தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் Empty மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Post  ishwarya Sat May 04, 2013 1:08 pm

ஈசனின் திகட்டாத திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு, தித்திப்பாய் நடைபெற்ற இடம் மதுரை. இருப்பினும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான். ஏனெனில் மதுரையில் நடப்பது மீனாட்சியின் அரசாட்சி. மீனைப் போன்ற கண்களை உடையவள் என்பது 'மீனாட்சி'யின் பொருள்.

மீன், தன் முட்டைகளை தன்னுடைய பார்வையால் அடைகாத்து, குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்புடையது. அதே போல் தன் அருட்பார்வையால் உலக உயிர்களைப் படைத்தும், காத்தும் திருவருள் புரியும் கண்களை உடைய அன்னையை மீனாட்சி என்று அழைக்கிறோம்.

கடம்ப வனத்தில் சிவலிங்கம்............

தனஞ்செயன் என்ற வணிகன், தன் வியாபாரத்திற்காக சென்றபோது கடம்ப வனமாக இருந்த பகு தியில் இளைப்பாறும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றும், அதன் அருகில் பொய்கை ஒன்றும் இருப்பதை கண்டான். சிவ பக்தனான அந்த வணிகன், ஈசனை வழிபட்டதுடன் இதுபற்றி, அந்த பகுதியை ஆண்டு வந்த குலசேகர பாண்டியனிடம் விவரம் தெரிவித்தான்.

பாண்டியன், வணிகனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்தார். பின்னர் பொய்கையை சுற்றி ஈசனுக்கு கோவில் கட்டினார். மேலும் மதில், அகழி ஆகியவற்றோடு கூடிய பெரிய நகரை அந்த கோவிலைச் சுற்றி நிர்மாணித்தார். தனது சடைமுடி மேல் மிளிரும் சந்திரனிடம் உள்ள மதுவைத் தெளித்து அந்த நகரை புனித மாக்கினார் சிவபெருமான். அதனால் இந்த ஊர் மதுரை என்று அழைக்கப்படலாயிற்று.

யாகத்தில் உதித்தவள்............

குலசேகர பாண்டியனுக்கு பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனுடைய மனைவி காஞ்சனமாலை. இவர்கள் குழந்தைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். மலையத்துவஜன் செய்த யாக குண்டத்தில் இருந்து, அம்பிகை, குழந்தையாக தோன்றினாள்.

அந்த குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மீனாட்சிக்கு உரிய வயது வந்ததும் மலையத்துவஜன், முடிசூட்டு விழாவை சிறப்பாக நடத்தினான். மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணையில் அமர்ந்து செங்கோல் செலுத்தினாள். மீனாட்சி கன்னியாக இருந்ததால், பாண்டிய நாடானது கன்னி நாடு என்றும் அழைக்கப்பட்டது.

மீனாட்சி திக் விஜயம் மேற்கொண்டு, எதிர்த்த மன்னர்களை எல்லாம் போரில் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் வந்தது. வெற்றியை மேலும் ருசிக்க எண்ணிய மீனாட்சி, அங்கிருந்து சென்றது கயிலை மலைக்கு.

தான் ஆட்சி செய்யும் மலைக்கு, தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை நோக்கினார் சிவபெருமான். நேருக்கு நேர் நோக்கிய சிவனின் பார்வை யால், அதுவரை வெளிப்படாத அன்னை மீனாட்சியின் பெண்மை வெளிப்பட்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிப் போய் அவளை நோக்கினார் ஈசன்; மண்ணை நோக்கினாள் அன்னை.

திருக்கல்யாணம்..........

அன்னை மீனாட்சியின் அழகில் சொக்கியதால், அவர் சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டார். எப்போதும் பித்தனாய், சுடுகாட்டில் அலைபவனாய், மண்டை ஓடுமாலை அணிந்தவனாய் விளங்கும் ஈசன், மீனாட்சிக்காக அன்று சுந்தரனாய் அழகில் ஜொலித்த காரணத்தால் சுந்தரேஸ்வரர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

மதுரைக்கு வந்து மணந்து கொள்வதாக மீனாட்சியிடம் உறுதி அளித்தார் ஈசன். அதன்படி திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மதுரையம்பதியை அன்னை மீனாட்சியே ஆட்சி செய்ய அருள்புரிந்தார் சிவபெருமான். திருமண விருந்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயார் செய்திருந்தார் அன்னை மீனாட்சி.

ஆனால் சிவ பெருமான் தரப்பில் வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அன்னை, 'திருமணத்திற்காக வெகு சிறப்பான உணவுகளை தயார் செய்திருந்தேன். உங்கள் பக்கம் இவ்வளவு குறைவாக ஆட்கள் இருக்கிறார்களே, உணவு அனைத்தும் வீணாகப்போகிறது!' என்று கூறினார். அந்த பேச்சில், தான் தயாரித்த உணவுகளை உண்ணும் அளவுக்கு கூட ஈசன் பக்கம் ஆட்கள் இல்லையே என்னும் வகையிலான ஏளனமும், தன் வீட்டை பற்றிய பெருமையும் கலந்திருந்தது.

வைகை தோன்றியது...........

அப்போது ஈசன், 'என்னில் வந்துள்ளவர்களில் குண்டோதரனுக்கு மட்டும் நீங்கள் உணவளித்து உபசரித்தால் போதும். நானும் என்னுடன் வந்தவர்களும் மகிழ்ச்சி அடைவோம்' என்று கூறினார். அதன்படி உணவு பரிமாறப்பட்டது. சமைத்து வைத்த அனைத்து உணவையும், குண்டோதரன் மட்டுமே உண்டு விட்டான்.

அப்படியும் அவன் பசி தீரவில்லை. 'எனக்கு இன்னும் உணவு வேண்டும்' என்று பசியில் கத்தினான். மேலும், உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தாகம் தீர தண்ணீர் கேட்டான். தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. மதுரை நகரில் இருந்த அனைத்து தண்ணீரையும் குடித்தும் அவனுக்கு தாகம் நிற்கவில்லை. பசியும் நீங்கவில்லை.

குண்டோதரனின் அரற்றல் அதிகமானதே தவிர குறையவில்லை. பரிதவித்து போனாள் மீனாட்சி. கடைசியில் ஈசனிடமே தன்னை காத்தருளும் படி வேண்டினாள் அன்னை. அவர் குண்டோதரனை அங்கிருந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று மணலில் 'வை கை' என்று கூறினார். குண்டோதரன் அந்த இடத்தில் கையை வைத்ததும், நதி ஒன்று பிரவாகம் எடுத்து ஓடியது.

அந்த நீரை அருந்தியதும் குண்டோதரனின் பசியும், தாகமும் முற்றிலும் தீர்ந்து போனது. அந்த நதியே வைகை என்று அழைக்கப்படும் நதியாகும். மதுரை மாப்பிள்ளையான சிவபெருமான், சுந்தரபாண் டியன் என்ற பெயருடன் மதுரையை ஆட்சி செய்வதில் அன்னை மீனாட்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

ஈசனுக்கும், அம்பிகைக்கும் முருகப்பெருமானின் அம்சமாக உக்கிரபாண்டியன் என்ற மகன் பிறந்தார். அவருக்கு பட்டம் சூட்டி விட்டு, அம்மையும் அப்பனும் கயிலாயமலைக்கு திரும்பினர்.

கோவில் அமைப்பு........

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வடக்கு வாசல் கோபுரம் வெகு காலம் வரை மொட்டை கோபுரமாக இருந்தது. இதனை நாட்டுக் கோட்டை நகரத்து வணிகர்கள் கோபுரமாக கட்டினார்கள். மொட்டைக் கோபுரத்தின் அடியில் பாண்டி முனி என்னும் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. சுருட்டு படையலே இவருக்கு பிரதானம்.

கிழக்கு கோபுரத்தின் அடியில் மதுரைவீரனுக்கு தனிச் சன்னதி உள்ளது. வடக்கு கோபுரத்தின் வடக்கு பகுதியில் தல மரமான கடம்ப மரம் உள்ளது. இந்த தல கீழ் திசையில் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி மண்டபம், முதலி மண்டபம் அமைந்துள்ளது.

கோவிலில் அர்த்த மண்டபத்தை கடந்ததும் கருவறையில் பச்சை வண்ணத்தில், மதுரை மீனாட்சி ஒரு கையை தொங்க விட்டபடியும், மற்றொரு கரத்தில் கிளியை தாங்கியபடியும் கிழக்கு நோக்கி நிற்கிறார். அந்த அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காது.

முக்குறுணி விநாயகர்................

அன்னையை வணங்கிய பின்னர் சுவாமி சன்னதிக்கு கிளிக்கூட்டு மண்டபம் வழியாக நடுக்கட்டுக் கோபுர வாசலை கடந்து செல்லும் போது நம்மை எதிர்நோக்கி அருள்பவர் முக்குறுணி விநாயகர். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் எட்டு அடி. விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்படும்.

விநாயகரை கடந்ததும் வரும் தூணில் ஆஞ்சநேயர் ஒரு புறமும், அவருக்கு நேர் வலபுறம் உள்ள தூணில் கர்ப்பிணி பெண்μக்கு பிரசவம் நடப்பது போன்ற சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பிள்ளைப்பேறு சிலைக்கு விளக்கெண்ணெய் பூசி வழிபட்டால் சுகப்பிரசவம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

அதற்கடுத்தாற் போல் இருப்பது சுந்தரேசர் சன்னதி. சுவாமியின் கருவறையை யானைகள் தாங்கி நிற்கின்றன. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியின் முன் மண்டபத்தின் இடது ஓரத்தில் வெள்ளியம்பலம் உள்ளது. நடராஜர் வெள்ளி சபை இது. இங்கு நடராஜர் கால் மாறி ஆடியிருப்பது சிறப்பாகும்.

பொற்றாமரைக் குளம்.......... மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இந்த குளத்தில்தான் தேவேந்திரனும், அவனுடைய வாகனமான ஐராவதமும் சாபம் நீங்கப்பெற்றனர். மேலும் இந்த குளத்தில் தான் சங்கப்பலகை தோன்றி திருக்குறள் அரங்கேறியது. குளத்தின் தெற்கு சுவரில் 1330 குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன.

பொற்றாமரைக் குளத்தில் ஸ்படிக சிவலிங்கம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளத்தின் தென்கரையின் மேற்புறத்தில் எப்பொழுதும் விபூதி அபிஷேகம் காணும் விபூதி விநாயகர் அருள்பாலித்து வருகிறார். குளத்தின் மேற்கு பக்கம் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.

விழாக்கள்............

மதுரையில் சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 8-ம் நாள் விழாவில் இரவு மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செங்கோல் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறும். வைரக்கிரீடம், மாணிக்கம், மரகதம் பதித்த செங்கோல் ஏந்தி மதுரை அரசி மீனாட்சி காட்சி தருவார்.

மறுநாளான 9-ம் நாள் மீனாட்சியின் திக்விஜயம் நடைபெறும். 10-ம் நாளில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். அன்று காலை முதல் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். தெய்வ திருமணத்தை முன்னிட்டு மஞ்சள், மஞ்சள் சரடு கொண்ட திருமாங்கல்ய பிரசாதம் பக்தர்களுக்கு கிடைக்கும். இந்த திருமணத்தில் கலந்துகொண்டால் திருமண தடைகள் அகலும், குழந்தை பாக்கியம் கிட்டும், தம்பதிகள் இணக்கமாவார்கள்.

திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்ற வகையில் மொய் எழுதுவார்கள். 11-ம் நாள் விழாவாக தேரோட்டம் நடை பெறும் சுவாமி பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருள்வார்கள். 12-ம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று சுவாமி -அம்பாள் தீர்த்தவாரி வைகை ஆற்றில் நடை பெறும்.

-சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum