தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் மாணவர் போராட்டத்திற்கு ஈழ மண்ணிலிருந்து நன்றி மடல்.

Go down

தமிழ் மாணவர் போராட்டத்திற்கு ஈழ மண்ணிலிருந்து நன்றி மடல். Empty தமிழ் மாணவர் போராட்டத்திற்கு ஈழ மண்ணிலிருந்து நன்றி மடல்.

Post  ishwarya Thu May 02, 2013 11:59 am

ஈழத்தமிழ் உறவுகளுக்காக தமிழகத்திலிருந்து கட்சி சாராமல் அரசியல் கலப்பின்றி தமிழரின் உணர்வின் குரலாய், உணர்வின் வெளிப்பாடாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிக்கிளம்பிய ஆதரவுக்குரல் ஒரு கோடிக்கு மேற்பட்ட மாணவர் குரலாய் ஒலித்து இந்திய அரசாங்கத்தை மட்டுமின்றி முழு உலகையே ஒரு உலக்கு உலுக்கிவிட்டது. சர்வதேசத்தையே ஒருகணம் ஈழமண்ணின் அவலத்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த தமிழக மாணவர்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் சார்பாக நன்றியுடன் கூடிய வணக்கத்தை தெரிவித்துகொள்ள முதற்கண் கடமைப்பட்டுள்ளோம்.

ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை கண்டு சகிக்க முடியாமல் தமது உயிரை துச்சமாக மதித்து தீக்குளிக்க துணிந்தவர்களுக்கு இனிமேல் அவ்வாறான காரியங்களில் ஈடுபட்டு தங்களது பெறுமதி மிக்க உயிர்களை இழக்க வேண்டாம் என மன்றாட்டாக கேட்டுக்கொள்வதுடன், இத்துணிகரமான காரியங்களில் ஈடுபட்டு தீக்குளித்து மரணத்தை தழுவி வீரகாவியம் படைத்த மறத்தமிழர்களுக்கு எமது இதய பூர்வமான அஞ்சலியினை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் பெறுமதியான உயிர்களை ஈழத்தமிழருக்கான ஆதரவு போராட்டத்தில் பறிகொடுத்து துயருற்றுள்ள தமிழக தாய் தந்தையருக்கும், குடுப்ப உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த மனவேதனையுடன் கூடிய இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஈழத்தமிழ் உறவுகளுக்காய் தமது உயிரையும் துச்சமென மதித்து சாகும்வரையான உண்ணாவிரதம் நிகழ்த்திய தமிழக மாணவச் செல்வங்களின் உணர்வுகளுக்கு நாம் தலைவணங்குகிறோம். தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்று அரசியல் வசனம் பேசி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் கதிரைகளை இறுக்கப்பற்றியிருந்த சுயநல அரசியல் வாதிகளின் இருப்பையே இந்த மாணவர்களின் போராட்டம் ஆட்டங்காண வைத்த நிகழ்வானது சங்க காலம் தொடங்கிய தமிழகத்தினரதும், ஈழத்தமிழரினதும் வரலாற்று உறவில் பதிவு பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. ஜெனிவா தீர்மானத்தில் இந்திய அரசின் தடுமாற்றமான நிலைப்பாட்டை மாற்றி ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கச் செய்த பெருமை எமது தமிழக தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமே உரியது. இனி தாய்த் தமிழகத்தில் சுயநல அரசியல் வாதிகளுக்கு இடமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

தமிழ் மக்கள் நன்கு விழிப்படைந்துவிட்டனர். இனி எம் தாய்த் தமிழ்நாட்டை தமிழ் உணர்வின் பக்கமிருந்து வேறு திசைக்கு எவராலும் மாற்றுவது கடினம். இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்றும், உறவுகளை இழந்தும் பல்வேறு துயரச்சுமைகளுடன் வாழும் ஈழத்தமிழ் உறவுகளிடமிருந்து ஒரு சிறிய, தயவான வேண்டுகோளை முன்வைக்க போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினராகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

1. யுத்தத்தால் அங்கவீனமுற்று, கண்களை இழந்து, காலை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் எறிகணைகளினதும், துப்பாக்கி ரவைகளினதும் வடுக்களை தாங்கி தமது அன்றாட கடமைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் துயருற்றுக்கொண்டுள்ள எமது மக்களுக்கு சில உதவிகள் உங்களிடமிருந்து கிடைக்கும் என நம்புகின்றோம்.

2. இதே போல் இந்த யுத்தத்தால் தமது கணவனை இழந்த 90,000ற்கு மேற்பட்ட விதவைப்பெண்கள் எவ்விதமான தொழில் வாய்ப்புமின்றி அல்லற்படுகின்றானர். எதிர்வரும் சித்திரை புத்தாண்டில் நல்ல உணவுகளை சமைத்து பிள்ளைகளுடன் சாப்பிடவும், நல்ல உடைகளை உடுத்தி பிள்ளைகளை மகிழ்விக்கவும் உங்களிடமிருந்து உதவிகள் கிடைத்தால் இந்த விதவை தாய்மார்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள்.

3. தமது பெற்றோரில் ஒருவரை இழந்து தவிக்கும் பெண் பிள்ளைகளும், இருவரையும் இழந்து அனாதைகளாக்கப்பட்ட எமது சின்னஞ்சிறார்களும் வெளியாட்களின் உதவிகளுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்த காலப்பகுதியிலிருந்து அவர்களது வாழ்க்கை மட்டுமல்ல அவர்களது கல்வியும் இருண்ட யுகத்தை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

4. யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட வறுமை சூழ்நிலை காரணமாக தமது திருமண வயதை தாண்டிய பிறகும் குடும்ப வாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்தி வாழ இயலாத பெண் பிள்ளைகளையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

5. இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் கூட கல்விதான் எங்களுக்கு மூலதனம் என்ற குறிக்கோளில் நாம் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது என்று மனச்சோர்வு அடையாமல் படித்து தமது ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்து, உயர்கல்விக்காக செலவளிக்க முடியாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழை மாணவர்கள் எம்மத்தியல் நிறைய உள்ளனர்.

இங்கு நான் உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். கிளிநொச்சியை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வறிய மாணவி ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் அன்பர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மாதாந்த உதவித்தொகை மூலம் தனது கல்வியை தொடர்ந்து இவ்வாண்டு சிறப்பு தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். தனக்கு உதவி செய்தவரைப்பற்றி கூறும் போது அந்த மாணவியின் கண்கள் குளமாகிவிட்டன.

எம்மை எல்லோரும் துன்புறுத்திவிட்டார்கள். அழுது அழுது கண்கள் வறண்டுவிட்டன. இப்போது நாங்கள் யார் அடித்தாலும் அழுவதில்லை. இனி அழுவதில் பயனும் இல்லை. எமக்கு இனி கண்ணீர் என்று வந்தால் முன்பு கூறிய மாணவியின் கண்ணீர் போல அது ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கவேண்டும். இந்த நிலையை தாய்த்தமிழக உறவுகளால் தான் ஏற்படுத்த முடியும். அதை நீங்கள் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு நிறைய உள்ளது.

தமிழக உறவுகளாகிய தாங்கள் போரால் பாதிக்கப்பட்ட எமது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதேனும் பொருளுதவி செய்ய விரும்பினால் உங்களது உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்றடைவதற்கு நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். உங்கள் குழுவினர் அதற்காக எமது மக்களை வந்து சந்திப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்து தருவதுடன், உங்கள் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கவும் வழியேற்படுத்தி தருவோம் எம்மை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பரினால் 0094-779273042, 0094-773713000 என்ற தொலைபேசியூடாக அல்லது

pacca.srilanka@gmail.com என்ற மின்னஞசல் முகவரியூடாகவும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

தங்கள் மேலான ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியையும் வணக்கத்தையும் கூறி எனது மடலை நிறைவு செய்கின்றேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum