தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்னி வெயில் கால வழிபாடு

Go down

 அக்னி வெயில் கால வழிபாடு Empty அக்னி வெயில் கால வழிபாடு

Post  ishwarya Thu May 23, 2013 12:19 pm

வெயில் காலம் வந்து விட்டால் மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள். உடல் கருத்து விடுமோ! அழகு போய் விடுமோ! என்று பல வகை பசைகளைத் தடவிக் கொண்டு பல்வேறு பழச்சாறுகளைச் சாப்படுகிறார்கள். ஆனால் நம்மை வாழ வைக்கும் மந்திரப் பகுதிகளான வேதங்களோ அக்னியைப் பற்றி ஆற்றல் உடைய பல தகவல்களைத் தருகின்றன.

அக்னி தேவன் தர்மத்தின் வடிவினன் என்றும் சூரியனுடைய கதிர்களால் பிறப்பெருத்தவர் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் இந்த அக்னி நட்சத்திரக் காலம் வந்து மக்களை வாட்டி வதைப்பதற்குக் காரணம் என்னப என்பதை ஒரு கதை மூலமாக அறியலாம்.

அக்னி நட்சத்திரக் கதை............

ஒரு சமயம் தீராத வயிற்றுப் பசியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் அக்னி பகவான். இவரது பசிக்குக் காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள். இறுதியில் சுவேதகி என்ற அரசன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் நடத்திய யாகம்தான் காரணம் என்றும் அவர் யாகத்தீயில் இட்ட நெய்தான் அக்னிதேவனின் வயிற்றில் வலியை உண்டாக்கி விட்டது என்று அறிந்தனர்.

இதைப் போக்கிட வழி என்னவென்று பிரம்மாவிடம் கேட்டபோது இதற்கு உரிய மருந்து காண்டவ வனத்தில் உள்ள மூலிகைகள்தான் என்றார். தன்னுடைய கோரமான பசியும், வயிற்று வலியும் நீங்க வேண்டும் என்றால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும் என்று உடனே காட்டைத் தேடி ஓடினார் அக்னி பகவான்.

எல்லா இடங்களிலும் தேடியவர் யமுனை நதி கரை ஓரமாக இருந்த மலர்கள் பூத்துக்குலுங்கிய காண்டவ வனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து நெருங்கினார். அதே சமயம், கானகத்தை விழுங்கிட நெருங்கிய அக்னிக்கு வந்தது ஒரு சோதனை. இக்காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர் தலைவன் இந்திரன் கானகத்தைச் சுற்றிலும் அடர்மழையை பெய்யச் செய்தான்.

அக்னி பல வடிவங்கள் எடுத்து கானகத்தை விழுங்க முயற்சி செய்த போது தோற்றுப் போனார். கடைசியாக ஒரு முதியவர் வேடம் தரித்து யமுனை நதிக்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கே கிருஷ்ணரும் அர்ஜூனனும் எதிரில் வந்தார்கள். முதியவர் வடிவில் இருந்த அக்னி பகவான்தான் மிகவும் பசியுடன் இருப்பதாகக் கூறி உணவு ஏதேனும் தரும்படி கேட்டார்.

யாசகம் கேட்பவருக்கு `இல்லை' என்று சொல்லத் தெரியாத கிருஷ்ணர் வந்தது யாரென்று புரிந்து கொண்டு அக்னி தேவனே! உமக்கு பசி தீரும்படி உணவை இங்கேயே தருகிறேன் என்று கூற தனது சுய உருவை கொண்டு வந்தார் அக்னி. காண்டவ வனமே! தான் சாப்பிட்டுப் பசியாற வேண்டிய பொருள் என்றும் இந்திரன் எதிர்த்து மழை பொழிந்து தான் பசி தீர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தைக் கெடுத்து விட்டார் என்றும் அக்னி தேவன் சொன்னார்.

அதற்குப் பரந்தாமன் எப்படிப்பட்ட பெரும் மழை வந்தாலும் உனக்கு உணவு உண்ண எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன். அதுவும் 21 தினங்களுக்குள் வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு விட வேண்டும் என்றார். உடனே, அர்த்தமுள்ள பார்வை ஒன்றை அர்ஜுனன் மீது செலுத்தினார்.

தன் வில்லை வளைத்த அர்ஜுனன் அம்புகள் ஆயிரக்கணக்கில் வீசி ஒரு கூடாரம் போல் அமைத்து அக்னியைக் காத்து அமரச் செய்தான். கிருஷ்ணர் சொல்லி விட்டதால் தனது ஏழு நாக்குகளையும் நீட்டியபடி காண்டவ வனத்திற்குள் புகுந்து கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் விழுங்கத் தொடங்கினார். அக்னி பகவான்.

இதைக் கண்ட இந்திரன் பெரும் மழையைப் பெய்ய வைத்தான். அங்கே ஒரு துளி மழைகூட அக்னிமேல் படாமல் அம்புக் கூரை காத்து வந்தது. அக்னி பகவான் 21 தினங்களில் முதல் ஏழு நாட்கள் பூமி கீழ்ப்பகுதியை உண்டார். அச்சமயம் வெப்பம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்களில் வளர்ந்திருந்த அடர்காட்டை உண்டார்.

அந்த நேரத்தில் வெப்பம் மிகக் கடுமையாகப் பரவிச் சுட ஆரம்பித்தது. இறுதியாக ஏழு நாட்கள் சில பாறைகளை விழுங்கும் போது மெல்ல மெல்ல வெப்பத்தின் தாக்கம் குறைந்து முழுமையாகத் தணிந்து இளவெயில் மட்டும் வரத் தொடங்கியது. இவ்வாறு அக்னி பகவான் காண்டவ வனத்தை முழுவதுமாக அழித்து விழுங்கிய அந்த 21 தினங்கள்தான் அக்னி நட்சத்திர நாட்களாகச் சொல்லப்படுகின்றன.

கத்திரி வெயில் என்று சொல்லப்படுகிற இந்த 21 நாட்களிலும் வெயில் மூன்று வகையாகப் பரவும். முதல் ஏழு தினங்களில் மெதுவாக அதன் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த ஏழு தினங்களில் அதிக அளவில் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக குறையும். இதை நாம் அனுபவித்து உணரலாம். கோடை காலத்தின் உச்சகட்டமான நேரங்கள்தான் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில்.

அக்னி நட்சத்திரத்தில் சூரியனது ஆதிக்கம்:-

சித்திரை வைகாசி மாதங்கள் வரும் போது பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கும். அதாவது சூரியனை பூமிக்கோள் தன் நீள் வட்டப்பாதையில் சுற்றும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. இதில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விடுகின்றன. ஜோதிட முறையில் காணும் பொழுது உத்தராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறார்.

அதாவது தை 1-ம் நாள் முதல் தன் வடக்கு திசை பயணத்தைத் தொடங்குவார். இதில் சித்திரை 1-ந்தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் வடகோடி எல்லையை அடைந்து விடுவார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் நமது முன்னோர்கள் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டனர்.

ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திர காலம் சித்திரை 21-ந்தேதி தொடங்கி வைகாசி 14-ம் நாள் முடிவடைகிறது. இந்த வருடம் நாளை (மே 4-ம் தேதி) தொடங்கி மே 28-ந்தேதி செவ்வாய் கிழமையுடன் முடிவடைகிறது.

எந்த செயல்களைச் செய்யலாம்................

அக்னி நட்சத்திர நாட்களில் சுபச் செயல்களைச் செய்யக்கூடாது என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் சில சுபச் செயல்களை நடத்தலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. 1. திருமணம், சீமந்தம், உபநயணம், பரிகார யக்ஞங்கள், பொது கட்டிடங்கள் சத்திரங்கள், மண்டபங்கள் கட்டுவதைச் செய்யலாம். ஆனால் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவதை இக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

பூச் செடிகள் நடுவது, விதை விதைத்தல், தோட்டங்கள் போடுவது குளங்கள் குட்டைகள், கிணறு வெட்டுதல் ஆகிய செயல்களைச் செய்தல் கூடாது. மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு தயார் செய்தல், காண்டிராக்டர்கள் அடுக்கு மாடிக் கட்டிடங்களையோ, புதிய நகரங்களையோ இக்காலங்களில் உருவாக்குதல் வேண்டாம்.

ஆனால் தொடங்கிவிட்ட பணிகளைச் செய்யலாம். புதிய வாகனம் வாங்கி பயிற்சி எடுத்தல் குருவிடம் இருந்து தீட்சை எடுத்துக் கொள்வதையும் முடிந்த அளவு தவிர்க்கலாம். இவற்றில் ஜோதிட ரீதியிலும் அறிவியல் பூர்வமாகவும் சில தத்துவங்கள் அடங்கி உள்ளன. கோடை காலத்தில் விவசாயப் பணிகளைத் தவிர்க்க வேண்டும் என நம்முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்குக் காரணம் வயலில் இறங்கி வேலை செய்பவர்கள் எளிதில் சோர்ந்து விடுவார்கள். விதை போட்டால் அது பூமியின் வெப்பத்தாக்கத்தால் முளைக்காமல் போய் விடும். கட்டுமானப் பணிகளைச் செய்ய வேண்டாம் என்று சொல்லக் காரணம் கோடை காலத்தில் தண்ணீர் குறைந்த அளவே கிடைக்கும். சிமெண்ட் கட்டிடங்கள் உறுதிபட அதிக அளவில் தண்ணீர் ஊற்றி விட வேண்டும்.

கத்திரி வெயில் காலத்தில் கட்டிடங்களின் உறுதிக்காக ஊற்றப்படுகிற நீரை கட்டிடத்தை விட சூரியன்தான் அதிக அளவில் உறிஞ்சி விடுகிறது. வெயில் அதிகமாக அடிக்கின்ற போது மரம் செடி, கொடிகளை வெட்டினால் அவை மறுபடியும் வளராமல் போய்விட வாய்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில் முன் ஏழு நாட்கள், பின் ஏழு நாட்களுக்குப் பணிகளை நிறுத்திவிட்டு அந்த நாட்களில் இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

கத்திரி வெயில் நாட்களில் நீர்த்தாரை..........

விஷ்ணு ஆலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் 21 தினங்களுக்கும் பல்வேறு வகையான திருமஞ்சன நீராட்டல்கள் நடத்தப்படுவது கத்திரி வெயில் காலத்தில் தான். இக்கால கட்டத்தில் அம்மன் சன்னி தானங்களில் வசந்த நவராத்திரி உற்சவம் என்று ஒன்பது தினங்களுக்குக் கொண்டாடுவார்கள்.

சிவாலயங்கள் அருகில் இருக்கின்ற சிவபக்தர்கள் லிங்கத் திற்கு மேல் மண்பானை ஒன்றை உறிபோலக்கட்டி அதில் ஜலதாரை என்னும் நீர்விடும் (கலசமாக) வைத்து அடியில் சிறு துளையிட்டு பானைக்குள் பச்சிலை, ஜடாமஞ்சி, வெட்டி வேர், வினாழிச்சவேர், பச்ச கற்பூரம், பன்னீர், மஞ்சள் தூள், ஏலக்காய், கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சிறிதளவு போட்டு (நீர் வெண்ணிறம் மாறாமல் போடுக) அக்னி நட்சத்திர நாட்களில் பல்வேறு அபிஷேகங்களைச் செய்வர்.

விஷ்ணு ஆலயங்களில் கிராப்பத்து, பகல்பத்து உற்சவங்கள் நடைபெறும். வெப்பகாலத்தில் இஷ்ட தெய்வ குல தெய்வங்களை அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலாம். அனைத்து ஆலயங்களிலும் ஜலதாரை வைப்பதால் அந்தக் காலகட்டங்களில் பூமி அதிர்வோ, இயற்கை உபாதைகளோ ஏற்படாது என்பது ஆன்றோர் கருத்து.

அக்னி நட்சத்திர காலத்தை மையமாக வைத்து பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களுக்கு வெப்பம் காரணமாக அம்மை, வைசூரி நோய்கள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரவாய்ப்பு உண்டு. வைசூரி நோய்களில் ஒருவகையான அம்மை அகல, மற்றவர்கள் நீரில் நின்று 108 தடவை "வந்தேகம் சீதனாம் தேவீம் ராசபஸ்தாம் திகம்பராம் மார்ஜனீ கலசோ பேதாம் விஸ்போடக விநாசினீம்'' என்று கூறி நீரை வேம்பு - மஞ்சளிட்டு உடலில் தெளிக்க 3 தினங்களில் அம்மை இறங்குவதாக நம்பிக்கை. கால்நடைகளுக்கு காலரா போன்ற நோய்கள் வரும்போது குளிர்ச்சி தரும் கீரை வகைகள், தீவனங்களை கொடுக்கலாம்.

கத்திரி வெயில் கால அக்னி வழிபாடு:............

அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள் இருப்பதால் அவருக்கு 7 தினங்களுக்கு முறையான வழிபாடு செய்யலாம். இந்த தினங்களில் அக்னிதேவனது கோலத்தை பூஜை அறையில் செங்காவியால் வரைந்து வாசனை மலர்களால் பூஜை செய்து தீபம் ஏற்றி வைத்து

ஞாயிறு - பாயாசம்,
திங்கள்-பால்,
செவ்வாய்-தயிர்,
வாழைப்பழம்,
புதன்-தேன், வெண்ணை,
வியாழன்-சர்க்கரை, நெய்,
வெள்ளி-வெள்ளை சக்கரை, பானகம்,
சனி-பசுநெய், தயிர் அன்னம்

என்ற வரிசையில் படைத்து அக்னி தேவ தியானம் காயத்ரி சொல்லி ஆரத்தி செய்து வழிபட்டு பிறருக்கு தானமாகத் தருவதால் நமக்கு சர்வ மங்களங்களும் தர்மதேவனான அக்னியின் வாழ்த்தினால் கிடைக்கும்.

ஸ்வாஹா தேவி, ஸ்வதாதேவி என்ற இருமனைவிகள் இவருக்கு உள்ளனர். மனிதர்களின் இரு உள்ளங்கைகளிலும் அக்னி இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இரு கைகளையும் காட்டி ஆலய வழிபாடு செய்கிறோம். அக்னியை ஐஸ்வர்யத்தின் வடிவம் என்று சிவாகமங்கள் கூறி யாகீர்யாகீஸ்வரர் என்ற பெற்றோர் வழியே உதித்ததாக வர்ணிக்கிறது.

இந்த கத்திரி வெயில் காலத்தில் அக்னிதேவன் நலன்களை அருளிட ஓம் ருத்ரநேத்ராய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமகி தந்நோ அக்நி: ப்ரசோதயாத் என்ற எளிய காயத்ரியை தினம் 16 முறை கூறுங்கள். ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பல்வகை அபிஷேக ஆராதனைகளை தரிசியுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்னிதேவருக்கு வந்தனம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum