தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியாவில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்..!

Go down

மலேசியாவில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்..! Empty மலேசியாவில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்..!

Post  ishwarya Tue May 07, 2013 11:56 am

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால் தமிழருக்குச் சென்ற இடமெல்லாம் அடி என்பது புதுமொழி போலும். தமிழன் வாழாத நாடில்லை. அங்கெல்லாம் அவன் அடி வாங்காத நாளில்லை. அந்த அளவிற்கு அடி வாங்கி வாங்கி மரத்துப் போன இனமாய் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் ஒகேனக்கல் பிரச்சனையில் கன்னடர்களிடமும், முல்லைப் பெரியாற்றுச் சிக்கலில் மலையாளிகளிடமும், இலங்கையில் சிங்களர்களிடமும், மலேசியாவில் அங்குள்ள முதலாளிகளிடமும் தாக்குதலுக்கு ஆளாகி கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறது தமிழினம்.

மிக அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் மக்பூல் உணவு விடுதியில் பணியாற்றிய 37 தமிழகத் தொழிலாளர்களை, அவ்விடுதியின் முதலாளி அடைத்து வைத்து வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காது, உண்ணும் உணவைக் கூட தருவதற்கு மனமின்றி அனைவரும் சுரண்டப்பட்டிருக்கின்றனர். தேனி, இராமநாதபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் அங்கு பணி புரிகின்றனர்.

இதில் சுரேஷ் இராமச்சந்திரன் என்ற தொழிலாளியின் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி அவர் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இதே மாதிரியான கொடுமைகளை பிற தொழிலாளர்கள் மீதும் புரிந்த காரணத்தால், ஆறுமுகம் என்பவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த நிலையில் அந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என அஞ்சி இரவோடு இரவாக தப்பித்து ஓடி, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்களின் பிரச்சனைகள் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டன.

காவல்துறைப் பாதுகாப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட தொழிலாளர்களோடு, உணவு விடுதி முதலாளியின் ஆட்கள் பேச்சு நடத்தப்போவதாகக் கூறிக்கொண்டு, தொழிலாளர்களில் ஆறு பேர் மீது திருட்டுப் பழியைச் சுமத்தி சிறையிலடைத்தனர். இதற்கு மலேசியக் காவல்துறையும் உடந்தை. மலேசியாவில் தற்போதுள்ள தமிழகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் இங்குள்ள உணவு விடுதிகளில்தான் பணியாற்றுகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள முதலாளிகளால் கடுமையான இன்னலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். 'கொடுமைப்படுத்திய முதலாளிகளிடமே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சமரசம் என்ற பெயரில் மலேசிய காவல் துறை ஒப்படைத்தது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தொழிலாளர்களின் விருப்பப்படி தமிழகம் திரும்புவதற்கான உரிய ஏற்பாடுகளை பொறுப்பிற்குரியவர்கள் மேற் கொள்ள வேண்டும். இதில் உடனடியாகத் தலையிட்டு தமிழக அரசு ஆவன செய்வது இன்றியமையாததாகும். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்திய நடுவணரசை வற்புறுத்துவதன் மூலமே மலேசிய அரசுக்கு நெருக்குதல் தர முடியும்' என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் கூறியுள்ளார்.

தொழிலாளர்களுள் ஒருவரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் இராமச்சந்திரன் 'எங்களை வெளிச்சமே தெரியாத இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர். தீடிரென்று ஒருநாள் முதலாளியின் கையாட்கள் சிலர் வந்து, எனது உயிர்க்குறியில் மின்சார வயரைப் பொருத்தி அதிர்வு ஏற்படுத்தினர். நான் வலி தாங்க முடியாமல் கதறியழுதேன்' என்றார்.

'மனைவி, குழந்தைகளை கடந்த நான்காண்டுகளாகக் காண முடியாமல் நாங்கள் துடித்துக் கொண்டிருந்தோம். ஊருக்குச் செல்வதற்கு விடுமுறை கேட்டால் கூட, எங்களை அடித்துத் துவைத்துவிடுவார்கள். ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் அவர்களிடம் கேட்டுவிடக் கூடாது. அந்த அளவிற்கு நாங்கள் அனைவரும் மிரட்டி வைக்கப்பட்டோம்' என்று இராமானுஜம் என்ற இளைஞர் கூறினார்.

தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் தப்பித்த அந்தத் தொழிலாளர்கள் அனைவரும், கடந்த சில நாட்களாக உணவின்றியும், நடப்பதற்குக் கூட திராணியின்றியும் இருந்த நிலையிலும் கூட ஏறக்குறைய 18 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளனர். செல்லும் வழியில் பலர் மயக்கமுற்று விழுந்துள்ளனர். சக தொழிலாளர்கள் அவர்களை தூக்கிக் கொண்டு நடந்துள்ளதை அவர்கள் விவரிக்கும்போதே நமக்குப் புல்லரித்தது. சொந்த மண்ணை விட்டு, உடன் பிறந்த உறவுகளைப் பிரிந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி பணி நிமித்தம் சென்ற இந்தத் தொழிலாளர்களின் நிலை தற்போது மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. நகைகளை விற்று, கடன் வாங்கி பிழைக்கச் சென்ற இடத்தில் உண்பதற்குக் கூட வழியில்லாது திகைத்து நிற்கின்ற தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடுவண், மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன? 'பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக இரண்டு தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து வருகிறது. பல மாதங்கள் வேலை செய்ய வைத்து ஊதியம் கொடுக்காமல் இருப்பது, குண்டர்களைக் கொண்டு மிரட்டுவது, அடிப்பது, உதைப்பது என பல்வேறு கொடுமையான இன்னல்களுக்கு இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஆளாக்கப்படுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடரா வண்ணம் உணவகக் கடைகளை நடத்தும் முதலாளிகளுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்' என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் கூறினார்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதிக் கொண்டிருக்கும் தருவாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்த அறிக்கையின் காரணமாக தமிழக மற்றும் இந்திய அரசுகள் விரைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களோடு கலந்துரையாடல் நடத்தி அவர்களுக்கு உரிய தீர்வினைத் தரும் நடவடிக்கைகள் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரத்தால் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்று அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

இருந்தபோதும், தமிழகத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையில் சிறிதளவே தற்போது வெளித் தெரிந்துள்ளது. இன்னும் பல்வேறு சித்திரவதைகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் உயிரிழப்புகளும் மிகச் சாதாரணமாய் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களே மலேசியா போன்ற நாடுகளுக்கு பணி செய்ய அழைத்துச் செல்லப்படுகின்றனர். அம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

அது மட்டுமன்றி தற்போது அங்கு வாழும் தமிழகத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமாயின், இந்தியத் தூதரகத்தில் தமிழர் ஒருவர் பணியமர்த்தப்படுதல் மிகவும் அவசியம்.

இது எதிர்காலத்தில் நிகழும் எந்த ஒரு பிரச்சனையிலும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்! உண்ணாவிரதத்தை முடித்த அமீர் பேட்டி!!
» இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்கு பாரபட்சம்'
» இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
» வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்! – நமீதா
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum