தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்க நகைகள் தங்க நகைகள்

Go down

தங்க நகைகள்  தங்க நகைகள்  Empty தங்க நகைகள் தங்க நகைகள்

Post  meenu Tue Feb 05, 2013 6:00 pm

நம் நாட்டு மக்கள் தங்க நகைகள் அணிவதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். காதில் தங்க நகை அணிவதற்காகக் காதணி விழா என்னும் விழாவையே நடத்துகிறோம். மேலும் பூப்பு நன்னீராட்டு, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு விழாவிலும் தங்க நகைகளே சிறப்பிடம் பெறுகின்றன.
சுரங்கங்களிலிருந்து தாதுவாக வெட்டியெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப் பட்டு வரும் தங்கக் கட்டிகள் தங்க நகைகளாக உருமாற்றம் பெற, தங்க நகைத் தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்களால் பல்வேறு வேலைகள் செய்யப் படுகின்றன.
கட்டித் தங்கத்தை நகைகளாக மாற்றும் தங்க நகைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தங்கம் நகையாக உருமாறும் தொழில் பற்றியும், தங்க நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றியும் ஓம் சக்தி வாசகர்களுக்குத் தெரியப்படுத்த தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரு. சி. ரங்கராஜன் அவர்களை அணுகினோம். அவர் அளித்த பேட்டி
கேள்வி: தமிழ்நாட்டில் தங்க நகைத் தொழில் எங்கெங்கு சிறப்பாக நடைபெறுகிறது?
பதில் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்க நகைத் தொழிலில் முதலிடம் வகிப்பது கோவை மாநகரம்தான். இந்தியாவில் மும்பை முதலிடத்திலும், கோவை இரண்டாமிடத்திலும் உள்ளன. அதற்கடுத்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நகரங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. நகை விற்பனையில் சென்னை மாநகரம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.
கேள்வி : இத்தொழிலில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளனர்?
பதில் : கோவையைப் பொறுத்தவரை இத்தொழிலில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் அதாவது சுமார் 40 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில அளவில் சுமார் 1 லட்சம் பேர் இத்தொழில் செய்கிறார்கள்.
கேள்வி : தங்கம் இறக்குமதி எப்படிச் செய்யப்படுகிறது?
பதில் : அரசாங்கம்தான் செய்கிறது. அரசாங்கம் மட்டுமின்றி மும்பையிலுள்ள புல்லியன் வியாபாரிகள் சங்கம் என்ற அமைப்பும் இறக்குமதி செய்கிறது. இவர்கள் தங்கத்தைக் கட்டிகளாக வாங்கி விற்பனை செய்கிறார்கள். நகைகளாகச் செய்வதில்லை. இப்போது வங்கிகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
கேள்வி : தங்க நகைகள் இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா?
பதில் : வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து நகைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளி மாநிலங்கள் என்று பார்த்தால் முதலிடம் வகிப்பது மும்பை மாநகரம்தான். வெளிநாடுகள் ஏற்றுமதிக்கு அதற்கென உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாகப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
கேள்வி : ஒரு நகையை ஒரே இடத்தில் ஒருவரே செய்து விடுகிறாரா?
பதில் : ஒரே இடத்தில் செய்யப்படுவதில்லை. முதலில் தேவையான வடிவங்களாக டையிங் இயந்திரத்தில் டையாக அச்சுச் செய்து தருவார்கள். அதை வாங்கி வந்து நகையாக உருக்குவார்கள். டை கடை, கம்பிக்கடை, செதுக்குப் பட்டறை, மெருகுக்கடை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தே ஒரு நகை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆபரணத்திற்கும் ஓரிடம் உண்டு. ஒரே ஆள் எல்லா நகைகளையும் செய்வதில்லை.

கேள்வி: இதற்கான இயந்திரங்கள் எத்தனை பிரிவாக உள்ளன?
பதில் : தொடக்கமாக அச்சு இயந்திரங்கள். அதற்குப் பின் தகடு இழுப்பது, கம்பி இழுப்பது, பாலிஷ் செய்வது, பட்டை செதுக்குவது, எனாமல் செய்வது எனப் பல வகை இயந்திரங்கள் உள்ளன.
கேள்வி : வெளியாட்களின் வருகை இங்குள்ளோரை தொழிலில் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?
பதில் : நிறையப் பாதித்துள்ளது. வெளி மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் மற்றும் அண்டை நாடான பங்களாதேசம் ஆகிய இடங்களிலிருந்து இங்கு வந்து தங்க நகைத் தொழில் செய்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 50 வருமானத்திற்குக்கூட வழியில்லாத நிலையில் இங்கே வந்து மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு இத்தனை நாள் கிடைத்துவந்த கூலி மிகவும் பாதித்து விட்டது. இத்தொழிலில் மட்டுமல்ல. கட்டடத் தொழில், தச்சுத் தொழில் எனப் பல தொழில்களிலும் வெளி மாநிலத்தவரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இத்தொழிலில் ஒருவரை நம்பி ஒரு குடும்பம் இருந்த நிலை மாறிவிட்டது. இத்தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
கேள்வி : இத்தொழிலில் ஒரு தொழிலாளிக்கும், ஒரு முதலாளிக்கும் என்ன வருமானம் கிடைக்கும்?
பதில் : முன்பு போல் பட்டறை அதிபர்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டு தொழிலாளிக்குக் கூலி தரும் நிலைமை இப்போது இல்லை. இப்போது ஒருவர் நான்கு பேரை வைத்து வேலை செய்தால், அவரும் அவர்களுடன் உட்கார்ந்து வேலை செய்து அவர்களின் கூலியையே பெறுகிறார். அப்படி உட்கார்ந்து வேலை செய்யாத நிலையில் அந்தச் சம்பளம் கூடக் கிடைக்காது.
இப்போது ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 மட்டுமே கூலி கொடுக்க முடிகிறது. இது இப்போதைய விலைவாசி ஏற்றத்தில் நகர வாழ்க்கைக்குப் போதாததாகவே இருக்கிறது. இதுவும் கொடுத்துக் கட்டுபடியாவதில்லை. மேலும் வேலை இல்லாத நேரங்களில் இதுவும் கிடைக்காமல், தொழிலாளர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். எனவே இத்தொழில் நலிந்து வருகிறது. கட்டடத் தொழிலாளர்கள், தச்சுத் தொழிலாளர்களெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 600 வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால், மிகுந்த விலை மதிப்புள்ள தங்கத்தில் நுணுக்கமான வேலைகளைச் செய்யும் நகைத் தொழிலாளர்கள் குறைவான கூலியையே பெறுவது வேதனையானது.
கேள்வி : நகை வடிவமைப்பு என்பது நகைத் தொழிலாளியின் கற்பனையா? அல்லது நகை செய்யக் கொடுப்பவர் தரும் வடிவமைப்பா?
பதில் : இரண்டுமே உள்ளன. வேலை செய்பவர்களும் தங்கள் கற்பனையில் வடிவமைப்பார்கள். வியாபாரிகளும் வடிவமைப்பைச் சொல்லி அதன்படி செய்து தரக் கேட்பார்கள். சில வேளைகளில் நகையை வாங்கும் பொது மக்களும் மாறுதல்கள், திருத்தங்கள், புதிய வடிவங்கள் செய்து தரச் சொல்லிக் கேட்பார்கள். கேட்பதற்கேற்பச் செய்து தருவார்கள். ஏற்கனவே நாங்கள் செய்து தந்த வடிவங்கள் கடைகளில் இருக்கும். அவற்றைப் பார்த்து அவற்றில் ஏதேனும் மாறுதல்கள் சொன்னால் அவ்வாறு மாறுதல்கள் செய்தும் தருவார்கள்.
கேள்வி : நகையின் தரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?
பதில் : நகையின் தரம் தொடர்பாக முன்பிருந்த சந்தேகங்கள் இப்போது நூற்றுக்கு நூறு இல்லாமல் போய்விட்டன. இப்போதைய நகைத் தொழில் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானதாக மாறியுள்ளது. இதற்குப் பொது மக்களின் விழிப்புணர்ச்சியும், அரசாங்கத்தின் சட்டமும் காரணங்களாகும்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஹால்மார்க் தரக் கட்டுப்பாட்டின்படி ஒரு குன்றிமணி அளவு கூட கலப்படம் செய்ய முடியாது. 916 தரத்தில் நகைகள் செய்யப்படுகின்றன. BIS (Bureau of Indian Standard) என்னும் தரக் கட்டுப்பாடு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பில் உரிமம் பெற்று, தரச் சான்று கொடுக்கக் கூடிய ஹால் மார்க் மையம் உள்ளது.
செய்யப்படும் ஒவ்வொரு நகையும் அந்த ஹால்மார்க் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. அங்கே தரம் பரிசோதிக்கப்பட்டு, தரமானதாக இருந்தால் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வைத்துத் தரப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஒரு விழுக்காடு கூட மாற்றுக் குறைவான நகை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
இதில் தங்கநகைத் தொழிலாளிக்குள்ள ஒரு சிக்கலையும் கூற வேண்டியுள்ளது. இந்த 916 தரத்தில் நகைகள் செய்ய சேதாரம் மிக அதிகம். ஆனால் அந்த அளவுக்குச் சேதாரம் கொடுக்கப் படுவதில்லை. இது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலும் நலியக் காரணமாக உள்ளது.
முன்பு, செய்த பொடி கலந்த நகைகளில் சேதாரம் குறைவு. அவற்றைச் செய்வதில் தொழிலாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இப்போது உற்பத்திச் செலவு அதிகம். அதை நகை வியாபாரிகள் கொடுப்பதில்லை. அவர்கள் வியாபாரப் போட்டியைக் காரணம் காட்டித் தர மறுக்கிறார்கள். செய்கூலி, சேதாரம் இல்லை என விளம்பரம் செய்கிறார்கள். அப்படி விளம்பரம் செய்வதே தவறு. அதை மக்களும் நம்புகிறார்கள்.
இப்போது 100 கிராம் தங்கத்தைக் கொடுத்து ஒரு தொழிலாளியிடம் நகை செய்யச் சொன்னால், அதற்கு 8 முதல் 10 கிராம் வரை சேதாரம் கொடுத்தால்தான் கட்டியாக உள்ள தங்கத்தைத் தகடாக, கம்பியாக மாற்றி, பிற உப தொழில்களையும் செய்து முழுமையான நகையாக்கித்தர முடியும். ஆனால், சேதாரம் மிகக் குறைவாகக் கொடுப்பதால் இப்போது லாபமே கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தா‌ய்‌ப்பா‌‌‌‌லி‌‌ல் இரு‌ந்து ஆபரண நகைகள்
» என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?
» நகைகள் பராமரிப்பு
» ரைடல் நகைகள்
» நகைகள்- எனது பலவீனம்: ஸ்ரீதேவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum