தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

Go down

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் Empty திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 3:25 pm

தமிழ்நாட்டிலேயே மிகப்பழமையானதாக கருதப்படும், சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் மனம் உருகி வழிபட்டால், நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 1,300 ஆண்டு பழமைவாய்ந்தது தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்களில், சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றுவிளங்குகிறது.

ஏறக்குறைய 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலின் மீது, தேவாரம் பாடிய நால்வரில் சம்பந்தரும், நாவுக்கரசரும் மூன்று பதிகங்களில் முப்பத்திரண்டு பாடல்கள் பாடியுள்ளனர். பெரிய புராணத்தில் 7 பாடல்கள் இந்த கோவிலின் சிறப்புகளை விளக்குகிறது. அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் மற்றும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த சமயப்பெரியோர்கள் பலர் மருந்தீஸ்வரர் மகிமை பற்றி பாடியுள்ளனர்.

சுயம்புமூர்த்தி........... மூலஸ்தானத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இறைவனின் திருமேனியில் காமதேனுவின் கால்குளம்பு பட்டு சிரசில் வடு காணப்படுகிறது. காமதேனு பால் சொரிந்ததால், இறைவன் திருமேனி பால் நிறத்தில் வென்மையாக இருப்பதால், பால்வண்ணநாதர் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு.

எல்லா திருத்தலங்களும் வழிபாட்டுக்கு உகந்தபோதிலும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே நிறைந்திருந்தால், அந்த தலம் மிகச்சிறப்பு வாய்ந்த திருத்தலம் என்று கூறுவார்கள். இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கே பெற்று சிறப்புக்குரிய பிரார்த்தனை தலமாக மருந்தீஸ்வரர் கோவில் விளங்குகிறது.

மருந்தீஸ்வரர்........... பூமியை சமன் செய்ய வேண்டி, தென்திசை நோக்கி வருகை தந்த அகத்தியருக்கு, வயிற்றுவலி எடுக்க, அவர் இறைவனை நினைத்தவுடன் இறைவன் உமையம்மையோடு காட்சியளித்து, மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியர் நலம் பெற்றார். அதனால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் 'மருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார் என்பது வரலாறு.

நோய் நீங்கி.......... அந்தக்காலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு விரதம் மேற்கொண்டு நோய் நீங்கி நலத்துடன் திரும்பியதாக சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையின்பேரில், இப்போதும் இந்த கோவிலில் பிரார்த்தித்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, உடல்நலம் மட்டுமின்றி உள்ள நலமும் பெற்றுவருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்றளவும் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில், 9-ந்தேதி (சனிக்கிழமை) வரக்கூடிய பிரதோஷம் 'சனிப்பிரதோஷம்' என்ற சிறப்பு பெற்றுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மகா சிவராத்திரி, பிரம்மோற்சவம்.......... பிரம்மாவே திருக்கோவில் மாடவீதி, மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரகங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் செய்து இறைவனை வழிபட்டார் என்று தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி ஆகியவை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.

அந்த வகையில் 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 10 மணி, இரவு 12 மணி, நள்ளிரவு 2 மணி என 4 கால பூஜைகளுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சிவன் ராத்திரியைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, 16-ந்தேதி தொடங்குகிறது.

பூத்துக்குலுங்கும் நந்தவனம்.......... கோவிலுக்கு முன்புறத்தில், கிழக்கு கடற்கரைசாலையில், ஏறக்குறைய ஒரு ஏக்கரில் நந்தவனம் அமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. நந்தவனத்தின் நடுவில், மிகப்பெரிய தாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தவனத்தில், கொடிமல்லி, நந்தியாவட்டை, செண்பகம், அரளி என அன்றாடம் பூஜைக்குரிய மலர்களுடன் பூத்துக்குலுங்குவதை கண்டு பக்தர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

ஸ்தல விருட்சம்........... கோவிலின் ஸ்தல விருட்சமாக வன்னிமரம் அமைந்துள்ளது. வன்னிமரத்தின் அடியில்தான் அகத்தியருக்கு, சுவாமி திருமணக்காட்சியருளினார் என்றும், வால்மீகி முனிவர் வன்னி மரத்தடியில்தான் சுயம்புலிங்கத்தை கண்டெடுத்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இத்தகைய புனிதம் நிறைந்த வன்னிமரம், மருந்தீஸ்வரர் கோவிலில், இன்றளவும் கோவிலின் உள்பிரகாரத்தில், வடமேற்கு மூலையில், வன்னிமரம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோசாலை........... கோவிலின் உள்பிரகாரத்தில், 12 பசுக்களுடன் கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் இந்த பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலைக்கொண்டு சுவாமிக்கு அன்றாடம் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. பசுக்களை பராமரிப்பதற்காக, கோசாலையில் ஏராளமான மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.9 கோடியில் திருமண மண்டபம்..... நந்தவனத்தை அடுத்து, மிகப்பிரமாண்டமான வகையில் திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் இதன் மொத்த மதிப்பீடு 9 கோடியே 23 லட்சம் ரூபாய் ஆகும். ஏறக்குறைய 26 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மருந்தீஸ்வரர் கோவிலில் ஆகமவிதிப்படி தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அன்றாடம் உச்சிகால பூஜைக்குப்பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடை, பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவிலின் உள்பகுதியில், பக்தர்கள் பலன்பெறும் வகையில் ஆன்மிக புத்தகங்கள் அடங்கிய மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் சமயச்சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை இணை ஆணையரும், கோவிலின் தக்காருமான த.காவேரி, மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் தெரிவித்தனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum