர்த்தினியின் அம்சம். கல்வி, வித்தை, கலைகளை விருத்தி செய்பவள். அரசியலில் வரும் கோளாறுகளைக் களைபவள். சங்குடன் சக்கரம் ஏந்தும் தடக்கையவள். இவளை போகர் என்னும் சித்தர்,

‘‘தடக்கையதனிலே சங்கொடு
சக்கரமேந்தி பத்மாசனமே
திருச்சக்கராசனங் கொண்டு
மாரணங்கட்டா வீற்றிருப்பாளிவள்
முக்கண்ணனாந் தன்னாட்டமுடையாள்.
ராசகிரீடங்காப்பாள் -
பிணி களைவாள். தனமுமீவாள் -
கலை பல தருங்கன்னி இவளை
தஞ்சமடைய என்ன குறை நமக்கே?’’

-என்று போற்றுகின்றார். பத்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். சங்கொடு சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவைப் போல் ஜொலிக்கின்றாள். ஸ்ரீசக்ர பீடத்தின் மேல் அமர்ந்து, ராஜபரிபாலனம் செய்வோரின் இடரை களைகின்றாள். எந்த கொடிய நோயையும் அழிக்கும் வல்லமை உண்டு. எந்த வித்தை, படிப்பு படிப்பவர்களும் நவராத்திரிகளில் விரதம் இருந்து தொழுதால், வெற்றி நிச்சயம் என்று போகர் எனும் சித்தர் போற்றுகின்றார். திப்பு சுல்தான் சென்று தொழுதபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களார்த்தி, இங்கே பிரசித்தம்.

‘‘வயோதிகம் வந்தால், நம்மை யாரும் அக்கறையுடன் கவனிக்கப்பட மாட்டார்கள் என எண்ண வேண்டாம். பெரும் வியாதியால் அவதிப்படுவோமோ என்ற அச்சம் வேண்டாம். காலத்தில் உணவு, நல்ல உறக்கம், மகிழ்ச்சியான, சிறப்பான, துளிகூட சங்கடம் இல்லா வாழ்வு பெற, மரண பயம் அறவே நீங்க, பெரும் நோய் அகல-அண்டாதிருக்க நவராத்திரி காலத்து அன்னை மூகாம்பிகை தலத்துக்கு வந்து பூஜிக்க கிட்டும்’’ என்கின்றார், கோரக்கர் எனும் சித்தர்.

‘‘சாக்காலம் பெற்ற பிள்ளைகள்
பேணாதிருப்ப, கொடும் பீடை
வந்து ஆட்ட விழியொடுகையுங்
காலுமே வீழ்ந்திட நாகுழறி
காலத்து உண்டி கிட்டாது ஏங்க -
கடைக்காலத்து பேண நாதியிலாது
வீழ இருக்கும் நரர்காள், நன்று நம் நாராயணீயாங்
கொள்ளுராள் - மூவாம்பிகையெனகலி
யில் நின்றாள்வாளை தண்டஞ்
செய்மின் - விடிவுண்டாம். தசபுஜ
கணநாதனால் காப்புண்டாம். வீரபத்ர
னால் ஆவி ஆக்கமொடகல மெய் யன்றோ’’

-என பேசுகின்றான். வயோதிகம் வந்த பிறகு பெற்ற பிள்ளைகள் பாரம் என எண்ணும் தீராத நோய்கள் தொல்லை தரும். கண் பார்வை மங்கும். கை கால்கள் வலு குறையும். நேரா நேரத்திற்கு உணவு கிடைக்காது. யாராலும் அன்பு பாராட்டப்படாத, உபசாரம் கிட்டாத வயோதிகம் வரும் முன், கொல்லூர் தேவி அன்னை மூகாம்பிகையை தஞ்சம் என நவராத்திரி பொழுது பூஜிக்க, அன்னை காப்பாள். தசபுஜ கணபதி அருளினால் இன்பமான காலமாக வயோதிக காலம் செல்லும்.

ஒரு நொடி கூட வியாதியில் பட்டு படுக்கையில் படுக்கும் அவசியம் இல்லாது போகும் என்பது சித்தர் சொல்லும் சத்தியவாக்கு.வாழுங்காலத்தில் ராஜ போகமாய் வாழ்ந்து, சாகும்போது யாருக்கும் சங்கடம் இல்லாது நொடிப் பொழுதில் வயோதிக காலத்திலும் ராஜாவாய் வாழ்ந்து விண்ணுலகம் செல்ல நாம் அனைவரும் தொழ வேண்டியது மூகாம்பிகையே. கர்நாடகா, உடுப்பி மாவட்டத்தில், குந்தாப்பூர் தாலுகாவில் இருக்கிறது, கொல்லூர் மூகாம்பிகைத் திருத்தலம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum