உலகை ஆட்கொள்ளும் அன்னாபிஷேகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
உலகை ஆட்கொள்ளும் அன்னாபிஷேகம்
தானத்தில் சிறந்ததும், உயர்ந்ததுமாக அன்னதானம் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. உணவின்றி உயிர் கள் கிடையாது. உயிர்கள் இன்றி உலகம் கிடையாது. அன்னம் என்னும் உணவே உயிர்களுக்கும், உலகிற்கும் ஆதாரமாக இருந்து வருகிறது என்பதால் அன்னதானம் பெருமைக்குரியதாகிறது.
தைத்ரிய உபநிஷத்திலும், சாம வேதத்திலும் அன்னத்தின் பெருமையை எடுத்துரைக்கும் சுலோகங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. சிவசொரூபமாக இருக்கும் லிங்கம், ஓர் ஒப்பற்ற வடிவமாகும். நீள்வட்ட வடிவிலான அது எண்ணற்ற அர்த்தங்களையும், எல்லையற்ற சக்தியையும் தரக்கூடியது.
சூரியனை சுற்றிவரும் கோள்கள் அனைத்தும் சிவலிங்க வடிவான நீள்வட்ட பாதையிலேயே பயணிக்கின்றன. உலகை இயக்கும் சிவலிங்க வடிவைப் போலவே உயிர்களை காக்கும் அன்னமும் நீள்வட்ட வடிவமானது. சக்தியளிப்பதில் இறைவடிவத்திற்கு ஒப்பானது.
சிவவடிவானதும், மனிதர் களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கு நைவேத்தியமாகவும், யாகத்தின் அவிர்பாகமாகவும் அர்ப்பணிக்க கூடியதுமான அன்னத்தை அந்த சிவ வடிவத்திற்கே அபிஷேகம் செய்யும்போது, இறைவன் மனம் குளிர்ந்து தடையற்று அன்னத்தை தரக்கூடும்.
மேலும், சிவலிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாகி அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று அனைத்தையும் ஆட்கொள்ளக்கூடும் என்பதாலும் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகத்தான் பால், தயிர், தேன் போன்று உலக உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைக் கொண்டு, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சிவவடிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வழக்கமாயிற்று.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்தை மறைக்கும்படியாக அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேகம் அனைத்து சிவ தலங்களிலும் நடைபெற்று வந்தாலும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும்.
விஜயாலய சோழ வம்சத்தைச் சேர்ந்த மாமன்னன் ராஜராஜசோழன், தனது ஆட்சி காலத்தில் பெருவுடையாருக்கு தஞ்சாவூரில் மிக பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பினான். அதுதான் தஞ்சை பெரிய கோவில். ராஜராஜசோழனின் மகனான முதலாம் ராஜேந்திரன், வடக்கில் சாளுக்கியர்களையும், மேற்கில் பாண்டியர்களையும் வென்றதுடன், ஈழம், கடாரம் ஆகியவற்றின் மீதும் படையெடுத்து வெற்றி கொண்டு தந்தையின் ஆணைக்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.
அவன் தனது ஆட்சிகாலத்தில் தந்தைக்கு நிகராக கங்கைகொண்ட சோழபுரத்தில் சிற்பக்கலையும், அழகும் மிகுந்த ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதனுள் 153 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். கங்கை நதியில் இருந்து புனிதநீரை கொண்டுவந்து லிங்கத்திற்கும், ஆலய விமானத்திற்கும் அபிஷேகம் செய்வித்தான்.
மேலும் மிகுந்த கங்கை நீரை, கோவிலின் மேற்கே பெரிய ஏரி ஒன்றை வெட்டி, அதில் விட்டு தினமும் அந்த ஏரியில் இருந்து நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கோவிலை கொண்டதால் அந்தவூருக்கு கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.
ராஜேந்திர சோழனுக்கு பிறகு நான்கு சோழ அரசர்கள், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தியதால், கோவில் மேன்மேலும் வளர்ந்து புகழ்பெற்றது. அதன்பின்னர் பாண்டியர்- சோழர் இடையே நடைபெற்ற போரில், சோழ மன்னர் தோல்வியுற, கங்கைகொண்ட சோழபுரம் சூறையாடப்பட்டது.
கோவில் மட்டுமே எஞ்சி நின்றது. அதன்பிறகு வந்த ஆங்கிலேயர்கள் கோவில் மதில் சுவர்களை இடித்து கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட எடுத்துச் சென்றனர். ஒரு சமயம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த காஞ்சி பெரியவர், கோவிலின் நிலையை பார்த்து கவலையுற்றார். பின்னர் மீண்டும் கங்கை நீரை கொண்டு வரச் செய்து, மூலவருக்கும், பரிவாரமூர்த்தங்களுக்கும், கோபுரத்திற்கும் கங்காபிஷேகம் செய்தார்.
அத்துடன் நிறுத்திவிடாது, மிகப்பெரிய லிங்கமான பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்ய விரும்பி அதை தன் பக்தர்கள் சிலரிடம் வெளிப்படுத்தினார். அவரது அருளானையை ஏற்ற பக்தர்கள் குழு 1986-ம் ஆண்டு அன்னாபிஷேகத்தை தொடங்கினர். நூறு மூட்டை (7,500 கிலோ) அரிசியை வடித்து லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்து பின்னர் அது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இவ்வாண்டு இந்த அரிசியின் அளவு 125 மூட்டையாக (9,375 கிலோ) அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக அளவில் அன்னாபிஷேகம் செய்யப்படும் ஒரே கோவில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஆகும். இந்த ஆண்டு நடைபெறும் அன்னாபிஷேகம் 27-வது ஆண்டு நிகழ்வாகும். இவ்விழா இன்று, நாளை, நாளை மறுநாள் (29-ந் தேதி) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
முதல் நாள் நிகழ்வாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பின்புறமுள்ள கனகமணி விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், மறுநாள் பிரகதீஸ்வரருக்கு 11 திரவியங்களால் மகா அபிஷேகமும், மூன்றாம் நாள் காலை தொடங்கி மாலை வரை அன்னாபிஷேகமும் நடைபெறும்.
சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அன்னத்தின் ஒவ்வொரு திவலையும், சிவலிங்கமாக உருப்பெறும். அத்தகைய அன்னாபிஷேகத்தில் ஈடுபடுபவர்களும், அதனை தரிசிப்பவர்களும், இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெறுவதுடன், பிறவிப் பிணியில் இருந்தும் விடுபடுவார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» உலகை ஆட்கொள்ளும் அன்னாபிஷேகம்
» அன்னவாசலில் அன்னாபிஷேகம்
» அமாவாசையில் அன்னாபிஷேகம்!
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» அன்னவாசலில் அன்னாபிஷேகம்
» அமாவாசையில் அன்னாபிஷேகம்!
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum