தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அளவுக்கு அளவானவர்

Go down

   அளவுக்கு அளவானவர் Empty அளவுக்கு அளவானவர்

Post  ishwarya Thu May 23, 2013 2:27 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் சின்னமனூர்

தமிழகத்தில் எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களும் விமோசனம் தரும் கோயில்களும் உண்டு. ஆயினும் தேனி, சின்னமனூர் அருகே ஓடும் சுரபி ஆற்றங்கரையில் அருள்பரிபாலிக்கும் ஈஸ்வரன் மிகுந்த வரப்பிரசாதி. சுயம்பு மூர்த்தியான, லிங்கவடிவான இந்த இறைவனை பூலா நந்தீஸ்வரர் என்று சித்தர்கள் போற்றுகின்றனர். தேவர்களும் சித்தர்களும் விரும்பி தொழும் விருட்சம் பூலா மரம் ஆகும். இங்குள்ள சுரபி தீர்த்தத்தால் வளர்ந்தது இந்த தலவிருட்சம்.

‘‘பிள்ளை வரந்தரும் பெரியோன் -
நடவா மணத்தை மங்களமாய்
நடத்திடும் அரிகேச நல்லூரான் தமை
தொழுவார் பிறவாரே’’

என்கின்றார் கொங்கணர். பூலாமரத்தின் அடியில் குடிகொள்ளும் பிரான் இந்த பூலா நந்தீஸ்வரர். வீரபத்திர சுவாமியின் சாபத்திற்கு ஆளான கற்பகத் தரு, சுயம்பு லிங்கத்தின் அருகில் முட்பூலாவாக தோன்றிட, அந்த இடம் பூலாவனம் என்று அழைக்கப்பட்டது. அப்பகுதியை ஆண்ட மன்னர், ராச சிங்க பாண்டியன். ஒருமுறை சுரபி ஆற்றின் அருகில் தங்கி, தன் அமைச்சர், பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் அமர்ந்திருக்க, ஆயன் ஒருவன் அனுதினமும் மன்னருக்கும் அவரு டன் இருக்கும் குழுவினருக்கும் பால் கொண்டு வந்து கொடுப்பான். ஒவ்வொரு முறை வருகையிலும் இந்த பூலாமரத்து வேர்பட்டு தடுக்கி, தடுக்கி விழுந்தான்.

தனது கோடாரியால், பூலாமரத்தின் வேரை ஆயன் வெட்ட, அதனடியில் குடி கொண்டிருந்த சிவபெருமான் மேல் வெட்டுப்பட்டு, ரத்தம் பீரிட்டது. இந்த செய்தியை அறிந்த மன்னன் ஓடிச் சென்று லிங்கேசனாம் பூலாநந்தீசனை தொழுது, பொறுத்தருள பிரார்த்தித்தான். வானளாவி நின்ற ஆடல் நாயகனை வணங்கி, தன் அளவு உயரம் குறைத்து தான் தரிசனம் செய்ய மன்னர் ராச சிங்கனார் வேண்ட, மன்னர் தம் உயரத்திற்கு தன் உயரத்தை குறைத்து நின்றார் சிவபெருமான். மன்னர் மனம் மகிழ்ந்து லிங்கேசனை நெஞ்சாரத் தழுவி இன்புற்றான். அன்று தொட்டு பூலா நந்தீஸ்வ ரரை ‘அளவுக்கு அளவானவர்’ என மக்கள் கொண்டாடினர். இதை,

‘‘சுரபி தீர்த்த தருகு ஒளிந்து நின்ற
நந்தீசனை, நாதனை ஆயன்
வாள்கொண்டு வெட்டக் கண்ட
ராசசிங்கன் வடிவு குறைத்து
வளந்தா என வேண்டி நிற்ப
அவன் அளவை தன் வடிவை குறுக்கி
காட்ட, ஆலிங்கனஞ் செய, தேவரும்
தேவியருஞ் சித்தரும் பூமழை
பொழிய அளவுக்களவான
சிவனிவன் என மறையோர் போற்றினரே’’

என பாம்பாட்டிச் சித்தர் பேசுகின்றார். எத்துணை குள்ளமானவரானாலும் அவரளவுக்கு குறுகி, எத்துணை உயரம் ஆனவரானாலும் அவரளவுக்கு உயர்ந்து தன் உருவைக் காட்டும் இந்த பூலா மரத்தடி நந்தீசர், ‘அளவுக்கு அளவானவர்’ என்று போற்றப்படுகிறார். ஆயன் கோடாரியினால் பூலாமரத் தின் வேரை வெட்டுகையில், லிங்கத்தின் மேல் பட்டமையால், இன்றும் இந்த ‘அளவுக்கு அளவான’ ஈசன் மேல் வெட்டுப்பட்ட வடு உண்டு.

மன்னர் ராச சிங்க பாண்டியர், பூலா நந்தீஸ்வரரை கட்டித் தழுவி நின்றமையால், அவரது மார்பு கவசம் லிங்கத்தின் மேல் பட்டது. இன்றும் அந்த மார்பு கவச வடு லிங்கத்தின் மேல் இருப்பதைக் காணலாம். தேவேந்திரன், ஊர்வசி, மேனகை போன்றோர் தொழுதேத்திய சுயம்பு மூர்த்தி இவர். பிறவி என்னும் பெரும் பிணியை அகற்றும் எளியவர். பக்தர்கள் குறை போக்கும் சத்தியவான் இவரே என அகத்தியர் போற்றுகின்றார்.

‘‘சிவ சிதம்பரமெனச் சொன்னார்
வினை போம் - சொல்லார்
தம் பிறப்பும் மறுபட சுரபி தீரமுறை
அரிகேசநல்லூரானை - யளவுக்களவான
அண்ணலை தொழுதக்கால், புவியுரை
புண்ணியபுனல் நீராடிய புண்ணியஞ்சேருமே!’’

சிவசிதம்பரம் என்று பக்தியுடன் வாழ்நாளில் ஒருமுறையேனும் தினப்படி பாராயணம் செய்துவர, வினை எல்லாம் அற்றுப்போகும். சொல்ல இயலாது போனவர்கள் அளவுக்களவான ஈசனை தரிசனம் செய்தால் பிறவி எனும் பெருநோய் விலகும் என்று பொருள். அம்பிகைக்கு சிவகாமி அம்மன் என்று பெயர். அர்ச்சகர்கள் எத்துணை அலங்காரம் செய்தாலும் சிவகாமி அம்மைக்கு வியர்த்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் துடைத்துக்கொண்டே இருப்பர். இதிலிருந்து அன்னை சிவகாமி ஜீவ சக்தியாம் ஆதி சக்தி எனத் தெரிகிறது. இதனை அகத்தியர் தமது ஜீவ நாடியில்,

‘‘உள் ஓட்டம் உடையன்னை
யவள் சிவகாமியே - மேனி
வியர்த்திருக்க, விதி மாற்றுந்
தன்மையள் - கருத்தாய் கல்வி
கூட்டி பணி நிரந்தரஞ் செய்
வள்; சிங்கத்து சுல்லிவிற்கும்
வைபவத்து சித்தருங்கூடி யேத்த
கண்டேன் நந்தீசா’’

-என்று கண்ணீர் ததும்ப பாடுகின்றார். உயிரோட்டம் உடையவள் அன்னை சிவகாமி. விதி எத்துணை வலுவுடையது ஆயினும் அதனை மாற்றிடக்கூடிய சக்தி கலியுகத்தில் இவளிடம் மட்டுமே உண்டு. படிப்பு சிறக்கத் துணையாய் நிற்பாள். படித்தபின் நல்ல வேலை கிடைக்கவும் வழிவகை செய்வாள். ஆவணி மாதத்தில் விறகு விற்றல் திருவிழாவின்போது பற்பல சித்தர்களும் கலந்துகொண்டு அன்னை சிவகாமியை தொழுது உய்வர் என்ற பொருள்ப டும் பாடல் இது. இங்குள்ள மரத்தில் நாகலிங்கப்பூ பூக்கின்றது. பூவின் மத்தியில் லிங்க வடிவும், மேற்புறம் ஆதிசேஷன் படம் எடுத்தாற் போன்ற அமைப்பில் இதழ் களும் கொண்ட அதிசய மலர் இது. இந்தப் பூவினால் இன்றும் இந்திரன் இந்த சுயம்பு மூர்த்தியாம் பூலா நந்தீசரை அர்ச்சித்து ஆராதிக்கின்றார் என் கிறார் கொங்கணர் எனும் சித்தர்.

கல்வி கற்பதில் இருந்து வேலைக்குச் சேரும் வரை, குழந்தை பருவத்தில் இருந்து திருமண காலம் வரை ஒரு பிள்ளையை இக்காலத்தில் வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை எளிதாய் முடிக்க ஒரு உபாயம் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

‘‘பிறந்தகாலைச் சிசுவை
யளவுக்கு அளவானச் சிவன்
பாதமிருத்தி, யுனக்கே
அடைக்கமென்பிள்ளை என்றே
யொப்புக் கொடுக்க, வொரு
குறையுமின்றி பேராக்கி,
பெரியோனுமாக்கி பிள்ளையை நட்
குடியாக்கி கொடுப்பான் சிவகாமி
கேள்வன் - யரிகேச நல்லூருறைவான்
சத்தியஞ் சொன்னோம் பொய்ப்பின்
சுட்டிடு இவ்வேட்டை’’

-என்றார். நட்குடி ஆக்கி என்ற சொல்லுக்கு நல்ல குடிமகன் ஆக்கி நிற்பான் என்று பொருள். பூலா நந்தீஸ்வரரிடம் ஒப்புக் கொடுத்து, ஒப்படைத்து நின்றால், அவன் அச்சிசுவை சரிவர பராமரித்து சிறப்புடன் வாழச் செய்வான் என்று இப்பாடலின் மூலம் சத்தியப் பிரமாணம் செய்கிறார் சித்தர்.

‘‘நீத்த பின்னும் நீடு
கயிலாயத்து கிடக்க
யென்ன குறை நமக்கே’’

என்கின்றார், கருவூர் சித்தர். கருவூர் சித்தரும் ராஜராஜ சோழனும் தொழுத கோயில் இது. இறந்த பின்னும் கைலாய பதவி என்னும் வீடுபேற்றைத் தரவல்லான். ஆதலால் எமக்கு என்ன கவலை என்று ஆர்ப்பரிக்கும் கருவூராருடன் நாமும் குதூகலமாய் ஆனந்தங் கொள்வோமே! தேனி- கம்பம் சாலையில், தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது சின்னமனூர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum